நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 21
திங்கட்கிழமை
தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வம் ஆகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வும் ஆகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியும் ஆகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மையாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள்
நின்றவாறே.. 6/94/5
-: திருநாவுக்கரசர் :-
தலைவாசலில் கோலமிடுவதும் வாசல் நிலைக்கு மஞ்சள் பூசுவதும் பூஜை மாடத்தில் விளக்கேற்றுவதும் கணவனுக்கு இலையில் அன்னமிடுவதும் இல்லத்தரசிக்கு மட்டுமே உரியவை..
வீட்டில் பணியாளர் இருந்தாலும் அவர்கள் இந்த நான்கையும் செய்வது கூடாது..
இதைப் போல வேறொன்றும் இருக்கின்றது ..
கணவனுக்குப் படுக்கை இடுவதும்.. அது கோரைப் பாய் என்றாலும் சரி வேறுவகை விரிப்புகளாக இருந்தாலும் சரி..
பொதுவாக -
கிழக்குத் திசையில் தலை வைத்துத் தூங்குவது நல்லது..
கிழக்கே தலை வைத்துத் தூங்குவது நல்லது என்றால் அதைவிட நல்லது பாடங்களைப் படிப்பது.. கிழக்கு முகமாகப் படிக்கும் போது, நினைவாற்றல் அதிகரிக்கின்றது.. படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்..
கிழக்கே தலை வைத்துத் தூங்குவது நல்லது என்றாலும் ஒவ்வொரு நாளும் சூர்ய உதயத்திற்கு முன்பாக எழுந்து விட வேண்டும்..
முடியுமா!?..
முடியாதென்றால் விட்டு விடுங்கள்!..
தெற்குத் (பித்ரு) திசையில் தலை வைத்து (வடக்குத் திசையில் கால் நீட்டி) தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி தேடி வரும்.. மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்..
தலை வைத்துத் தூங்குவதற்கு மேற்குத் திசையும் உகந்ததே.. மேற்குத் திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பெரும் பணக்காரர்களாக பேரும் புகழும் பெற்றிருப்பார்களாம்...
ஆனால் ஒன்று - மேற்கில் தலை வைத்து சூர்யோதய திசையில் (இந்திர திசை) கால் நீட்டித் தூங்குபவர்கள் நள்ளிரவுக்குப் பின் மூன்று மணிக்கு முன் எழுந்து விட வேண்டும்..
இல்லாவிட்டால் புகழ் பொருள் எல்லாமும் புகையாய்ப் போய் விடுமாம்..
அடப் போங்கப்பா.. நிம்மதியாக தூங்க விடாம!..
வடக்கே தலை வைத்து தூங்கினால் ஆரோக்கியம் கெடும்..
கெட்ட கனவுகள் வரும்.. செல்வம் விட்டு விலகும்.. குடும்பத்தில் நிம்மதி குறையும்..
கெட்ட கனவுகள் என்றால்?..
பழைய புதிய - திரைத் தாரகைகள் வருகின்ற மாதிரி இல்லை..
பேய் பிசாசு ஆவிகள்!..
தவிரவும்
வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளன...
எதிர் எதிர் துருவங்கள் தான் ஈர்ப்புடையவை. ஒரே முனைகள் ஈர்க்கப்படுவது இல்லை.. துருவங்களில் இடையூறு ஏற்பட்டு மின்னோட்டம் தடைப்படும் என்பது அறிவியல்..
நமது தலையில் நேர் மின்னோட்டமும், பாதங்களில் எதிர் மின்னோட்டமும் உள்ளது..
வடக்கே தலை வைத்துப் படுக்கும் போது உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்...
இதற்குத்தான் முன்னோர் சொல்லி வைத்தனர் வடக்கே தலை வைக்க வேண்டாம் என்று..
அட.. இங்கேயும் நிம்மதி இல்லையா?..
பித்ரு திசை ஒன்றுதான் சரி.. தாத்தாவும் ஆத்தாவும் நல்லவங்க.. நீ நல்லா தூங்குடா செல்லம் ன்னு அவங்க சொல்றது கேக்குதே!..
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் - என்றும் துணை இருப்பேன்..
-: கண்ணதாசன் :-
ஃ
எல்லாஞ் சரிதான்.. நேத்து எந்தப் பக்கமா சாப்பிடணும் ன்னு குழப்பி விட்டுட்டு இன்னிக்கு தூக்கத்துல கைய வச்சாச்சா.. இனி நிம்மதியா தூக்கம் வந்த மாதிரி தான்..
அங்க இங்க பொழப்புக்காக ஊர் ஊராப் போயி கிடைச்ச லாட்ஜ்ல தங்கறப்போ திசைய எல்லாம்
ஞாபகம் வெச்சிக்கிட்டு தூங்க முடியுமா?.. நம்ம சவுரியத்துக்கு கட்டில இழுத்துப் போட்டுக்க அவிங்க உட்டுவாங்களா!?..
ஒருநாள் சில நாள் எனில் பிரச்னை இல்லை.. எனினும் லாட்ஜ்களில் அரங்கேறுகின்ற அபச்சார -
அநாச்சாரங்களைப் பற்றித் தெரியுமா?.. அங்கே தங்கி விட்டு வீடு திரும்பும் போது நம்முடனேயே நம் வீட்டுக்கு வருகின்ற துஷ்டங்களைப் பற்றித் தெரியுமா?..
தெரிந்திருந்தால் அதிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது..
மேல் விவரங்களுக்கு அருகில் இருக்கின்ற அம்மன் கோயிலில் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து அம்மனிடம் வழி கேளுங்கள்..
அவள் வழி காட்டுவாள்!..
ஓம்
சக்தி ஓம் சக்தி
எண்திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/9
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
நல்ல தகவல்கள்தான். நீங்கள் சொல்லியிருப்பது போல மேன்ஷன்களிலும், ஒண்டுக்குடித்தனங்களிலும் தங்கி இருப்பவர்கள் என்னதான் செய்வார்கள்!
பதிலளிநீக்குதிசைகளைப் பழகிக் கொள்ள வேண்டியது தான்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நல்ல தகவல்கள். முடிந்தவரை கடைபிடிக்கலாம். எது எப்படி இருந்தாலும் இறைவன் விருப்பம் ஒன்று இருக்கிறது . அது படித்தான் நடக்கும். தாய் தான் காப்பற்ற வேண்டும். அவரிடம் கேட்க சொன்னது நல்லது.
பதிலளிநீக்கு/// எது எப்படி இருந்தாலும் இறைவன் விருப்பம் ஒன்று இருக்கிறது . அது படித்தான் நடக்கும். ///
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ...
தகவல்கள் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..
நீக்குதிசையும் தூக்கமும் பற்றி நல்ல பல தகவல்கள் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..
நீக்குதகவல்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நல்ல நல்ல தகவல்கள். எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம் என்ற சிறப்பு பதிவுக்கு நன்றி. அனைவரும் இதை கடைப்பிடித்தால் உடல் நலத்திற்கு நல்லது. பொதுவாக இரவு ஐந்தாறு மணி நேரம் எந்த வித கனவுகளின்றி நிம்மதியாக தூக்கம் வந்தாலே உடல் நலத்திற்கு நல்லது. அந்த பாக்கியத்தை அம்மன் அனைவருக்கும் அருள வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
தங்களின் இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.