ஞாயிறு, மே 26, 2013

உள்ளம் உருகுதையா!...

"அழகென்ற சொல்லுக்கு முருகா!..." 

அதிகாலை வேளையில் கணீர் என்று  ஒலிக்கும் ஈடு இணை இல்லாத பாடல். கேட்கும் போதே பக்தி வெள்ளத்தில் நம்மை ஆழ்த்தும் குரல்.


அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் -   - இன்று நம்மிடையே இல்லை.

மண்னுலக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற திரு.T.M.சௌந்தரராஜன் அவர்கள்  - விண்ணுலக வாழ்வினை எய்தி விட்டார்.

"முத்தைத்தரு பத்தித் திருநகை.." என முதல் அடி எடுத்த அருணகிரி நாதரின் திருப்புகழ் - அதற்கு முன் சாதாரண மக்களில் எத்தனை பேருக்குத் தெரியும்!... 

"உள்ளம் உருகுதையா.." என முருகன் மேல் பக்தி கொள்ள வைத்ததே இவருடைய குரல் தான் என்றால் அது மிகை ஆகாது. 

அது மட்டுமா!... அன்பும் பாசமும் தேசபக்தியும்  கூட - இவருடைய குரலின் வழியே அறியப்பட்டன.

இவரே சிவாஜிகணேசன்... இவரே எம்.ஜி.ஆர்....  யார் பாடுகிறார்கள்.. யார் நடிக்கிறார்கள்... என்று பிரித்தறிய முடியாத குரல் வளம். 

நடிகர்களின் குரலாகவே மாறிவிடும் தனித்தன்மை வாய்ந்தது இவருடைய வெங்கலக்குரல். ஒவ்வொரு பாடல்களும் முத்துக்கள்.  


தமிழை உச்சரித்துப் பாடுவதில்  இவருக்கு இணை இவர்தான். ஆண்மையான குரல் வளம்!.. இவருடைய குரல் வளத்திற்கும் இவர் இசை உலகில் செய்த சாதனைக்கும் - கிடைத்த அங்கீகாரம் போதுமான அளவு இல்லை என்றே கூற வேண்டும். தமிழ் திரை உலகு  தன்னை சரியாகப் போற்றவில்லை என்கிற வருத்தம் கூட மனதில் இருந்ததுண்டு. 

பெருந்திறமையாளர்கள் இருக்கும் போது அவர்தம் அருமை யார்க்கும்  புரிவதில்லை. இதற்கு இவர் மட்டும் விதிவிலக்கா?.. இனி இவர் போல யார் என்று ஊர் சொல்லும்!..

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை - என நாம் ஆறுதல் அடைவோம்!..

பூத உடல் மறையலாம். அவருடைய புகழ் என்றென்றும் மறையாது.  

தென் பொதிகைத் தென்றலாய் என்றென்றும் இவர் பாடிய பாடல்கள் நம் இதயங்களை வருடிக் கொண்டே இருக்கும். இவரும் எந்நாளும் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இன்னொருவர்  இவரைப் போல  இனி பிறக்கப் போவதில்லை. அவரது கணீரென்ற குரல் நம் மனங்களிலிருந்து என்றுமே விலகாது.... 


கவியரசர் கண்ணதாசன் இயற்றிய கிருஷ்ண கானத்தில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.." என்று இவரது குரல் வழிப்பிறந்த  பாடல் மாணிக்கப் பதக்கம் போன்றது!.

 "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!...
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" 

- என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள் T.M.சௌந்தரராஜன் அவர்களுக்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

தொண்ணூறு வயதினைக் கடந்து  பெருவாழ்வு வாழ்ந்தவர். 

முருகன் திருக்கோயில்களில் வைகாசிப் பெருவிழா வைபவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் - 

முருக பக்தர்கள் தம் மனங்கள் அதிரக் கூடாது என்று விசாகம் நிறைந்த மறுதினம் - 

"எனக்கும் இடம் உண்டு.. 
அருள் மணக்கும் முருகன் 
மலரடி நிழலில் 
எனக்கும் இடம் உண்டு.. "

- என்று முருகன் திருவடி நிழலில் பேரமைதி கொள்ளச் சென்று விட்டார். 

தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொணர்வதற்காக கிளியாக வடிவெடுத்த அருணகிரி நாதர் இறுதியில் கிளி வடிவத்துடனே முருகனிடம் அடைக்கலம் ஆவதாக - இவர் நடித்த "அருணகிரிநாதர்" திரைப்படம் நிறைவடையும். 

நம்மில் பலரை முருக பக்தர்களாக்கிய இவரும் அவ்வண்ணமே நிலை பெற எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருவருள் புரிவாராக!

இனி - திருச்செந்தூரின் காற்றோடும் கடல் அலைகளோடும் கலந்திருப்பார்.

காலத்தை வென்ற திரை இசைப்பாடல்களின் மூலம் திரு.T.M.சௌந்தரராஜன் அவர்கள்  புகழுடம்பாக நம்மிடையே - வாழ்ந்து கொண்டே இருப்பார்.

ஐயா! உங்கள் குரல் வழியே -

''அழகென்ற சொல்லுக்கு முருகா!..'' என பக்தி பிறந்தது.
''மலர்களைப்போல தங்கை உறங்குகின்றாள்!..''  என பாசம் பிறந்தது. 
''நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!..'' என அன்பு பிறந்தது. ''சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!..'' என அறிவு பிறந்தது 
''அச்சம் என்பது மடமையடா!..'' என வீரம் பிறந்தது.
''நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது!..'' என தேசபக்தியும் பிறந்தது.

இன்று தாங்கள் எம்முடன் இல்லை.. விழிகளில் கண்ணீர் நிறைந்தது.

தங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். 

இறை உள்ளளவும் இசை உள்ளளவும் 
தமிழ் உள்ளளவும் தமிழர் உள்ளளவும் 
உங்கள் திருப்பெயர் நிலைத்து இருக்கும்!...

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..