சனி, ஏப்ரல் 12, 2025

செங்கண் மால்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 29
சனிக்கிழமை


செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் 
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற 
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே ஊன்றி
அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி 
வலம்புரமே புக்கு அங்கே மன்னி னாரே..6/58/10
-; திருநாவுக்கரசர் :-


சிவந்த கண்களை  உடைய
திருமால் ராமன் என்றாகி - வில்லை ஏந்தி வானர சேனையோடு, கடலில் அணை கட்டி இலங்கையைச் சென்றடைந்து , இராவணனுடன் போர் செய்து , தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்ரீவன், வீபீஷணன் ஆகியோர் உதவியுடன்  வென்றழித்தார்.. 

அத்தகைய
இராவணன் கயிலாய மலையைப் பெயர்த்த போது
அவனுடைய  பத்து மகுடங்களும் பொடிப் பொடியாய் விழுமாறு, தனது கால் விரல்களில் ஒன்றைச் சிறிது ஊன்றி, அவனை மண்ணில் அழுத்தி - பின் அவனுக்கே நல்லருளும் செய்தவர் சிவபெருமான்..


அப்பெருமான், இன்று கப்பல்கள் நிறைந்த கடலின் அருகிருக்கின்ற, மாடவீதிகளை உடைய வலம்புரத்தை  அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கி விட்டார்..
 நன்றி
பன்னிரு திருமுறை

ஸ்ரீராம ராம
ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஏப்ரல் 11, 2025

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 28   
வெள்ளிக்கிழமை

பங்குனி உத்திரம்


திருப்புகழ்
சுவாமிமலை

தனதன தனதன ... தனதான
     தனதன தனதன ... தனதான

நிறைமதி முகமெனு ... மொளியாலே
     நெறிவிழி கணையெனு ... நிகராலே

உறவுகொள் மடவர்க ... ளுறவாமோ
     உனதிரு வடியினி ... யருள்வாயே..

மறைபயி லரிதிரு ... மருகோனே
     மருவல ரசுரர்கள் ... குலகாலா

குறமகள் தனைமண ... மருள்வோனே
     குருமலை மருவிய ... பெருமாளே..
அருணகிரிநாதர்


முழு நிலவு போன்ற முகத்தின்
 பிரகாசத்தாலும்,
  அம்புகளை ஒத்த  விழிகளாலும்,

அன்பு கொள்கின்ற பெண்களின் உறவு
 உறவு ஆகுமோ? (ஆகாது)

 உன்னிரு திருவடிகளை இனியாகிலும்
 தந்தருள்வாயாக.

வேதங்களில் சொல்லப்படுகின்ற
ஹரி பரந்தாமனின்  மருமகனே,

 பகைவர்களாகி நின்ற அசுரர்
 குலத்தை அழித்த காலனே,

 குற வள்ளியை மணம் செய்து கொண்டவனே,

 குருமலையாகிய   சுவாமி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே..

முருகா
முருகா


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்..

ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஏப்ரல் 10, 2025

திருமழபாடி 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 27
வியாழக்கிழமை

கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் கோயிலின் எதிரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சி மனதை உருக்கியது..

ஊர் மக்கள் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கியும் கல்யாண விருந்து அளித்தும் சிவத் தொண்டு புரிந்து கொண்டிருந்தனர்..

மாலையில் திருக்கல்யாண வைபவ விழா  தொடங்கி - இரவு எட்டரை மணியளவில் எம்பெருமான் ஸ்ரீ நந்தீசனுக்கும் வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான
சுயம்பிரகாஷிணி தேவிக்கும் திருக் கல்யாணம் இனிதே நடை பெற்றது.. 

நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்..

அன்றிரவு,
கோயிலின் எதிரில் தூங்கி விட்டு பொழுது விடிந்ததும் இல்லத்திற்குத் திரும்பினோம்..
















கலையி னான்மறை
  யான்கதி யாகிய
மலையி னான்மரு
  வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர்
  திருமழ பாடியைத்
தலையி னால்வணங்
  கத்தவ மாகுமே..3/48/4
திருஞானசம்பந்தர் 

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே.. 6/39/7
திருநாவுக்கரசர்

கண்ணாய் ஏழுலகுங்
  கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன் தமிழாய்ப்
  பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
  மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
  இனியாரை நினைக்கேனே.. 7/24/5
சுந்தரர்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஏப்ரல் 09, 2025

திருமழபாடி 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 26
புதன் கிழமை

கடந்த ஞாயிறன்று விடியற்காலையில் எழுந்திருந்தும் - தாமதம் ஆகி விட்டதோ என்ற அச்சத்தினால் குளித்து முடித்து விட்டு பாரம்பரிய வழித்தடத்தில் செல்லாமல் நானும் என் மகனும் மேலும் சிறிது தாமதத்துடன் திருமானூர் வழியாக திருமழபாடி கொள்ளிடப் பேராற்றின் கரைக்கு வந்து சேர்ந்தபோது முற்பகல் 10:30...

திரு ஐயாற்றில் இருந்து
பல்லக்குகள் வருவதில் தாமதம்..

பல்லக்குகள் ஒவ்வொரு ஊரிலும் நின்று மாலை மரியாதையை ஏற்றுக் கொண்டு  வருவதால் தாமதம் ஆகின்றது என்றார்கள்... 

ஒருவழியாக 11: 30 மணியளவில் வைத்யநாதன் பேட்டை மண்டகப்படி மரியாதைகளை ஏற்றுக் கொண்டு மாப்பிள்ளை நந்தீசன் குதிரை வாகனத்தில் ஆற்றைக் கடந்து 
திருமழபாடி 
மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தார்... 

நடுப்பகல் 12:00 மணியளவில் ஸ்ரீ ஐயாறப்பர் பல்லக்கு பேராற்றைக் கடந்து வந்தது..

திருமழபாடி ஸ்ரீ வைத்திய நாதர் சுந்தராம்பிகையுடன் எதிர் கொண்டார்.. 

12:15 மணியளவில்  கொள்ளிடப் பேராற்றில் எதிர்சேவையும் தீப ஆராதனையும் நடைபெற்றது..


திருச்சுற்று வீதியில் வீட்டுக்கு வீடு வாசலில் மாவிலை தோரணங்களுடன் வாழை மரம் கட்டப்பட்டிருக்க  பல்லக்குகள் வெகு சிறப்பாக வரவேற்கப்பட்டன..

நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...





வைக்கோல் நடைபாதை



மாப்பிள்ளை வருகின்றார்






சுவாமி அம்பாள்


ஸ்ரீ வைத்யநாதர் வரவேற்பு 















ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**