ஞாயிறு, மார்ச் 10, 2024

சிவ தரிசனம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 27
ஞாயிற்றுக்கிழமை


மகா சிவராத்திரி அன்று  தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் முதற்கால தரிசனம்..

மராட்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.. பல காலம் கழித்து திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.. திட்டு திட்டாக வேலைகள்.. எனவே படங்கள் எடுக்கவில்லை..







அடுத்து இரண்டாம் கால தரிசனம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வர ஸ்வாமி கோயில்.. கடுமையான கூட்டம்.. திருச்சுற்றில் வில்வ மரத்தின் கீழாக ஆதி லிங்கம்...நாமே மலர் சாற்றி வணங்கலாம்.. நானும் அவ்விதம் செய்தேன்..



ஸ்ரீ சிவவாக்கியர்
மூன்று வகையான சித்ரான்னங்கள் வழங்கப்பெற்றன... நாங்கள் தளிகேஸ்வரர் கோயிலில் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் பெற்றிருந்ததால் இதில் கலந்து கொள்ள வில்லை..








தஞ்சை நாட்டியப் பள்ளிகளின் நாட்டியாஞ்சலி..
சிறப்பாக இருந்தது..

அடுத்து மூன்றாம் காலத்தில் பூக்கொல்லை ஸ்ரீ வேதவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயில்.. திருவாசக முற்றோதல் செய்து கொண்டிருந்தனர் அடியார்கள்.. இங்கு  மூன்றாம் கால வழிபாட்டில் 108 சங்காபிஷேகத்துடன் நவகலச அபிஷேகமும் நடத்தப்பட்டது..




இந்தக் கோயில் வடவாற்றின் கரைக்கு பக்கத்தில் அமைந்துள்ளது.. சிறிய கோயில் தான்..

கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோயிலின் புனர் நிர்மாணத்தில் நானும் சிறிது உதவி இருக்கின்றேன் என்பதில் எனக்கு ஆத்ம திருப்தி..

பாவா அதிஷ்டானம்

நிலவறை தரிசனம்
அருகில்  ஸ்ரீ பஞ்சநத பாவா ஸ்வாமி அதிஷ்டானம்.. இங்கும் நான்கு கால அபிஷேகம்.. அதிஷ்டானத்தின் கீழ் ஏழடி ஆழத்தில் உள்ள நிலவறையில் ஜோதி தரிசனம்..

ஸ்ரீ பஞ்சநத பாவா

இன்று மாசி மாத அமாவாசை.. ஸ்ரீ பாவா ஸ்வாமிகளின் குருபூஜை..

ஸ்ரீ அமிர்தவல்லி

சென்ற ஆண்டு திருக்கல்யாணம்
அடுத்து வடவாற்றின் கரையில் ஸ்ரீ அமிர்தவல்லி உடனுறை ஸ்ரீ சிதானந்தேஸ்வரர் கோயில்.. 







மூன்றாம் கால வழிபாட்டில் 108 கலசாபிஷேகம்.. இக்கோயிலிலும் நாட்டியாஞ்சலி நிகழ்த்தப்பட்டது..

இக்கோயிலில் ரோமரிஷியின் அதிஷ்டானம் உள்ளது..

இந்தக் கோயிலுக்குப் பின்னால் தான்  தஞ்சை மகா மயானம்..  இக்கோயில் மிகச் சிறியது.. தெற்கு வாசலில் அமிர்த புஷ்கரிணி.. இங்குதான் ஸ்ரீ நீலமேகப் பெருமாளுக்குத் தீர்த்தவாரி..

இக்கோயிலில் ராணி யமுனாம்பாள் தேவிக்கு திருமேனி அமைந்துள்ளது..


அடுத்து மூன்றாம் கால வழிபாட்டில் வலம்புரி கிராமத்தில் ஏக மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீ வலம்புரி நாதருக்கு அன்பர்கள் அவரவரும் பாலபிஷேகம் செய்விக்கும் வாய்ப்பு நல்கப்பட்டது.. 

அடியேனுக்கும் நல்வாய்ப்பு கிட்டியதில் ஆனந்தம்.. அன்றைய பகலில் தான் - தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபர மணலாற் கூப்பி - என்று சண்டீச நாயனார் திருப்பாடலை பாராயணம் செய்திருந்தேன்..

அங்கிருந்து மீண்டும் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.. ஸ்வாமி அம்பிகையுடன் நான்காம் காலத்திற்கு முன்பாக திருவீதி எழுந்தருளியிருந்தார்..



ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் நான்காம் கால தரிசனம்.. தீப ஆராதனை.. 

பொழுது விடிந்து கொண்டிருந்தது.. அர்த்தஜாம பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும்  சர்க்கரைப் பொங்கலும் பாலும் பிரசாதமாக வழங்கப்பட்டன..

ராஜராஜேஸ்வரத்திற்குச் செல்வதற்கு விரும்பினேன்.. அங்கே மிகப் பெரும் திரள்.. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாலையில் கடுமையான நெரிசல் என்று நண்பர்களும் கூறினர்..

மகா சிவராத்திரி வைபவத்தின் தொடர்ச்சியாக தஞ்சை
ராஜராஜேஸ்வரத்தில் எதிர்வரும் 14/3 வரை பிரகந்நாட்யாஞ்சலி நிகழ இருக்கின்றது..

எனினும்,

இந்த அளவுக்கு இந்த ஆண்டு பேறு பெற்றதில் மகிழ்ச்சி..

குறை நீங்குதற்காக சிந்தித்திருந்தது மனம்..

எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்..
**

தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம்ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே. 4/49/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. சிவராத்திரி பதிவு சிறப்பு.  நான்கு கால பூஜைகளும் வெவ்வேறு இடங்களில் தரிசனம் பெற்றது அதனினும் சிறப்பு.  படங்கள் நன்றாக இருந்தன.

    பதிலளிநீக்கு
  2. சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்து இருக்கிறது. எல்லா கோயில்களிலும். நீங்களும் கலந்து கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டது அறிந்து மகிழ்ச்சி.
    அன்று நாள் முழுவதும் சிவசிந்தனையில் இருந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இறைவன் நம் குறைகளை களைவார்.
    மன நிம்மதி, மகிழ்ச்சி இவற்றை அருள்வார்.

    படங்கள் எல்லாம் மிக அருமை. இறையருளால் என் பேத்தியும் மூன்று கோயில்களில் நாட்டியாஞ்சலி செய்தாள்.

    பதிலளிநீக்கு
  3. சிவராத்திரி சிறப்பான நாளில் வில்வஅர்ப்பணம்,பாலாபிஷேகம் செய்ய குடுத்து வைத்திருக்க வேண்டும். அவனருளால் உங்களுக்கு இரண்டுமே கிடைத்திருக்கிறது அவனருள் கிடைத்தவர் நீங்கள்.
    ஓம் சிவாய நமக.

    உங்கள் தரிசனங்களை எங்களுக்கும் பல படங்களுடன் காண தந்து, நாங்களும் தரிசித்து வணங்கினோம் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தரிசனம் கண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..