நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 5
திங்கட்கிழமை
ஸ்ரீ நந்திகேசன்
ஸ்ரீ சுயம்பிரகாக்ஷினி தேவி
திருக்கல்யாண அழைப்பிதழ்
பாருலகைப் புரந்தருளும் ஸ்ரீஸ்ரீ பார்வதி பரமேஸ்வராளின் ப்ரியபுத்திரரும் ஆனைமுக அறுமுக அருட்செல்வங்களின் அன்புச்சகோதரரும்
திருக்கயிலாயத்தின் அதிகார சிவகணத்தாரும் ஆகிய நந்தியம்பெருமானுக்கும்
ஸ்ரீ வசிஷ்ட முனிவரின் பௌத்திரியும், வியாக்ரபாத முனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் ப்ரிய சகோதரியுமாகிய சுயம்பிரகாஷிணி தேவிக்கும்
பங்குனி சுக்ல பட்ச - நவமி திதியும் புனர்பூசமும் கூடிய சுபயோக சுபவேளையில்
திருக்கல்யாணம் நிகழ இருக்கின்றது..
அவ்வேளையில் தாங்கள் தங்களது குடும்ப சகித இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து தரிசித்து இன்புற வேணும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்..
இதன்படி சுப முகூர்த்தம் பங்குனி வளர்பிறை - நவமி திதியும் புனர்பூச நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினம் ஆகிய செவ்வாய்க்கிழமை. (ஏப்ரல் 19) முன்னிரவு 7.30 மணியளவில் திருமழபாடி திருக்கோயிலில் நிகழ்கின்றது..
..
அனைவரும் வருக!..
நாம் சிவாலயங்களுக்குச் செல்லும் போது சில விஷயங்களைக் கவனிக்கலாம்...
முதல் வணக்கம் - விநாயகப் பெருமானுக்கு!..
அதுவும் சில திருக்கோயில்களில் - வெளியே தீர்த்தக் கரை விநாயகராக இருப்பார். அல்லது ஸ்தல விநாயகராக மூலஸ்தானத்தில் விளங்கும் சிவபெருமானை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார். அல்லது ஆலயத்தின் தலைவாயிலில் - ராஜகோபுர கணபதியாக கிழக்கு முகமாக காட்சி தருவார்..
பெரும்பாலும் நாம் ராஜகோபுரத்தைக் கடந்தபின் கண்டு வணங்குவது அதிகார நந்தி எனும் ஐயன் நந்தியம் பெருமானைத்தான்!.. இவருடைய அனுமதியுடன் தான் நாம் சிவதரிசனம் செய்கின்றோம் என்பது மரபு. அத்தனை பெருமை இவருக்கு!..
இன்னும் சொல்லப்போனால் - நமக்கு சிவதரிசனம் செய்விப்பதே - ஸ்ரீ நந்தியம் பெருமான் தான்!.. அதனால் தானே - எல்லாம் வல்ல எம்பெருமானே - முன் நின்று இவரது திருமணத்தை நடத்தி வைத்தார்!..
திருக்கயிலை மாமலை!.. அந்தி மயங்கும் நேரம்!..
பொன்னாக ஒளிர்ந்து கொண்டிருந்த மாமலையை கதிரவன் தன் திருக்கதிர்களால் ஆராதனை செய்ய - அமரர்களும் மகரிஷிகளும் கூடி வந்து எம்பெருமானையும் அம்பிகையையும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்..
அவ்வேளையில் பொற்பிரம்புடன் சேவை செய்து கொண்டிருந்த நந்தியம் பெருமானுக்கு, ''..நாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன!..'' - என்று ஒரு ஆவல் தோன்றியது.
அருகிருக்கும் நந்தியின் ஆவலை உள்ளுணர்ந்த ஈசனும் அம்பிகையும் - ''..அவ்வாறே ஆகுக!..'' - என்று அருள் புரிந்தனர்.
அப்போது நந்தி, ''..ஐயனே!. சர்வசதாகாலமும் தங்கள் திருவடித் தாமரைகளின் அருகிலேயே காத்துக் கிடக்கும் அடியேன் மனதில் இப்படியான எண்ணம் எப்படித் தோன்றியது!.. ஏன் தோன்றியது?.. பூவுலகில் எனக்கு யாரைத் தெரியும்?.. தங்களைப் பிரிந்து நான் எப்படிச் செல்வேன்?.. எங்கு செல்வேன்?.. என்னைப் பொறுத்தருளுங்கள்!..'' - என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்.
