செவ்வாய், ஏப்ரல் 23, 2024

நிறை நிலா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்ரா பௌர்ணமி
சித்திரை 10
செவ்வாய்க்கிழமை


இன்று
சித்ரா பௌர்ணமி




நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா...
- என்று, நிலவைக் காட்டி - குழந்தைக்குத் தாய்
சோறூட்டுவதில் இருந்தே  இயற்கைக்கும் நமக்கும் பிணைப்பு.. 

இதன்றியும்
குடும்பத்தினர், ஒன்று கூடி  இரவில் அதுவும் நிறை நிலா ஒளியில்  உணவருந்திய நாட்கள்  தான் குடும்பத்தின் இலக்கணம் பிரகாசித்தது..

அன்பும் பாசமும் நிறைந்திருந்த நாட்கள் அவை..
 

இன்றைக்குத்  தமிழ் மரபின்படி வீட்டு வாசலில் நிலாச் சோறு கொள்வார் உண்டோ?.. தெரியவில்லை..

கூட்டுக் குடும்பங்கள் கலைந்த போதே அது அழிந்து விட்டது..


அன்றைய குடும்பங்களில் 
சித்ரா பௌர்ணமியின் குதூகலம் நிலாச்சோறு என்ற பெயருடன்  பிணைந்திருந்தது..

குடிசையானாலும்  ஓட்டு வீடு என்றாலும் முன் வாசல் நிலாச்சோற்றுக்கான சொர்க்கபூமி.. 

காரை வீடுகளின் மாடித் தளங்களும் கதை கதையாய்ச் சொல்லும் நிலா ஒளியில் உணவருந்திய நாட்களை..


ஆற்றங்கரையில், ஆற்று மணற் திட்டுகளில் கூடிக் குளிர்ந்து நிலாச்சோறு உண்ட நாட்கள் பழைமையானவை..


சித்ரா பௌர்ணமி  நாளில்  கோயில்களில் பல்வேறு சிறப்பான வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன..


வீடுகளிலும் நிறை விளக்கு ஏற்றி தெய்வங்களை வணங்கி நிற்பர்..

பொதுவாக குல தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள் பௌர்ணமி.. அதிலும் சித்ரா பௌர்ணமி எனில் மிகவும் சிறப்பு..

நிறைநிலா நாளின் இரவுப் பொழுதை ஆற்றங்கரைகளில் கழிப்பதே ஒரு கலாச்சாரம்.. இப்படி குடும்பத்துடன் கோயில்களில் ஆற்றங்கரைகளில் மகிழும் பழக்கம் தமிழர்களிடையே இன்னும் மறைந்து விடவில்லை.. 

கொள்ளிடப் பேராற்றின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் நிலாச்சோறு விழா நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது..

கள்ளழகர் இறங்கிய வைகையில் நிலாச்சோறு  உண்பது பிரசித்தம்..

தஞ்சை பெரிய கோயிலில் - சித்ரா பௌர்ணமி அன்று கோயில் வளாகத்தில் பெருந்திரளாக மக்கள் கூடி, ஈசனை வணங்கிய பின்னர் கையோடு கொண்டு வந்திருக்கும் உணவை பகிர்ந்து உண்பதை பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கின்றேன்...

கால ஓட்டத்தில் இப்போது எப்படியோ..

சித்திரை மாதம் வசந்த காலத்துடன்  தொடர்புடையது.
இதனாலேயே கோயில் விழாக்கள் கோடை வசந்த உற்சவங்கள் எனப்பட்டன.. 

காவிரிப் பூம்பட்டினத்தில்   சித்திரை நிறை நிலா நாளினை ஒட்டி 28 நாட்கள் கொண்டாடப்பட்டதுவே இந்திர விழா..

திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக..  (32 - 34 வரிகள்)
- என்று  இந்திர விழா அறிவிப்பின்  (மணிமேகலை 3.3.3) போது மன்னன் வாழ்த்தப் பெற்றிருக்கின்றான்..
(திரு = திருமகள், விழை = விரும்பும், மூதூர் = பழைமை வாய்ந்த புகார் நகரம், ஏத்தி = வாழ்த்தி, மாரி = மழை.. கோள்நிலை = ஞாயிறு, திங்கள் முதலான கோள்கள், திரியா = மாறுபடாத, கோலோன் = செங்கோல் அறம் உடையவனாக)
(நன்றி - தமிழ் இணையம்)

சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென அந்நாள் - 64 (இந்திர விழவூர் எடுத்த காதை  - சிலப்பதிகாரம்)

(சித்திரை மாதத்துச் சித்திரை நாள் நிறைமதி சேர்ந்ததாக அந்நாள்)

என்று சிலப்பதிகாரம் பகர்கின்றது..
(நன்றி - தமிழ் இணையம்)

இந்த வரிகளுக்காக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் சற்று திளைத்திருந்தேன்..

நேற்று திங்கட்கிழமை திரு ஐயாற்றில் தேரோட்டம்..

ஒரு சில படங்கள் மட்டும் இன்றைய பதிவில்..




இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர் 
விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்..

வாழ்க தமிழ்..
வாழ்க நிலாச்சோறு..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. படங்கள் அழகு.  சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள் பற்றிய விவரங்கள் அருமை. 2016 சித்ரா பௌர்ணமி அன்றுதான் என் தந்தை எங்களை விட்டுப் பிரிந்தார்.

    பதிலளிநீக்கு
  2. சித்திரா பெளர்ணமியின் சிறப்புகளை படங்களுடன் சொன்னது அருமை. சித்திரா பெளர்ணமி நாளை சித்திரகுப்தரை வேண்டி விரதம் இருப்பார்கள்.

    சிதம்பரம் கோயில் போவோம் மாயவரத்தில் இருந்த போது. சித்திரகுபதரை வணங்கி வருவோம்.
    திருஐய்யாறு தேரோட்டம் படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான விடயங்கள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சித்ரா பவுர்ணமி விளக்கங்கள் அருமை. நிலாச் சோறு உண்ட பழைய நாட்கள் நினைவுக்கு வந்தது. சித்ர குப்த நயினார் நோன்பு அம்மா வீட்டிலிருக்கும் போது பாட்டியுடன் கடை பிடித்தோம் .இப்போது இயலவில்லை

    பதிவின் படங்கள் அனைத்தும் கண்களுக்கு நிறைவாய் உள்ளது. இன்றைய நாளின் விஷேடங்கள் குறித்து எல்லாவற்றையும் விபரமாக எழுதியுள்ளீர்கள். திருவையாறு தேரோட்ட காட்சிகளை கண்டு களித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  5. சித்திரா பெளர்ணமி நாளின் சிறப்புக்கள் அழகிய படங்களுடன் கவர்ந்தது.
    நிலாச் சோறு அழகாக கூறினீர்கள். அம்மா கையால் சாப்பிட்ட எனது சிறுவயது காலத்துக்கு இட்டுச் சென்றது.

    சித்ரா பெளர்ணமி நாள் எமது நாட்டில் அன்னையர் இல்லாதவர் விரதமிருந்து வரும் சிறப்பானநாள்.

    எங்கள் ஊர் நாச்சிமார் அம்மனுக்கும் பொங்கல் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..