திங்கள், ஆகஸ்ட் 12, 2024

ஸ்ரீ சுந்தரர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 27
திங்கட்கிழமை


சுந்தரர்..

திருக்கயிலை மாமலையில் பளிங்கு என ஒளிர்ந்த பனிப்பாறையில்  ஈசனின் திரு உருவம் பிரதிபலிக்க  - அதில் இருந்து பிரதி பிம்பமாகத் தோன்றியவர்.. இதனாலேயே சுந்தரர்.. 

திருப்பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் மூண்டு எழுந்தபோது அதை நாவற்பழ அளவிற்கு திரட்டிக் கொணர்ந்தவர்.. 

 சிவபிரானுடைய அனுக்கத் தொண்டர் சுந்தரர். இறைவனுக்கென்று மலர் கொய்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு நித்ய கைங்கர்யம் புரிபவர்.. திருநீற்று மடலை நிற்கின்ற பேற்றினைப் பெற்றவர்.. இதன் பொருட்டே இவர் திருக்கயிலைக்கு மீண்டபோது இவருக்காக 
திருக்கயிலையில் இருந்து
அயிராவணம் எனும் யானை பூமிக்கு வந்தது..
நந்தவனத்தில் பூக்கொய்த வேளையில் கமலினி அநிந்திதை எனும் தேவ கன்னியரை விநாடியிலும் விநாடிப் பொழுது பார்த்ததற்காக பூமியில் பிறந்து வளர்ந்து வாழ வேண்டும் என அருளாணை பிறந்தது.. இவர் பொருட்டு கமலினி அநிந்திதையும் பூமியில் பிறந்தனர்..

சுந்தரரின் திருமணத்தில் முகூர்த்த நேரத்தில் இறைவன் தடுத்து ஆட்கொண்டு திருவெண்ணெய் நல்லூரில் தன்னைக் காட்டினன்..

முற்பிறவியை உணர்ந்து கொண்ட சுந்தரரின் வாழ்வு அற்புதம் நிறைந்தது..


ஞானசம்பந்தப் பெருமானைப் போல அப்பர் ஸ்வாமிகளைப் போல - சுந்தரரும்  முதலையால் உட்கொள்ளப்பட்ட பாலகனை அவிநாசி தலத்தில் மீட்டளித்திருக்கின்றார்..

இறைவனிடம் கோபம் கொண்டு பேசியதால் வன் தொண்டர் என்ற சிறப்பு இவருக்கு..

திரு அதிகை வீரட்டத்தில் திருவடி தீட்சை பெற்றார்.. சீர்காழியில் தோணியப்பர் தரிசனம் கண்டு இன்புற்றார்...

இவருக்காக திருக்கச்சூர் தலத்தில்  இரந்திட்ட வரதன் என்றும் விருந்திட்ட வரதன் என்றும் லீலைகள் புரிந்தனன்..

வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மா நிலந் தருகோம்
உய்யக் கொள்க மற் றெங்களை.. 
என்று, நாட்டில் பஞ்சம் வந்துற்ற போது மாமழை வேண்டி திருப்புன்கூரில் திருப்பதிகம் பாடிய அருளாளர்..

திருநாட்டியத்தான்குடியில்
உழவனும் உழத்தியும் என நாற்று நட்ட திருக்கோலத்தில் திருக்காட்சி நல்கிய ஈசனும் அம்பிகையும் அம்பர் மாகாளத்தில் சோமாசி மாறநார் யாகத்தில் புலைத் தம்பதியர் என எழுந்தருளினர்.. 

திருநாட்டியத்தான்குடியில் கோட்புலி நாயனாரின் மகள்களாகிய வனப்பகை, சிங்கடி இருவரையும் தமது பிள்ளைகளாக ஏற்று பதிகத்தில் வைத்துப் பாடிய பண்பாளர் சுந்தரர்..

திரு ஆரூரில் பிறந்திருந்த பரவை நாச்சியாரைக் காதலித்த வேளையில் இறையருளால்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கைப்பிடிக்கும்படி நேர்ந்தது.. அவ்வேளையில் திரு ஒற்றியூரில் இருந்து வேறெங்கும் செல்வதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தார்.. அதையும் மீறும்படியான சூழல் உண்டாகியது.. அதன் விளைவாக சுந்தரரின் பார்வை பறி போனது.. (சொன்னதை மறக்கின்ற நாம் எல்லாம் எம்மாத்திரம்?..)

