ஞாயிறு, ஏப்ரல் 14, 2024

வருக வருக..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை முதல் நாள் 
ஞாயிற்றுக்கிழமை


அனைவருக்கும் அன்பின் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்


மணி மாடசாமி என
அணிகொண்ட அருள் தீபம்
பணிகின்ற நெஞ்சினில்
பிணிதீர்க்கும் ஒளிதீபமே.. 1

கொடி மாடசாமி என
மடிகாக்கும் மணிதீபம்
தடி கொண்டு தடை நீக்கி
குடிகாக்கும் சிவதீபமே..2

படிவாசல் வந்தார்க்கு
விடிவெள்ளி எனவந்து
பிடிசோறு தந்தருளும்
முடிகொண்ட குலதீபமே.. 3

சித்ரம் எனும் ரூபத்தில்
ஆனந்தத் திருமூர்த்தி
பாசமிகு காளியின்
பாலன் அல்லவோ..4

குலதெய்வத்தின் மீதான 
சொல்மாலையின் முழு வடிவம் 
அடுத்த பதிவில்!..


தமிழின் பன்னிரு மாதங்களில் சித்திரை முதல் மாதம்.. 

காலச் சக்கரத்தில் சூரியன் மேஷ ராசியில் திகழ்கின்ற காலம்..

அந்த நாட்களில் 
பங்குனியிலேயே புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாங்கி - சித்திரை முதல் நாளில் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலம் இட்டு
நல்ல விளக்கு ஏற்றி வைத்து இறைவனை வழிபட்டு அனைவரும் கூடியிருக்க வாசிப்பது  பழக்கமாக இருந்தது.. 

கோயில்களிலும்
புத்தாண்டு நாளில் சிறப்பு வழிபாடுகளுடன்
பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.. இந்நிகழ்வில் கலந்து கொள்வது சிறப்பு என்பர்..

இந்நாளில் குலதெய்வ வழிபாடு சாலச் சிறந்தது..


தன்னை நாடி வருகின்ற பக்தர் நலனுக்காக ஆண்டுதோறும் - மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை  பச்சை பட்டினி விரதம் இருக்கின்ற சமயபுரத்து அம்மன் விரதம் முடித்து திருவிழா காண்கின்றாள்.. சித்திரை (3) முதல் செவ்வாய் (16/4) அன்று திருத்தேரோட்டம்..


இவ்வருடம் ஸ்ரீராமநவமி சித்திரை 4  (17/4) புதனன்று அமைகின்றது.. 

தென்னகத்தின் பெருவிழா ஆகிய மதுரை சித்திரைத் திருவிழா பங்குனி 30 (12/4) வெள்ளிக் கிழமையன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது..


ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் பட்டாபிஷேகம் சித்திரை 6
(19/4) வெள்ளிக் கிழமையன்றும்

திருக்கல்யாணம் சித்திரை 8 (21/4) ஞாயிற்றுக் கிழமையன்றும் 

திருத்தேர் சித்திரை 9 (22/4) திங்கட் கிழமையன்றும்

ஸ்ரீ கள்ளழகர் வைகையில் இறங்குதல் சித்திரை 10  (23/4)
(சித்ரா பௌர்ணமி) செவ்வாய்க் கிழமையன்றும் நிகழ இருக்கின்றன..

முருகன் கோயில்களில் விசேஷமான சித்ரா பௌர்ணமி சித்திரை 10  (23/4) செவ்வாய்க் கிழமை..


சித்ரா பௌர்ணமி அன்று ஆற்று மணலில் குடும்பத்துடன் கூடி அமர்ந்து உணவு உண்ணுவது நமது கலாச்சாரம்..

சித்ரா பௌர்ணமி அன்று தான் ஸ்ரீ சித்ரகுப்தர் வழிபாடு..


சித்திரை 21 (4/5) ல் அக்னி நட்சத்திரம் தொடங்கி (வைகாசி 15 வரை) 14 நாட்களுக்கு நீடிக்கின்றது..

இந்நாட்களில் நீர், மோர், விசிறி - என, தானம் அளிப்பது நல்லது.

சித்திரை 18 (1/5) புதன் கிழமையன்று குரு பெயர்ச்சி.. இதைத் தவிர வேறு கிரகப் பெயர்ச்சி எதுவும் இந்த ஆண்டில் இல்லை..


" என் கடன் பணி செய்து கிடப்பதே.. " - என்று, சமுதாயப் பணிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஐயன் ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

அப்பெருமான் சிவசாயுஜ்யம் பெற்ற நாள் சித்திரை சதயம்.. 
இவ்வருடம் சித்திரை 20 (3/5) வெள்ளியன்று சதயம்..

புண்யங்களுக்கு உகந்ததான அக்ஷய திரிதியை சித்திரை 27  (10/5) வெள்ளி..

தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம் பூக்களுடன் புளி, வெல்லம் சேர்த்து ரசம் வைப்பதும் பச்சடி செய்வதும் மரபினைச் சார்ந்த ஆரோக்ய வழிபாடு..

பொதுவாக இந்த ஆண்டும் மக்களுக்கு சற்று பிரச்னைகளை தரக்கூடியதாக இருக்கும் என கணிக்கப் பெற்றுள்ளது..


ஸ்ரீ குரோதி வருடத்திற்கான வெண்பா

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார் மிக்க
அற்பமழை பெய்யுமே மேகங்குறையுமே
சொற்பவிளை உண்டெனவே சொல்..
- என்கின்றார்
இடைக்காட்டு சித்தர்..

இருப்பினும்,


நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே...
(அருணகிரிநாதர்)

எனவும்,


நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே 
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே..
(திருஞானசம்பந்தர்)
 
எனவும், 
அருளப் பெற்ற 
திருப்பாடல்களை சிந்தித்திருந்து 
நலம் பெறுவோம்..


சித்திரையை வரவேற்போம்..
சீர்மிகு வாழ்வில் மகிழ்ந்திருப்போம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
**

7 கருத்துகள்:

  1. மணி மாடசாமி பாமாலை அருமை.
    சித்திரையின் சிறப்பு பற்றி சொன்னது அருமை.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. எந்த விபரீதம் நடந்தாலும் நம்மால் மாற்ற முடியாது.  ஒவ்வொரு வருடமும் எத்தனையோ சிரமங்களைத் தாண்டி வருகிறோம்.  ஆயின், இதையும் கடப்போம்.  கடந்துதானே ஆகவேண்டும்!

    அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதானமான கருத்து..

      தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. க்ரோதியை க்ரோதம் என்று பொருள் கொண்டு எதிர்மறை பலன் சொல்கிறார்கள்.  உண்மையில் அப்படி இல்லை, கோரக்க சித்தர் அந்த நாளிலேயே வடமொழிச் சொல்லுடன் இணைந்து பாடல்கள் புனைந்தவர்.  அதுபோல இங்கு க்ரோ என்பதற்கு செய்து முடி என்று பொருள் என்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ரோதம் என்ற பொருள் தான் என்றாலும் இன்றைய வாழ்வில் நமக்கான சங்கேதம் இதற்குள் இருக்கின்றது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. சித்திரை புதுவருடம் பற்றி நல்ல பகிர்வு .
    ' நாள் என்செய்யும் கோள் என் செய்யும்'........" நல்லது நடக்க அவனருளை வேண்டி நிற்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..