அதைக் கண்டு உளம் நெகிழ்ந்த அம்மையும் அப்பனும் - ''..அஞ்சற்க மகனே!.. தர்மத்தின் மறு வடிவம் நீ அல்லவோ!.. தர்மத்தைப் புத்திரனாகப் பெற வேண்டி - கங்கையினும் மேலான காவிரிக் கரையில் தவம் இயற்றும் சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் வந்து ஆட்கொள்வோம்!..'' - என்று திருவாய் மலர்ந்தருளினர்.
இதன்படி, திருஐயாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர் செய்த தவம் நிறைவேறும் புண்ணிய வேளை வந்தது.
''.. சிலாத முனிவரே!.. நீர் இதுகாறும் செய்த தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!..'' - என அறிவிக்கப்பட்டவுடன், பெருமகிழ்ச்சியடைந்த சிலாத முனிவர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாக பூமியை உழுதிட - பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது.
ஆவலுடன் முனிவர் பெட்டகத்தைத் திறந்திட - அதனுள், ரிஷப திருமுகமும் நெற்றிக் கண்ணும் நான்கு திருக்கரங்களும் கொண்டவராக - கோடி சூர்ய ப்ரகாசம் என நந்தீசன் தோன்றினார்..
அப்போது பூமி எங்கும் சுகந்த மணம் வீசியது. பன்னீர் மழையாகப் பெய்தது. தேவ துந்துபிகள் முழங்கின. ஒருகணம் முனிவர் மருண்டார். மறுகணம் அவரது மருட்சி மாறிட, மழலையாகத் தவழ்ந்து - பாலகனாக - முனிவரின் திருக் குமாரனாக எழுந்தார் - நந்தீசன்.
சிலாதரின் மருட்சி அகலும் வண்ணம் - மறைபொருளாக தேவ ரகசியங்களை ஐயாறப்பர் அசரீரியாக உணர்த்தி அருளினார்.
இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட சிலாதனர் மனம் கலங்கினார்..
காரணம் - இறைவன் ஆணைப்படி நந்தீசனின் ஆயுள் பதினாறு வருடங்கள் தான்!..
மனம் கலங்கி வருந்திய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்த நந்தீசன், தவத்தைச் செய்து சிவத்தை அடைய விரும்பினார். தந்தையான சிலாதரிடம் அனுமதி பெற்று கடும் விரதங்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டார்.
திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்றபடி எண்ணாயிரங் கோடி முறை சிவ பஞ்சாட்சர மகா மந்திரத்தை உச்சரித்து, சிவசக்தி தரிசனம் பெற்றதுடன் ஜபேசன் எனத் திருப்பெயரும் சூட்டப்பட்டார்.
அப்போது - மந்திர ஜபம் செய்த போது கழுத்தளவு நீரில் நின்றிருந்ததால் - மீன்களால் அரிக்கப் பட்டு, எலும்புக்கூடாக இருந்த நந்தீசனின் மேனியைக் கண்டு உமையம்மை உளம் உருகினாள். அன்னையின் மனம் கசிந்தது.
அதனால் - அம்பிகையில் திருத் தனங்களில் இருந்து வெள்ளமெனப் பாலமுதம் பொங்கிப் பிரவாகித்து - நந்தீசனின் உடலை நனைக்க - நந்தீசன் முன்னை விட பேரழகுப் பிரகாசமான திருமேனியைப் பெற்றனர்.
எம்பெருமான் - நந்தீசனை - சிவகணங்களின் தலைவன் என, பட்டாபிஷேகம் செய்து வைத்தார். சகல தேவர்களும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்..
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..
திருமூலர் அருளிய திருமந்திரத்தின் முதற்பாடல்..
நந்தி மகன் தனை - எனில் விநாயகர்
சிவபெருமானின் மகன்
என்று குறிக்கப்படுகின்றார்..
ஆக, நந்தி என்பது ஈசனின் திருப்பெயர்...
