செவ்வாய், அக்டோபர் 15, 2024

மிளகாய் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 29
செவ்வாய்க்கிழமை


போர்ச்சுகல் நாட்டின் அரசவையில் புதிதாக உலர் கனி  அறிமுகம் செய்யப்பட்டது.. 

செந்நிறத்தில் இருந்த அவை - 
சிறு பேழை ஒன்றில் அழகுடன்  வைக்கப் பட்டிருந்தன..

அறிமுகம் செய்தவன் அந்நாட்டின்  தலை சிறந்த மாலுமி..

அவன் பெயர் -  கொலம்பஸ்..

அவன் கொண்டு வந்து கொடுத்த - அது முற்றிலும் வறண்டதாக எரிச்சல் ஊட்டும் நெடியுடன் இருந்தது.. 

அதன் நெடி எவருக்கும் பிடிக்க வில்லை...

இருந்தாலும்
வாய் திறந்து ஏதும்  சொல்வதற்கு எவருக்கும் துணிவு இல்லை.. ஏனெனில் அவரவர் தலை அவரவர்க்கு முக்கியம்..

அங்கிருந்த
அனைவரும் அது வைக்கப்பட்டிருந்த் பேழையைக் கையில் வாங்கிப்  பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர்..

புளகாங்கிதம் அடைந்ததாகக் காட்டிக் கொண்டனர்..

மன்னருக்கு மிகவும் நெருக்கமான கடலோடி கொண்டு வந்ததாயிற்றே!..

உலர்ந்து இருந்த அதனை -  அதன்
விவரம் அறியாமல் கவர்ச்சியில் மயங்கி வாயில் இட்டு கடித்து விட்டான் மன்னன்..

அவ்வளவு தான்.. 

கையில் மீதமிருந்த 
கனிகளைத் தூக்கி எறிந்தான்..
மன்னனின் கண்ணிலும் மூக்கிலும் நீர்.. உதட்டில் இருந்து கீழ் வழி வரை அக்னியாய் எரிச்சல்..  சிவந்திருந்த அவன் முகம் மேலும் சிவந்து கோரமாக இருந்தது..

கத்தினான்.. கதறினான்..
கடுப்பானான்... 

அதைக் கொண்டு வந்து கொடுத்த -  கொலம்பஸை நோக்கி 'சில்லி..' என்று அலறினான்..

நேருக்கு நேர் வசை பாடி அரசவையில் இருந்து விரட்டி விட்டான்..

அப்போதைய கடும் வசவுகளில் ஒன்று Chilly.. அதிலிருந்து அதுவே அதன் பெயரானது..

without warmth of feeling; cool:
(a chilly reply.)

மிளகு சந்தனம் இன்னும் எது எதுவோ விளைகின்ற  அந்த நாட்டிற்கு கடல் வழி கண்டறியச் சொன்னால் - வேற ஏதையோ ஏடாகூடமாகச்
செய்து விட்டு  தோல்வியுடன் வந்திருக்கின்றான் கொலம்பஸ் என்ற கோபம் வேறு மன்னனுக்கு...

அதன்பின்,
கொலம்பஸ் கொடுத்த தகவலின்படி அந்த நீர்த் தடத்தில்  சென்ற அமெரிகோ வெஸ்புகி என்ற மாலுமி தான் திரும்பி வந்து  சொன்னான் - அது  இந்தியா அல்ல.. 
புதிய நாடு!..  என்று..

கொலம்பஸை அரசவையில் இருந்து விரட்டியடித்து விட்டாலும் அவன் கொண்டு வந்த பொருளை விரட்டியடிக்க முடியவில்லை.. அங்கிருந்து ஸ்பெயினுக்கும் பரவியது.. 

அதன் பின் போர்ச்சுக்கீசியர்  சென்ற இடத்திற்கெல்லாம் 
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்றதன் படி, இதையும் எடுத்துச் சென்று விற்று ஆதாயம் பார்த்தனர்.

இப்படியாக நம் நாட்டிற்குள்ளும் வந்து நுழைந்தது அது..

அது வந்து இறங்கிய இடம் மேற்குக் கடற்கரை - கோவா.. 

சென்று சேர்ந்த இடங்களில் என்ன பெயரோ தெரிய வில்லை.. 