தட்டுத் தடுமாறி நடந்த சுந்தரருக்கு மின் ஒளியாய் அம்பிகை வழிகாட்டினாள்.. திருவெண்பாக்கத்தில் இறைவன் ஊன்றுகோல் அருளினன்..  அங்கிருந்து காஞ்சி மாநகரை அடைந்த சுந்தரர் காமாட்சி அன்னையின் அருளால் இடககண்ணில் பார்வை பெற்றார்.. அதன்பின் திரு ஆரூரை அடைந்தபின் அங்கே வலக்கண்ணிலும் பார்வை பெற்றார்.. 


இவருக்காக குண்டையூர்க் கிழார் வழங்கிய நெல் மூட்டைகள் நெல் மலைகளாகி விட சிவகணங்களைக் கொண்டு திரு ஆரூரில் வீடுகள் தோறும் நெல் மணிகளை நிறைத்தவர் சுந்தரர்.. 

திரு முதுகுன்றத்தில் ஈசனிடம்  பெற்ற பொற்காசுகளை அங்கே ஆற்றில் விடுத்து திரு ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் திரும்பப் பெற்ற புண்ணியர்..

 திருமுருகன் பூண்டியில் ஈச்ன் கொடுப்பது போல் கொடுத்து பூத கணங்களை வேடுவர் ஆக்கி வழிப்பறி செய்து கொள்ள சுந்தரருக்கு வந்ததே கோபம்...

எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே?.… என்று இறைவனிடமே நியாயம் கேட்டு வழக்காடியவர்...

பதினெட்டு வருடங்கள் வையகத்தில் வாழ்ந்ததும் திருக்கயிலைக்கு மீள வேண்டும் என எண்ணம் கொண்டார்..

அந்த அளவில் திருக்கயிலையில் இருந்து
அயிராவணம் எனும் யானை பூமிக்கு வந்தது..


அவ்வேளையில் சேரமான் பெருமாள் நாயனாரும் புறப்பட - இருவரும் திருக்கயிலைக்கு ஏகினர்.. 



அங்கு வானோரால் வரவேற்கப்பட்டார் சுந்தரர்.. 


சேரமான் பெருமாள் நாயனார் இறைவன் முன்பாக ஞான உலா எனும் நூலை அரங்கேற்ற  எழுத்தாணி கொண்ட சாஸ்தா அதனை
ஏடுகளில் எழுதினார்..


மீண்டும் சிவத்தொண்டு இயற்றி சுந்தரர் இன்புற்றார்..

சுந்தரர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் 3800.. இவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பவை நூறு மட்டுமே..

ஊனாய்உயிர் ஆனாய்உடல்    
  ஆனாய் உலகானாய்    
வானாய்நிலன் ஆனாய்கடல்    
  ஆனாய்மலை ஆனாய்    
தேனார்பெண்ணைத் தென்பால் 
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்    
ஆனாய்உனக் காளாயினி     
  அல்லேன்என லாமே..  7/1/7

மேலை விதியே வினையின் பயனே
  விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
  கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
  மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
  ஆலக் கோயில் அம்மானே..  7/41/5 

நீறணி மேனியன்
  நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு
  ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை
  அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம்
  இடம்வலம் புரமே..  7/72/3 
 நன்றி : பன்னிரு திருமுறை


நேற்று ஆடிச்சுவாதி..
சுந்தரர் குரு பூஜை.. 

சேரமான் பெருமாள் நாயனார் போற்றி
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. சுந்தரர் பற்றிய சுவாரஸ்யமான புராணம். சிவாஜி கணேசன் மனதில் வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  2. நூறுதான் கிடைத்திருக்கிறது என்னும்போது அவர் இயற்றிய மொத்த பாசுரங்கள் 3800 என்று எப்படி கணக்கு செய்தார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது சேக்கிழார் காலத்துக் கணக்கு.. எப்படி என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி. வெங்கட்.

      நீக்கு
  4. சுந்தரர் வரலாறு பகிர்வு அருமை.தேவாரத்தை பாடி சுந்தரரை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. சுந்தரர் விரிவான பல தகவல்களுடன் நல்ல பகிர்வு. பலதும் படித்து அறிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..