திங்கள், மே 06, 2024

தாகம் தாகம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
திங்கட்கிழமை


தாகம்.. 
தண்ணீர் தண்ணீர்!..

இன்னும் சில நாட்களுக்கு வெப்பக் கதிர் வீச்சு தொடரும் என்ற அறிவிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன...

வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வோருக்கு நீர் வேட்கை இயற்கை என்றாலும் சுத்தமான குடிநீருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை..

Thanks  Fb.

இரண்டாயிரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு  எச்சரிக்கை விடுத்தார்கள் - இங்கே குடிக்கின்ற நீருக்கு விலை கொடுத்தாக வேண்டிய நிலை வரும் என்று!..

இப்போது -
அந்த எச்சரிக்கை வெற்றி பெற்று விட்டது..


தண்ணீரைக் குறை சொல்லக் கூடாது.. அதுவும் வணிக முறையிலான தண்ணீரைக் குறையே சொல்லக்கூடாது.. வியாபாரம் என்றால் அப்படித்தான் இருக்கும்.. 

இதற்குள் தரத்தை எதிர்பார்ப்பதெல்லாம் மடமை..

இஷ்டமில்லை எனில் வாங்கக் கூடாது - அவ்வளவே!..

ஆனாலும் நமக்குப் பாதுகாப்பு வேண்டும்.. அதுவும் நாமே தேடிக் கொள்ள வேண்டும்..

மாதம் தோறும் -
தலைக்கு மேலான அளவில் வருமானம் என்றால் பிரச்னை இல்லை.. எந்த வகையிலாவது தப்பித்துக் கொள்ளலாம்..

ஏழை பாழைகளும்
வெயிலில் வேலை செய்வோரும் அவரவர் பாட்டை அவரவரும் பார்த்துக் கொள்ள வேண்டியதே..

உடல் சூடு குறைந்து தாகம் தணிவதற்கு நமக்குக்  கிடைத்திருப்பவை நன்னாரி வேர், வெட்டிவேர் எனும் இயற்கையின்  சீதனங்கள்..


நுங்கு, இளநீர், தர்பூசணி, முலாம் பழம் ஆகியனவும் நல்லவையே..

எனினும், நாலு பக்கமும் சுவரை உடைத்துக் கொண்டு காசு பணம் வருகின்ற சூழ்நிலையிலா நாம் இருக்கின்றோம்?..

ஒவ்வொரு நாளும்  அதிகப்படியான செலவாக அல்லவா இருக்கின்றது!..


சாதாரணமாக ஒரு இளநீர் நாற்பது ரூபாய்.. நீர் இன்மையால் அடுத்த வருடங்களில் தென்னை மகசூல் பாதிக்கப்படலாம்.. 

இளநீரை அருந்தும் வரைக்கும் அதனுடைய சுவை பற்றித் தெரியாது.. சற்றே உப்புச் சுவை என்றாலும் மீண்டும் நா வறட்சி தான்..

என்னை மாதிரி வீட்டில் இருப்பவர்களுக்கு தினசரி இதற்காக சில நூறு ரூபாய் செலவு என்பது இயலாது.. 

ஆனாலும் 
ஏதாவது செய்தாக வேண்டுமே.. 
ஏதாவது சொல்லியாக வேண்டுமே.. 

குளுமைக்கு என்று  சாலையோரக் கடைகளில் ஏதாவது குடிப்பது நல்லதா?.. 

அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்கோ.. நான் அருந்துவதில்லை..

நிறமூட்டிகளில் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதாக செய்திகள்.. இருக்கின்ற பிரச்னைகள் போதாது என்று சருப்பத் (!?) வேறயா?..


இந்நிலையில் -
நமக்குக்  கிடைத்திருப்பவை - கிருஷ்ண துளசி,  சிவதுளசி, புதினா, கொத்தமல்லித் தழை, தேற்றாங்கொட்டை,
நன்னாரி வேர், வெட்டி வேர், நெல்லிக்காய் - எனும் இயற்கையின்  சீதனங்கள்..

புதிய மண்பானையில் நமக்குக் கிடைக்கின்ற தண்ணீரை முதல் நாள் இரவில் ஊற்றி அத்துடன் - துளசி,  புதினா ஏதாவது ஒன்றுடன் - 


நன்னாரி வேரையோ வெட்டி வேரையோ நெல்லியையோ
போட்டு வைத்து மறுநாள் முழுமைக்கும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது..

சாதாரணமாக தேற்றாங்கொட்டைக்கு  தண்ணீரைத் தெளிய வைக்கும் குணம் இருக்கின்றது..

கடுத்த நீரை இலகுவாக்குவது நெல்லி..