தமிழகத்திற்குள் வந்து நுழைந்தபோது அதன் சுவை கார்ப்பாக காரமாக இருந்ததைக் கணக்கில் கொண்டு 
மிளகின் பழம் என்றில்லாமல்
மிளகின் காய் - மிளகாய் என்று
ஞான சூனியப்  பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.. 

உண்மையில் மிளகின் காய் வேறு..


முசிறி எனும் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதாக அகநானூறு குறிப்பிடுகின்றது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி..
(அகநானூறு, 149 : 9 -11)

ஆக, கொள்ளையடிக்க வந்தவனுக்கு முன்பே நாம் கார சாரமாகத்தான் தின்று இருக்கின்றோம்..


மனைக்குவை இய கறிமூடையாற்
கலிச்சும் மைய 
கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
(புறம். 343 : 1 -  8 )
நன்றி : தமிழ் இணையம்


யவனர் கொண்டு வந்த மரக்கலங்கள் பொன்னொடு முசிறிக்கு வந்து மிளகொடு மீளுவதை, புறநானூறு பேசுகின்றது..

சுந்தரரும் மிளகு கலந்த சோற்றை விரும்பிக் கேட்கின்றார்..

இன்னும் பல குறிப்புகள்.. இருப்பினும் இரண்டு மட்டும்..

நம் நாட்டின் பணப்பயிர் மிளகு.. நாலாயிரம் வருடங்களுக்கும் முந்தைய வரலாறு உடையது மிளகு.. காரச் சுவைக்காக மிளகு உணவுடன் சேர்க்கப்பட்டது... 

மிளகு தனித்து - கறி - எனப்பட்டது.. 

சந்தையில் இதர காய்களுடன் மிளகும் சேர்த்து வாங்கப்பட்டதால் காய் - கறி எனப்பட்டு காய்கறி என்றானது..

சிறப்பு மிக்க மிளகை அரேபிய ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யும் ஆற்றல் பெற்றிருந்தனர் நமது வணிகர்கள்.. 

இப்படியான வணிகத் திறன் உடைய நாட்டிற்குத்தான் கல்வியறிவு கொடுப்பதற்கு என்று மேலைத் திசையில் இருந்து வந்தனராம்.. 

இங்கே சொல்லிக்  கொண்டு திரிகின்றனர்..


காரச் சுவைக்கு மிளகு ஒன்றையே 
நம் நாடு முழுதும் பயன்படுத்தி இருக்கின்றனர் ..

மிளகு மருத்துவ குணத்துடன் உடல் நலனுக்கு ஏற்றதாகவும் இருந்தது... 

ஆனால் -
இன்றைய தமிழர்கள்  மிளகாய்ப் பொடியைத் தண்ணீரில் கரைத்துத் தான் 
இன்னும் குடிக்க வில்லை..

 நன்றி கூகிள்
நமது உணவில் மிளகாய் அதிகம் ஆவதனால்
செரிமானப் பிரச்னைகளோடு
உதடுகளில் வறட்சி தொண்டையில் எரிச்சல், வயிற்றில் புண், குடல் அழற்சி, மலம் கழிப்பதில் சிக்கல் ஆகிய கோளாறுகளுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் என்கின்றன - சித்த, ஆயுர்வேத, பாரசீக
மற்றும் நவீன மருத்துவங்கள்..
(மருத்துவச் செய்திகளுக்கு நன்றி : விக்கி) 

எனவே மிளகாயைத் தின்பதும் திளைப்பதும் அவரவர் விருப்பம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்
***

9 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். காரசாரமாய் தந்துள்ளீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வரலாறுகளுடன் மிளகாய் காரம் உடல் நலம் பற்றி பேசுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மிளகு மிளகாயை பற்றிய வரலாற்று செய்திகளை அறிந்து கொண்டேன். நன்கு விபரமாக சொல்லியுள்ளீர்கள். பொதுவாக காரம் தவிர்ப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது. சிலர் காரமில்லாத உணவுகளை சாப்பிடவே மாட்டார்கள்.

    /நம்முடைய நலம்
    நம்முடைய கையில்/

    உண்மை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்முடைய நலம்
      நம்முடைய கையில்//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு
  4. தகவல்கள் நன்று. மிளகின் காரம் உடலுக்கும் நல்லது - சரியான அளவில் எடுத்துக் கொண்டால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. மிளகாய் வந்த விவரன், மிளகின் பயன்பாடு விவரங்கள் அருமை.
    மிளகாயை குறைத்து மிளகை சேர்த்தால் உடலுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..