வியாழன், மே 16, 2024

திருக்கேதாரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 3 
வியாழக்கிழமை


திருக்கேதாரம் (கேதார்நாத்)

பன்னிரு ஜோதிர் 
லிங்கத் தலங்களுள் ஒன்று..

இறைவன்
ஸ்ரீ கேதாரேஸ்வரர்
அம்பிகை 
ஸ்ரீ கேதாரகௌரி
தல விருட்சம்: வில்வம் 
தீர்த்தம் : மந்தாகினி...

ஈசன் ஒருவனே  வணங்கத் தக்கவன்!.. - என்ற விபரீத புத்தி பிருங்கி முனிவருக்கு ஏற்பட்டது..

ஒரு சமயம்,
திருக்கயிலாயத்திற்கு வந்த - பிருங்கி முனிவர் தனது கொள்கையின்படி, வண்டு உருவத்தில் ஈசனை மட்டும் வலம் செய்து வணங்கினார்..
 

இதைக் கண்டு, மனம் வருந்திய அம்பிகை
விரதம் அனுசரித்து தவம்  செய்தாள்..  

அம்பிகை அனுசரித்த விரதம் தான் கேதார கௌரி விரதம்..


இதனால் நெகிழ்ந்த பரமேஸ்வரன்
உமையாம்பிகைக்கு தனது மேனியில் இடப்பாகத்தை வழங்கினன்.. 

அதன் பின், பிருங்கி முனிவர் கயிலை மாமலைக்கு வந்தபோது - எம்பெருமான் மாதொருபாகனாக தரிசனம் அருளினார்.. 

அப்போதும் குணம் மாறாத பிருங்கி மீண்டும் வண்டு உருவாகி மாதொருபாகனின் நெஞ்சத்தைத் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். வணங்கி வழிபட்டார்.. 

இதனால் கடும் சினமுற்ற அம்பிகை பிருங்கி நடக்க இயலாதவாறு செய்தாள்.. 

தடுமாறி கீழே விழுந்த முனிவருக்கு  மேலும் ஒரு காலை அருளினார் ஈசன்..

மூன்று கால்களுடன் பிருங்கி எழுந்து நிற்க - அவரிடமிருந்த முழு சக்தியையும் நீக்கி நின்றாள் பராசக்தியாகிய அம்பிகை..

வேரற்ற மரம் போல் விழுந்த பிருங்கியால் எதுவும் செய்ய இயலாத நிலை..

பிருங்கி முனிவர் கண்ணீர் விட்டுக் கதறிட அம்பிகை இரக்கம் கொண்டாள்.. 

நல்லறிவு பெற்ற பிருங்கி முனிவரும் தனது பிழைக்கு மனம் வருந்தி அம்பிகையைத் தொழுது நின்றார்..

பிருங்கி முனிவர் வண்டு எனத் துளைத்த கோலத்திலேயே அம்மையும் அப்பனும் திருக்காட்சி நல்கினர்..

இன்றும் வண்டு எனத் துளைத்த மாதொருபாகன் திருக்கோலத்தை திருச்செங்கோடு தலத்தில் தரிசிக்கலாம்..


திருக்கேதாரத்தை வழிபட்டோர்: உமையம்மை, பிருங்கி முனிவர், மஹா விஷ்ணு, பஞ்ச பாண்டவர்.. 

ஸ்ரீ மஹாவிஷ்ணு
கேதாரேஸ்வரரை வழிபட்ட சமயத்தில் வைகுந்தத்தின் துவார பாலகரான ஜய விஜயர்  திருவாயிலைக் காத்து நின்ற ஐதீகத்தின்படி இன்றும் இங்கே ஜய விஜயர் தான் துவாரபாலகர் என்று திருப்பதி தேவஸ்தான ஒளிபரப்பில் சொல்லப்பட்டது..

இமயமலைச் சாரலில் பனி சூழ்ந்த சிகரங்களுக்கு மத்தியில் எழிலுடன் திகழ்கின்ற - இத்தலம் கடல் மட்டத்திலிருந்து 14000 அடி உயரத்தில் உள்ளது..


இங்குள்ள கடுமையான வானிலையின் காரணமாக இக்கோயில் அட்சயத் திருதியை முதல் தீபாவளித் திருநாள் வரை திறந்திருக்கும்..

ஆறு மாதங்கள் திருக்கோயிலை பனி மூடியிருக்கின்ற காலத்தில் - தேவர்கள் வழிபாடு செய்வதாக ஐதீகம்..

பனி உருகிய நிலையில்
ஆறு மாதங்கள் மனிதர்களால் வழிபடப்படுகின்றது..

மாங்கல்ய பலத்திற்காக - கேதார கௌரி விரதம் ஐப்பசி மாத அமாவாசை நாளில் அனுசரிக்கப்படுகின்றது. 

கேதார்நாத் யாத்திரை இன்றும் புனிதமாகக் கருதப்படுகிறது..


