வெள்ளி, டிசம்பர் 21, 2012

திருப்பாவை - 06


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம்  - 06 

thanjavur14
புள்ளரையன் திருக்கோயில்
புள்ளும் சிலம்பின காண்! புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் கால் ஓச்சி,
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, ''அரி'' என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்தேலோர் எம்பாவாய்!  

தஞ்சாவூர்14
புள்ளும் சிலம்பின காண்
எம் தோழி!... எழுந்திரு!...பறவையினங்களும் எழுந்தன.. பூபாளத்தில் சிலு சிலு என சப்தமிட்டுக் கொண்டு அவை அங்கும் இங்கும் பறந்து திரிவதை காண்!..

தஞ்சாவூர்14
கருட வாகனன்
பறவைகளுக்கு அரசனாகிய கருடனை வாகனமாகக் கொண்ட நம் பெருமானின் ஆலயத்தில் - அதிகாலையில் - அன்பருக்கும் அடியவர்க்கும் சுக நாதமாக முழங்கும் வெண்சங்கின் பேரொலியினை நீ கேட்டிலையோ?... 

சிறு பிள்ளையினைப் போல் இன்னும் உறங்குபவளே! எழுந்திரு!...

கம்சனின் ஆணையினால் மாயப் பெண்ணாகி வந்த பூதனையின் வஞ்சனை மார்பில் சுரந்த நஞ்சினை கமலப்பூ இதழ்களால் உறிஞ்சி, அவளுடைய உயிரைக் குடித்தவனும், 

வண்டிச் சக்கரமாய் வந்த கள்ளச் சகடாசுரனை சின்னஞ்சிறு திருவடியால் சிதற அடித்தவனும் ஆகிய எம்பெருமானை,

வெள்ளமென ஆர்ப்பரிக்கும் பாற்கடலுள் -  பாம்பணையில் - துயிலாமல் துயில் அமர்ந்த அழகனை அமுதனை ஆதிமூல வித்தினை,

ஹரி ஓம்
பெருந் தவத்தினராகிய முனிவர்களும் யோகியர்களும் விடியும் முன்னரே எழுந்து, மெள்ள உள்ளத்துள் வைத்து, உயிர் உருக உச்சரித்து, உலகம் உய்யும் வண்ணம்  ''ஹரி ஹரி''  என்னும் திருநாமம் கொண்டு ஓதுகின்றனரே!...

அந்த வேதப்பேரொலி எங்கள் உள்ளத்தினுள் நுழைந்து உயிரைக் குளிர்விக்கின்றதே!..

அடியார்க்கு நலம் எல்லாம் அருளும் ''ஹரி ஹரி என்னும் திருநாமம்'' உன்னைக் குளிர வைக்கவில்லையா?.... பாவாய்!...எழுந்து வா!...
***

2 கருத்துகள்:

  1. ஜி இதன் தொடக்கப்பகுதி குழறுபடியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இதெல்லாம் பழைய பதிவுகள்..

      சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் மீண்டும் வெளியாகி இருக்கின்றன..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..