சனி, ஆகஸ்ட் 03, 2024

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றுஆடி 18
ஆடிப்பெருக்கு
சனிக்கிழமை


மஹாளய பட்சத்திற்கே காவிரி வறண்டு கிடந்தது.. 

தை அமாவாசைக்கும் அதே கதிதான்.. 

இவ்வருடம் காவிரியில் ஆடிப்பெருக்கும் அமாவாசையும் நிகழுமா என்று தவித்திருந்த வேளையில் பொங்கிப் பெருகி வந்திருக்கின்றாள் காவிரி..

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே 
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்தது..

இதனால், மாநிலத்தின்  பிரதான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில்,

கர்நாடக அணைகளுக்கு வந்து சேர்கின்ற மழை நீர் முழுவதுமாக தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது..

இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையிலும் நீர் இருப்பு கணிசமாக அதிகரித்தது..

இந்நிலையில் காவிரி வடிகால் பாசனத்திற்காக
 28/7 ஞாயிற்றுக் கிழமை மாலை 3:10 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.. 

இந்தத் தண்ணீர் அகண்ட காவிரியில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 30/7 மாலை வந்தடைந்தது.

முக்கொம்பு கடந்த புது வெள்ளம் - தஞ்சை மாவட்டத்தின்  எல்லையான கல்லணைக்கு 31/7 அதிகாலை வந்து சேர்ந்தது.. 

இந்த அளவில் புதன் கிழமை (31/7) காலை 10:00 மணியளவில் காவிரியின் நாற்பது கண்களிலும், தண்ணீர் திறந்து விடப்பட்டது.. இதையடுத்து வெண்ணாறு,  கல்லணைக் கால்வாய் ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டது..

வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள்
நுங்கும் நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த நீரில் பூக்கள், நெல் மணிகளைத் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்..

எப்படியோ
மேட்டூரில் இருந்து கல்லணை கடைமடை கழிமுகம் வரை வறண்டு கிடந்த வளநாடு சற்றே மலர்ந்திருக்கின்றது..

ஆகவே 
இந்த அளவில் காவேரியை மகிழ்வுடன் வரவேற்போம்..

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை... அப்பர் பெருமான் திரு ஐயாற்றில் திருக்கயிலாயக் காட்சி கண்ட நாள்..


தஞ்சை - கரந்தையில் ஐந்து கோயில்களில் ஆடித் தீர்த்தவாரியும்  தொடர்ந்து தஞ்சையின் ராஜ வீதிகளில் உலாவும் நிகழ்ந்துள்ளது...

திருமுறைகளின் வழி நித்திய வழிபாடுகள் நடத்தப் பெறுகின்ற கோயில்கள் இவை..

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ சூரியனார் கோயில் ஆதீனத்தின் மகா சந்நிதானம் அவர்களால் இவ்விழா துவக்கப்படுகின்றது..

 1) ஸ்ரீ சிதானந்தீஸ்வரர் திருக்கோயில் கரந்தை..
2) ஸ்ரீ நாகநாகேஸ்வரர் திருக்கோயில் கரந்தை..
3) ஸ்ரீ கேசவதீஸ்வரர் திருக்கோயில் வடக்கு வாசல்
4) ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் திருமடம், கரந்தை..
5) ஸ்ரீ வளர்மதீஸ்வரர் திருக்கோயில், வலம்புரி, கரந்தை..

இவை ஐந்தனுள் ஒரு கோயிலில் எள்ளளவு பங்களித்த விதியுடையன் ஆனேன்...

மாதர்ப் பிறைக்கண்ணியானை
  மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
  புகுவா ரவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
  ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
  களிறு வருவன கண்டேன்

கண்டேனவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்..4/3/1
-: திருநாவுக்கரசர் :-

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு
நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. அவர்களே விரும்பா விட்டாலும் காவிரியை தமிழகத்துக்கு திருப்பி விட்டுத்தான் ஆகவேண்டும்.  இல்லா விட்டால் அவர்களுக்கு ஆபத்து!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை... ஆனால் அது நினைவுக்கு வருவதே இல்லை...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. 'மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது' என்கிற வார்த்தையில் "முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி" என்கிற வார்த்தை விட்டுப் போயிருக்கிறது யுவர் ஹானர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. தண்ணீர் - இல்லை இல்லை என்று சொல்லியவர்கள் இப்போது வைத்துக் கொள்ள முடியாமல் திறந்திருக்கிறார்கள். ஆடிப்பெருக்கு சிறப்புற கொண்டாட முடிந்திருக்கிறது. தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..