இமயமலைச் சாரலில் உள்ள கேதாரத்திற்கு டில்லியில் இருந்தும், ஹரித்வாரில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.. 

கௌரி குண்டத்தில் இருந்து, 14 கிமீ.,  மலைப்பாதை.. ஆதலால் நடந்தோ, குதிரை மூலமாகவோ தான் செல்ல முடியும்..

இமாசலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 2013 ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கேதார்நாத் மிகவும் பாதிப்படைந்தது... கோயிலின் பின்புறத்தில், மலையில் இருந்த பெரும்பாறை ஒன்று உருண்டு வந்து அடைத்துக் கொள்ள  - பெருகி வந்த வெள்ளம் இரு பிரிவாகப்  பாய்ந்து மிகப் பெரிய சேதத்தை விளைவித்தது..

கடந்த (13/5) திங்களன்று காலையில் திருப்பதி தேவஸ்தானம்  திருக்கேதார காட்சிகளை ஒளிபரப்பு செய்தது.. 

அதில் மூழ்கிய நான் மேலும்  தேடியபோது தற்போது கோயில் திறக்கப்பட்டிருக்கும் காலம் என்பதை அறிந்து கொண்டேன்.. அதன் விளைவே இப்பதிவு..

தற்போது  ஸ்ரீ கேதாரேஸ்வரர் திருக்கோயில் திறந்திருக்கின்றது..

எத்தனை எத்தனையோ பிழைகள்..
எத்தனை எத்தனையோ பாவங்கள்..

மூட்டு தேய்வு வந்தது எதனால்?.. 
அதற்காக கொடுக்கப்பட்ட 
மருந்துகளில் பிழை  ஏற்பட்டது எதனால்?..

நான் தருக்கித் திரிந்தேனோ அன்றி தடம் மாறித் தொலைந்தேனோ.. புரியவில்லை.. 

மாமுனிவரின் பிழை பொறுத்த அம்பிகை அடியேனின் பிழைகளையும் பொறுத்து இழந்த நலத்தினை மீண்டும் அருளல் வேண்டும்..
 
" அவளைப் பணிமின் கண்டீர்!.. "
அபிராமி பட்டர்..

எல்லாரும் இன்புற்றிருக்க 
பிரார்த்தனைகள்...
**
இத்தலத்தில் சிவலிங்கம்!?..

கீழுள்ள தரிசனம் தான்..

விவரம் வேறொரு
பதிவில்!..


தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலரும் கேதாரமே..(2/114/1)
-: திருஞானசம்பந்தர் :-

பண்ணின்தமிழ் இசை பாடலின்
பழவேய் முழவு அதிரக்
கண்ணின் ஒளி கனகச்சுனை
வயிரம் அவை சொரிய
மண் நின்றன மதவேழங்கள்
மணிவாரிக் கொண்டெறியக்
கிண்ணென்று இசை முரலும் 
திருக்கேதாரம் எனீரே.. 7

நாவின்மிசை அரையன்னொடு
தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்
கடியான் அடித்தொண்டன்
தேவன் திருக்கேதாரத்தை
ஊரன் உரை செய்த
பாவின் தமிழ் வல்லார்பர
லோகத்திருப்பாரே.. (7/78/10)
-: சுந்தரர் :-

அப்பர் ஸ்வாமிகள் 
கயிலாயம் காண வேண்டி 
மானசரோருவ ஏரி வரை 
சென்றிருக்கின்றார்..

திருக்கேதாரத்தினைக் குறித்த 
திருப்பதிகங்கள் ஏதும் 
கிடைக்கப்பெறவில்லை..
எனினும்
திருவூர்த் தொகையில் 
ஐந்து திருப்பாடல்களில் 
திருக்கேதாரம் குறிக்கப்படுகின்றது..

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே.. (6.70.8)
-: திருநாவுக்கரசர் :-
- நன்றி -
பன்னிரு திருமுறை
சிவம். org

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. அம்பிகை உங்களுக்கு அன்புடனே வேண்டியதை அருள பிரார்த்திக்கிறேன். ஓம் சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... அவளன்றி வேறேது கதி!..

      அன்பின் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நாங்கள் திருக்கேதாரம் போய் வந்தது நினைவுகளில் வந்து போனது.
    இன்று இறைவன் திரு உள்ளத்தால் நானும் காலை திருக்கேதாரம் யூடியூப்பில் போட்டு இருந்தார் அதை பார்த்தேன், இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    உங்கள் தளத்திலும் தரிசனம் செய்து விட்டேன்.

    https://mathysblog.blogspot.com/2012/08/7.html என் பழைய பதிவையும் பார்த்து படித்து கண்ணீர் மல்கி வந்தேன்.

    பாடல்களை பாடி திருக்கேதார நாதரை வணங்கி கொண்டேன்.
    எல்லோருக்கும் உடல் நலத்தை கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லோருக்கும் உடல் நலத்தை கொடுக்கட்டும்.. ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருக்கேதாரநாதர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். விரிவான பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..