ஞான சம்பந்தரும் இதனைக் குறித்தருள்கின்றார்..
இப்படியான ஈசன் பெயரைக் குறித்தே
நந்திகேசன் - என, வணங்கப்படும்
ஜபேசனது பெருமைதான் என்னே!..
பொற்பிரம்பினையும் மான் மழுவையும் சந்திர கலையையும் வழங்கினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும் - அதிகார நந்தி எனும் பெரும் பதவியினையும் அருளி, நந்தீசன் மீது பொன் மாரி பொழிந்தார்.
அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார் - நந்தீசன்.
இந்த வேளையில் சிலாத முனிவர் - சிவபெருமானைப் பணிந்து - ''..ஐயனே!.. என் மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன். அருள் புரிக.. ஸ்வாமி!..'' - என்று தன் ஆவலை வெளியிட்டார்.
உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது.. பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!..
''..எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்!..'' - என்று சிவபெருமானுக்கும் மகிழ்ச்சி!..
''.. காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் - அன்பன் வியாக்ரபாதனின் மகள் சுயம்பிரகாஷினியை மணம் பேசுக!.. யாம் ஐயாற்றிலிருந்து எழுந்தருளி மணவிழாவினை நிகழ்த்துவோம்!..''
- என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அம்பிகைக்கு ஆனந்தம்.. வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ இருக்கின்றது என்று!..
அப்புறம் என்ன!..
திருமழபாடி முழுதும் கோலாகலம் தான்!.. கொண்டாட்டம் தான்!..
அதன்படி, நாளை - பங்குனி புனர்பூசம்..
திரு ஐயாற்றிலிருந்து, அம்பிகையும் ஐயாறப்பரும் பொற்பல்லக்கில் எழுந்தருள -
நந்தீசன் - கிரீடமும் பொற்பிரம்பும் தாங்கியவராக வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து உடன் வருகின்றார்..
சிலாத முனிவருடன் மற்ற முனிவர்களும் வேத மந்த்ர கோஷங்களுடனும் சீர்வரிசைப் பொருட்களுடனும்
இதோ புறப்பட்டு விட்டனர்- திருமழபாடியினை நோக்கி!..
கடுவெளி, வைத்யநாதன் பேட்டை - வழியாக கொள்ளிடப் பேராற்றில் இறங்கி வடகரை திருமழபாடிக்கு வந்து சேரும் அனைவரையும் அன்புடனும் ஆதுரத்துடனும் வரவேற்க -
ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானும் - திருமழபாடியின் மக்களும் திரண்டு வந்து காத்திருக்கின்றனர்.
நாளை
முன்னிரவு 7.30 மணியளவில்
திருமாங்கல்யதாரணம்!..
அனைவரும் வருக!..
அருளமுதம் பெறுக!..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நந்தியம்பெருமானை வணங்கி நன்மை எல்லாம் பெறுவோம்.
பதிலளிநீக்குநந்தியெம்பெருமானின் திருமணம் பற்றி முன்பு நீங்க விரிவாக எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது துரை அண்ணா. இப்போதும் படங்களுடன் விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குகீதா
நாளை வந்துடறோம்! கல்யாண சாப்பாடு உண்டுதானே! துரை அண்ணா!!!! (ஹூம்! இங்க கூட இந்த கீதாக்கூ எங்க போனாலும் சாப்பாடுதான்! முதல்ல தோணுது!)
பதிலளிநீக்குகீதா
நந்தி என்றாலே தஞ்சை நந்தீஸ்வரர்தான் நினைவுக்கு வருவார். நேற்றைய பதிவு நந்தீசனைப் பற்றியும் இன்று அவரது திருமண அழைப்பிதழ் விவரங்கள் சொன்ன விதம் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குநந்தியம்பெருமான் அனைவருக்கும் நல்லதே நல்கட்டும்.
பதிலளிநீக்குநந்தியம்பெருமான் விரிவான தகவல்களுடன்.
பதிலளிநீக்குஅவரருளை வேண்டி நிற்போம்.
நந்தியம்பெருமான் வரலாறும் திருமண செய்தியும் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் இவ் விழாவினை பார்த்த நிறைவை தருகிறது.