நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 9
ஞாயிற்றுக்கிழமை
மூங்கில்..
நமது சமயம் சார்ந்த விழாக்களின் போது, பந்தல் கால் நடுதல் என, மூங்கில் முதலிடம் பெறுகின்றது - வாழையைப் போல..
ஹிந்து சமயத்தில்
கோயில் திருவிழா என்றால் பந்தல் கால் முகூர்த்தம் சிறப்புடன் நிகழும்..
கல்யாணம் என்றால் அனைத்து சமூகத்திலும் முகூர்த்தக் கால் (பந்தல் கால்) என்று மூங்கிலை நடுகின்ற வைபவம் சிறப்பாக நடைபெறும்..
புதிய மூங்கில் முறத்தில் தாயின் பட்டுச்சேலையை விரித்து அதில் - பிறந்த குழந்தையை பதினாறாம் நாளில் சீராட்டுகின்ற சம்பிரதாயம் பல சமூகங்களில் இன்னும் தொடர்கின்றது.
மூங்கிலும் வாழையும் நமது வாழ்வியலின் தத்துவங்களை உணர்த்துகின்ற அடையாளங்கள்..
மூங்கில் உலகின் மிகவும் உயரமான புல் ..
அறுபது ஆண்டுகள் வரை வாழக்கூடியது..
ஆதி மனிதன் பாறை இடுக்கில் வாழ்ந்த காலத்தில் இருந்தே இணை பிரியாதிருந்த பெருமை உடையது..
குகை மற்றும் மரப்பொந்துகளுக்குள் இருந்து வெளியே வந்த மனிதனின் முதல் நிழலுக்கு ஆதார அடிப்படையாக அமைந்தது மூங்கில்..
இதனை
ஏழையின் மரகதம் என்றனர்..
ஈரப்பதமுள்ள கொல்லைப் புறங்கள், விளைநிலங்களின் ஓரங்கள், ஆற்றங்கரைகள் மலையடிவாரங்கள் எல்லாம் மூங்கிலின் பசுமை ஆட்சி செய்கின்ற இடங்கள்..
ஆதியில் வேட்டைக் கருவிகளான வில்லும் அம்பும் மூங்கிலால் அமையப் பெற்றவையே..
நமது கலாச்சாரத்தில் மூங்கிலின் பங்கு அளப்பரியது.. பண்டைய நாட்களில் ஒரு கிராமத்தின் பலவித வளங்களுள் மூங்கிலும் ஒன்று..
பாரம்பரியத் தமிழனின்
வாழ்வில் கடைசி வரைக்கும் துணையாவது மூங்கிலே..
இன்றைக்கு பெட்டி நாகரிகம்.. அதுவும் வேறு விதமாக மாறி விட்டது..
ஆல் போலத் தழைத்து
அருகு போல வேரூன்றி
மூங்கில் போலச் சுற்றம் முசியாது வாழ்க
- என்று வாழ்த்துவது நமது பண்பாடு..
இன்றைக்கு அப்படியெல்லாம் இல்லை..
வேணுவனம் எனப்பட்ட புராதன நகரம் திருநெல்வேலி..
திருநெல்வேலியின் தலவிருட்சம் மூங்கில்..
திரு வெண்ணெய் நல்லூர் தலத்திலும் தலவிருட்சம் மூங்கில்..
வேயவனார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட (திருநாவலூர்) 7/17/7
வேறு சில தலங்களிலும் மூங்கில் தல விருட்சம்..
மூங்கில் பழந்தமிழில் பற்பல பெயர்களை உடையது. வேணு எனில் மூங்கில்..
சொல் வழக்கில் வேணு, வேய், கழை - என்ற பெயர்கள்..
வேய்ங்குழல் (புல்லாங்குழல்) என்பதையும் வேணுகானம் என்பதையும் அறியாதவர் உண்டோ..
மூங்கிலுக்கான பெயர்கள் என்று விக்கி தொகுப்பில் உள்ளவை :
அமை, அரி, ஆம்பல், ஓங்கல், நாளி, கண், கண்டகி, கனை, கழை, காம்பு, சீசகம், சந்தி, தட்டை, திகிரி, துனை, நேமி, பணை, பாதிரி, புறக்காழ், முடங்கல், முளை, வஞ்சம், வரை, விண்டு, வெதிர், வேரல், வெல், வெய், வேய், வேண்டு, வேணு, வேழம். (நன்றி விக்கி)
மூங்கில் வைத்து விளையாட்டு நிகழ்த்துவது கழைக் கூத்து..
