வியாழன், டிசம்பர் 20, 2012

திருப்பாவை - 05


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 05

கிருஷ்ணன் யசோதா
வடமதுரை மைந்தன்
மாயனை, மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோர் எம் பாவாய்!...

அற்புதங்கள் பலவற்றினை நிகழ்த்திய மாயன். பெருமைகள் பலவும் பல்கிப் பெருகும் வட மதுரை எனும் திரு நகரின் மைந்தன்.  

தூய்மையான பளிங்கு போன்று தெளிந்த நீருடன், பழஞ்சிறப்புகளும் பொங்கிப்  பெருகி - பொலியும் புனிதமான யமுனை நதிக் கரைக்கு அதிபன்.   

ஆயர் குலத்தின் பெருமைகள் பூரித்துப் பிரகாசிக்கும்படி அணி விளக்கெனத் தோன்றிய அழகன். 

''இந்தப் பிள்ளையைப் பெற என்ன தவம் செய்தனை யசோதா '' என்று உற்றாரும் மற்றோரும் புகழ்ந்து பேசும்படிக்கு - தாயின் பெயரை தரணியெல்லாம் விளங்கச் செய்த தாமோதரன். 

கிருஷ்ணன் - யசோதா
ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு
யசோதையின் மணிவயிற்றினுள் கர்ப்பக்கொடியினால் கண்ணன் கட்டப்பட்டுக் கிடந்தானில்லை. அதை அறிந்தோ அறியாமலோ யசோதை தன் திருக்கரத்தினால் கயிறெடுத்து - உரலுடன் கட்டி வைத்தாள்.

அண்ட சராசரங்களைக் கட்டிக் காக்கும் பரந்தாமன், தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு உரலுடன் - தானே கட்டுண்டு கிடந்தான் எனில், அன்று யசோதையின் உதிரத்தினுள் கர்ப்பக்கொடியினால் கட்டுண்டு கிடக்க வில்லை.எனவே அந்தக் குறை தீர வேண்டி, 

இன்று உலகுரை மெய்ப்பட வேண்டி தாம்புக் கயிற்றினால் கட்டுண்டு உரலுடன் கிடந்தான் என்பது தலைமேற்கொள்வது.

இப்படிப்பட்ட தாமோதரனை - 

அகந்தூய்மை, புறந்தூய்மை உடையோராய் தூயமலர்களைத் தூவித் தொழுவோம்.  அவனுடைய திருப்புகழினை வாயாரப் பாடுவோம், அவனுடைய திருமேனி அழகினை நம் மனத்தினுள் அல்லும் பகலும் சிந்தித்து வந்திப்போம். 

கிருஷ்ணன் ராதாராணி
தூமலர் தூவித் தொழுது வாயாரப் பாடி
இதனால் என்ன ஆகும் தெரியுமா!...என் தோழி...

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் என்கிறபடி - நம்முடைய பிழைகள் எல்லாம் - ஆம் - எல்லாப் பிழைகளும் தீயில் விழுந்த தூசு போலப் பொசுங்கிப் போகும்...எனவே,

வாராய்... என் பாவாய்!... அவனை வணங்கிக் கொள்வோம்!..
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..