ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2024

யோகமாயா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 9
ஞாயிற்றுக்கிழமை


ஸ்ரீ ஹரி பரந்தாமனின் விருப்பப்படி பசுக்களால் சூழ்ப்பட்டிருக்கும் நந்தகோபனின் மகவாக நந்தினி என்று, தானே தற்பரையாய் யசோதா தேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டு உதிரச் சேற்றில் விளையாடிக் கிடந்தவள் யோக மாயா.. 

யசோதைக்கு யாதவப் பெண்கள் எவரும் பேறு காலம் பார்த்ததாக எவ்விதக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

கம்சனின் சிறைக் கதவுகள் திறந்து கொள்ள கூடைக்குள் வைத்து குழந்தையைச் சுமந்து வந்த வசுதேவர் இவளையே வாரியெடுத்துச் சென்று தேவகியின் அருகில் கிடத்தினார்..

கம்சன் அறிந்து கொள்ளட்டும் என - யாழைப் பழித்த மென் மொழியாள் விசும்பிக் குரல் எழுப்ப கொடியவன் ஓடோடி வந்தான்.. 

குழந்தை என்றும் பாராமல் கடுங்கோபத்துடன் கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி - 
வசுதேவ தேவகியர் கெஞ்சிக் கதறியதையும் கேட்காமல் -
எதிர் புறச் சுவற்றில் வீசியடித்தான்.. 


அந்த அளவில் பதினாறு திருக்கரங்களுடன் ஆங்காரமாக வெளிப்பட்ட தேவி, 
" அடே மூடனே... உன்னை அழிப்பதற்கே என்று அனந்தன்  கோகுலத்தில் பிறந்து விட்டான்..  என்னை நீ தூக்கியது அடித்துக் கொல்வதற்குத் தான் என்றாலும் எனது கால்களைப் பிடித்துத் தூக்கினாய்.. அதனால் உன்னை உயிருடன் விட்டுவிட்டுச் செல்கின்றேன்!.. " - என மொழிந்து மறைந்தாள்..

அண்ணன் தங்கை இருவருமே சங்கு சக்ரதாரிகள்.. 

அவன் ஷ்யாமளன்.. க்ருஷ்ணன்.
இவள் ஷ்யாமளி.. க்ருஷ்ணை.
அவன் மாயன்.. இவள் மாயை.
அவன் கோவிந்தன்... இவள் கோவிந்தரூபிணி..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.. (3) 558

தேவர்கள் அனைவரும் வந்திருந்து எனக்கு திருமணம் நிச்சயித்த போது - 
கூறைப் புடவையை உடுத்திக் கொள்ளச் செய்தவள் அந்தரி.. அவளே எனக்கு மணமிகு மாலையைச்  சூட்டினாள்.. - என்று தான் கண்ட கனவினை ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.. 

அந்தரி என்று குறிப்பது
ஷ்யாமளை ஆகிய துர்கா தேவியைத் தான்..


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 66


ஸ்ரீ விஷ்ணுதுர்கா 
வேதாரண்யம்

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே..
-: அபிராமி அந்தாதி :-
**

நாளை 
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

 ஓம் சக்தி ஓம் 
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. சிறப்பு. சுவாரஸ்யமான பகிர்வு. யோகமாயாவும் துர்க்கையும் ஒன்றா?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அழகான பதிவு. கிருஷ்ண ஜெயந்திக்கு முன் தினம் அன்னை யோகமாதாவின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அன்னையின் வரலாற்றை கூறுமிடமும் சிறப்பு. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. . தங்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. யோகமாயா கோவிலை கோகுலத்தில் பார்த்தேன். துர்கை, காளி, உச்சினி மாகாளி எனப்படும் (உஜ்ஜெயினி மாகாளி... அந்தப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களால் உருவாக்கப்பட்டது), கண்ணகி சார்ந்த கோவில்கள், முன்னோர்கள் கோவில்கள் என பெண்தெய்வக் கோவில்கள் (சிவன் பார்வதி-பார்வதியின் பல்வேறு தலப்பெயர் கோவில்கள் தவிர) எப்படி உருவாகியிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் சமூகத்தில் பலருக்கும் ஸ்ரீ உஜ்ஜயினி காளி குல தெய்வம்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. யோகமாயா தேவி அனைவரையும் காக்கட்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  5. யோகமாயா பற்றிய விளக்கம், படங்கள் , அபிராமி அந்தாதி பாடல்கள் என்று பதிவு அருமை.

    அபிராமி அந்தாதி பாடல்களை பாடி அன்னையை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  6. யோகமாயா குறித்த தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..