அம்பிகையின் தோள்கள் இளம் மூங்கிலொடு ஒப்பிடப்பட்டன..
வேய், கழை, காம்பு எனும் பெயர்களால் அம்பிகை பல இடங்களில் புகழப்படுகின்றாள்..
வேயுறு தோளிபங்கன் (கோளறு பதிகம்) 2/85/1
வேயன தோள் உமை பங்கன் (திருவெண்காடு) 2/48/2
காம்பன தோளி பங்கா (தில்லை) 4/23/2
திருப்பனந்தாள் எனும் தலத்தை அடுத்திருக்கும் பந்தநல்லூர்
(பந்தணை நல்லூர்)
எனும் தலத்தில் அம்பிகையின் திருப்பெயர் ஸ்ரீ வேணுபுஜாம்பிகை..
பரத நாட்டியத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை உடையது பந்தநல்லூர் மரபு..
கழையைப் பொருத திருநெடுந் தோளும் -என்று புகழ்கின்றவர் அபிராமி பட்டர்..
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீட்டிற்குள் இருந்த மூங்கில் பொருட்களை நீங்களே நினைத்துப் பாருங்கள்..
இன்றைக்கு நம் வீட்டில் இருப்பவை எத்தனை?..
இரு பொருள் தருகின்ற ஒரு வார்த்தை அகப்பை.. இயற்கை கண் அமைத்துக் கொடுத்த தேங்காயின் ஓட்டின் மேல் பகுதியும் மூங்கிலில் சீவி எடுக்கப்பட்ட சிம்பும் சேர்ந்ததே அகப்பை...
கல்யாணங்களுக்கு பொருட்களின் பட்டியலில் மஞ்சளுக்கு அடுத்து எழுதப்படுவது அன்னக்கூடை எனப்படும் மூங்கில் கூடைகள்..
இன்று யாக சாலை பயன்பாட்டில் மட்டும் இருப்பது சமித்துகளுக்கான மூங்கில் ஏந்தல்கள் ( தட்டுகள்)..
இப்படி சிறப்புடைய மூங்கில் புதர்களில் பறவைகள் கூடு காட்டுவதில்லை.. புதர்களில் பாம்புகள் அடைந்து இருக்கும்..
அறுபது ஆண்டுகள் வாழ்ந்த மூங்கில் தனது வாழ்வில் முதல் முறையாகப் பூப்பதுடன் அடங்கி விடுகின்றது..
மூங்கில் பூக்களில்
நெல் போன்று விதை தோன்றி முதிர்ந்து உதிர்கின்றது.. இதனை மூங்கில் முத்து என்றும் மூங்கிலரிசி என்றும் கொண்டாடுவர்..
மூங்கிலரிசி பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன..
சின்ன வயதில் கொள்ளிடக் கரையின் கிராமம் ஒன்றில் வசித்தோம்.. அப்பகுதியில் மூங்கில் வனங்கள் அதிகம்..
அப்போது எங்களுக்கும் மூங்கில் அரிசி கிடைத்தது.. மாவாக திரித்து சாப்பிட்டிருக்கின்றோம்..
ஏழைக் குடிசை என்றாலே அதன் அடையாளங்கள் மூங்கிலும் தென்னங்கீற்றும் தான்..
மூங்கிலைக் கொண்டு ஏணி, கூடை, முறம், தட்டு, தட்டி - போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கை வேலைத் திறனால் உருவாகின.. அவை தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத் தொழிலாக அமைந்து வறுமை போக்கின..
இன்று நவீன வணிகத்தினால் வாழ்க்கை முறை மாறி விட்டாலும் அங்கும் இங்குமாக மூங்கிலின் பயன்பாடுகள்..
இன்றும் திரு ஆரூர் ஆழித்தேர் விமான அலங்காரங்கள் மூங்கில்கள், பனஞ்சப்பைகளைக் கொண்டே அமைகின்றன..