அந்தக் காலத்தில்  புதிதாக கிணறு தோண்டும்போது கடுத்த நீர் ஊற்றெடுத்து வந்தால் கவலையே படாமல் நெல்லிக் கிளையின் சிறு துண்டுகளைப் போட்டு வைப்பர்..

மறுநாள் தண்ணீரின் கடுத்த சுவை மறி இருக்கும்..

திரு ஆரூருக்குப் பக்கத்தில் திரு நெல்லிக்கா என்று ஒரு ஊரே இருக்கின்றது..

தேற்றாங்கொட்டையையும் நெல்லியையும் பானைக்குள் போட்டு வைத்திருந்து அந்த நீரை மறுநாள் அருந்துவது நல்லது..

துளசி, புதினா, கொத்தமல்லித் தழை - ஏதாவதொன்றை நல்ல தண்ணீரில் நன்றாக அலசி விட்டு,

பகல் பொழுதில் குடிக்கின்ற நீரில் - போட்டு வைத்திருந்து அந்த நீரைப் பருகுவதும் உடலுக்கு ஆரோக்கியம்..


குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட - நீரைக் குடிப்பதில் கவனம் தேவை என்கின்றது நவீன மருத்துவம்.. 


ஐஸ் கட்டிகள் தொண்டையில் பிரச்னைகளுக்கு காரணம் ஆகின்றன.. 

மேலும், வெயில் சூடு என்று ஐஸ் கட்டிகளை பல விதத்திலும் பயன்படுத்துவதால்
 ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படுகின்றன.. 

இயற்கையின் சீதனங்கள்... இந்நாளில் அவையும் பணம் கொடுத்தால் தான் கிடைக்கின்றன.. 

இருந்தாலும் அவை தீமை செய்வதில்லை..

எனவே -
துளசி,  புதினா, கொத்தமல்லித் தழை, தேற்றாங்கொட்டை,
நன்னாரி வேர், வெட்டி வேர், நெல்லிக்காய் - எனும் இயற்கையின்  சீதனங்களை இயன்றவரை பயன்படுத்தி நலம் பெறுவோம்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை

ஓம் சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. முன் ஒரு காலத்தில் பானை நீர் குடித்தவன்தான்.  வெட்டிவேர், விளாமிச்சை வேர் போட்டு அருந்தியவன்தான்.  இப்போது அப்படி குடிக்க முடிவதில்லை.  ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது.  ஐஸ் வாட்டர் பக்கமே செல்வதில்லை.  ஏப்ரல் 2020 முதல் இன்றுவரை வெந்நீர், வெந்நீர், வெந்நீர்தான்!  தப்பித்தவறி தாகம் தாங்காமல் ஓரிருமுறை ஐஸில்லா சர்பத் (தர்பூஸ்) குடித்து பதினைந்து நாட்கள் தொண்டை வலி, சளி பிரச்னையில் சிக்குவேன்!

    பதிலளிநீக்கு
  2. நானும் ஒரு பானை, வெட்டிவேர் ஆகியவை வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    அங்கிருந்தபோது ஸ்வீட் வாட்டர் என்று நன்னீரை ஒரு கேலன் 15 ரூபாய்க்கு வாங்கியது நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
  3. "துளசி, புதினா, கொத்தமல்லித் தழை, தேற்றாங்கொட்டை,
    நன்னாரி வேர், வெட்டி வேர், நெல்லிக்காய் - எனும் இயற்கையின் சீதனங்களை இயன்றவரை பயன்படுத்தி நலம் பெறுவோம்"
    வெப்ப காலத்துக்கு உகந்த இயற்கை நீர். நல்ல தகவல்.உடலுக்கு நலன் தரவல்லது.

    இளநீர் தலைநகரில் ரூ 200 க்கு மேல்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தகவல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  5. முன்பு வெயில் காலத்தில் வீட்டில் ஒரு மூலையில் மணல் போட்டு அதில் மண் பானையை வைத்து தண்ணீர் ஊற்றி குளிர்ந்த நீரை குடித்த நினைவுகள் வந்து போகிறது. இப்போது குளிர் நீரே அருந்துவது இல்லை. எல்லா நேரமும் வெந்நீர் தான்.

    கிணற்றில் நெல்லி மர தூண்டுகளை போட்டு இருக்கிறோம் எங்கள் அம்மா வீட்டில்.

    இளநீர் தினம் வாடிக்கையாக மாயவரத்தில் இருந்த போது கொண்டு வந்து கொடுப்பார் அவரிடம் உடைத்து வாங்கி எல்லோரும் பகிர்ந்து குடிப்போம்.
    நுங்கு வாங்குவோம்.

    எலுமிச்சை அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து வந்து விடும்.
    மாயவரம் வாழ்க்கை அருமையான வாழ்க்கை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..