வெள்ளி, அக்டோபர் 11, 2024

ஸ்ரீ சரஸ்வதி வாழி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 25
வெள்ளிக்கிழமை
சரஸ்வதி பூஜை

அனைவருக்கும் 
சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துகள்
-::-

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்  அருளிச்செய்த சரஸ்வதி அந்தாதியின்  முதல் ஐந்து திருப்பாடல்கள்..
 

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை –தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்
கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி.

நூல்
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்
தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1

வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்
சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்
உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2

உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை
வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3

இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு
முயலாமையால் தடுமாறுகின்றேன் இந்தமூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலாவிடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4

அருக்கோதயத்தினும் சந்திரோதயமொத்து அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப்பாவை திசைமுகத்தான்
இருக்கோது நாதனும் தானுமெப்போதும் இனிதிருக்கும்
மருக்கோல நாண்மலராள் என்னையாளும் மடமயிலே. .. 5
-::-
ஓம் சரஸ்வத்யை நமோ நம:


ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ  சகல கலாவல்லி மாலை முதல் ஐந்து திருப்பாடல்கள்

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே 1

நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே.. 2

அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே.. 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்
வட நூற்கடலும்
தேக்கும் செந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.. 4

பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்து இருந்தாய்
சகல கலாவல்லியே 5
-::-
ஓம் கலைமகள் திருவடிகள் போற்றி போற்றி..


ஸ்ரீ மகாகவி இயற்றிய
திருப்பாடல்
 
வெள்ளைக் கமலத்திலே - அவள்
 வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசை தான் - நன்கு
 கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
 கண்டதொர் பூந்தமிழ்க் கவி சொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
 பேணவந்தாள் அருள் பூணவந்தாள்..
**
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். 

    கொடுத்திருக்கும் பாடல்களில் பாரதியார் பாடல் மட்டுமே பரிச்சயம்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. சகலகலாவல்லி மாலையை மறந்து விட்டேனே... அதுவும் பரிச்சயம். முன்பு எங்களை அப்பா தினசரி சொல்லச் செய்வார்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. சகலகலாவல்லி பாடல்பாடி வணங்கினோம். பாடசாலை நாட்களில் நவராத்திரி காலம் பாடுவோம்.

    அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். சகலகலாவல்லி பாடல்கள் அனைத்தும் அருமை.

    நேற்று வர இயலவில்லை. மன்னிக்கவும். எந்நாளும் சரஸ்வதி தேவி நம்முடன் இருக்க பிரார்த்தனைகள் செய்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. சரஸ்வதி பூஜை பதிவு அருமை. பகிர்ந்த பாடல்களில் சகலகலாவல்லி மாலை அடிக்கடி பாடும் பாடல்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..