தஞ்சையில் பல்லக்கு அலங்கார விதானங்களில் மூங்கில் தான்.. இன்னமும் இந்த வேலைகளைச் செய்து கொண்டு சில குடும்பங்கள்..
தமிழகத்தில் சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்வராயன் மலை, சத்தியமங்கலம் முதுமலைக் காடுகள் ஆகியன மூங்கிலுக்கான விளை நிலங்கள்.. என்றாலும்
பரவலாக இருந்த மூங்கில் வனம் இன்று வெகுவாகக் குறைந்து விட்டது..
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் அதிகமாக விளைகின்றது..
கிழக்காசிய நாடுகளில் முக்கிய பண்ணைப் பயிராக மூங்கில் விளங்குகின்றது..
காடுகளில் வசிப்பவர்களுக்கும் கைவினைத் தொழில் புரிபவர்களுக்கும் மூங்கில் வாழ்வாதாரமாக விளங்குகின்றது..
பிளாஸ்டிக் எனும் அரக்கனால் மூங்கிலின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனது..
நம் நாட்டிலும், சீனாவிலும் மூங்கிலானது காகிதக் கூழ் தயாரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது..
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் மூங்கில் சார்ந்த குடிசைத் தொழில்கள் மிகவும் பிரசித்தம்..
தாய்லாந்து நாட்டில் இன்றும் மூங்கில் குருத்துகள் முக்கிய உணவு..
மூங்கிலின் இளங்கன்றுகள் - வேர் கணுக்களில் இருந்தே பக்கவாட்டில் முளைத்து செழிக்கின்றன.. இதனால் தான் சுற்றம் முசியாமல் என்ற சொற்களால் சிறப்பிக்கப்பட்டது..
உலகில் மொத்த மூங்கில் தாவரங்கள் 75 வகையான இனங்கள் என்றும் 1250 வகைப் பிரிவுகள் என்றும் குறிக்கப்படுகிறது. இந்தியாவில் 10.03 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் 23 இனங்களில் 125 உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் வகைகள் உள்ளதாக விக்கி சொல்கின்றது..
உயிர்வளியை அதிகமாக
வெளியிடுவதில் மூங்கிலுக்கு முதலிடம்..
இதை உணர்ந்தே
மூங்கிலை சுற்றுச் சூழலின் நண்பன்
என்கின்றது நவீன அறிவியல்..
திருக்காளத்தியின்
செழுமை இப்படி குறிக்கப்படுகின்றது..
கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில் வந்தணை தரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி அடிகளை அடிதொழ
வீங்கு வெந்துயர் கெடும் வீடு எளிதாகுமே. 3/36/3
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
மூங்கிலின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறீர்கள். தற்போது வீடுகளில் அதன் பயன்பாடு அருகிவிட்டது
பதிலளிநீக்குமூங்கில் பற்றிய நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி
பதிலளிநீக்குமூங்கில் பகிர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குமூங்கில் பொருட்கள் அழகு. எனக்கும் இப் பொருட்கள் பிடிக்கும்.
"ஆல் போலத் தழைத்து
அருகு போல வேரூன்றி
மூங்கில் போலச் சுற்றம் முசியாது வாழ்க" நல்ல வாழ்த்து.
மூங்கிலின் சிறப்பு பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமூங்கில் பெருமையை அருமையாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குவீட்டில் சின்னதாக இப்போது கண்ணாடி ஜாடியில் விற்கும் மூங்கில் மரத்தை வைக்கிறார்கள்.
எங்கள் குடியிருப்பை கட்டி கொடுத்தவர் வீட்டில் மாடியில் மூங்கில் மரங்கள் வைத்து இருக்கிறார்.
மூங்கில் அரிசி சொன்னால் வாங்கி தருகிறார் அரிசி கடையில்.
மூங்கில் அரிசி கிடைக்கும் என்று போட்டு இருந்தார் அதை பார்க்க ஆசைபட்டு கேட்டபோது வேண்டுமென்றால் வாங்கி தருவோம். வாங்கி வைத்து கொள்வது இல்லை என்றார்.
மூங்கிலின் சிறப்பு பற்றிய பதிவு மிகவும் நன்று.
பதிலளிநீக்கு