வியாழன், பிப்ரவரி 01, 2024

புள்ளிருக்கு வேளூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 18
வியாழக்கிழமை

புள்ளிருக்கு வேளூர்


தேன் ததும்பும் அழகிய கொன்றையுடன்  ஊமத்தை மலர், நிலவு எனும்  இவை அமைந்து விளங்குகின்ற சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்த சம்பாதி சடாயு எனும் இருவர் வழிபட அவர்கட்கு அரசன் என்றானவனும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற தலம் - புள்ளிருக்கு வேளூர்..

இதன் பெருமைகள் யாதெனில்,

தையல் நாயகியைத் திரு மேனியின் ஒரு பாதியிலும் கங்கையாளை திருச் சடையின் மேலும் கொண்டு   
ஆன்மாக்களின் ஆணவத்தை பிச்சையாக ஏற்கின்ற அந்தண் அறவோன் ஆகிய எம்பெருமான் - வீற்றிருக்கின்ற திருத்தலம்..

தேவர்கள்  இங்கே 
தங்கியிருந்து  நாள்தோறும் நீராடி நறுமலர் தூவி வழிபடப் பெற்ற இறைவன் இங்கே விளங்குகின்றான்..

பெரியதொரு யானையினை உரித்து அதன் தோலை தனது திருமேனியின் மேல் ஆடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும் ஆகிய ஈசனின் திருவூர்.. 

கீதங்களைப் பாடி வணங்குகின்ற அடியவர்கள் திருவடிகளைத் தொழுமாறு பரஞ்சோதி என இரைவன் விளங்கி நிற்பதும் இங்கு தான்..

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர் மீது தீவினைத்  துன்பங்கள் வாராமல் காப்பவனும், சிவ தர்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் ஆகிய இறைவன் இங்கே தான் உறைகின்றனன்.

யானையின் தோலால் தன்னுடலை மூடிக் கொண்டு கையில் அழகாக அனலை ஏந்தி,  பலியேற்று பித்தரைப் போலத் திரிகின்ற பெருமானின் திருத்தலம் இதுவே..

பண்ணிசை பாடி வழிபடுகின்ற அடியவர்களின் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி கண்டன் விளங்குகின்ற திருத்தலம் இது..

பேதமுற்றுத் திரிந்த அசுரர்களின் முப்புரங்களையும் கொடுங் கணையால் வெந்து அவியுமாறு செய்த வில்லாளியும், கருணை மிகு கண்களை உடையனும் ஆகிய ஈசனின் திருவூர் இது..

சினங்கொண்டு வேகத்துடன் பெருகி வந்த கங்கையை நறு மணம் கமழும் தனது சடைக்குள் அடைத்துத்  தடுத்துத் தாங்கியவராகிய எம்பெருமான் உறைகின்ற திருத்தலம் இது தான்..
 

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதாய்  உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச் சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 10

இங்கு உறைகின்ற சிவபெருமானைத் தான்  
ஆதித்தனின் தேர்ச்சாரதி அருணனின் பிள்ளைகளாகிய சம்பாதியும் ஜடாயுவும் வழிபட்டிருந்தனர்..

புள்ளிருக்கு வேளூர் ஈசன் - நாள்தோறும் தவறாமல் யோசனை தூரம் சென்று மலர் பறித்து வந்த   சம்பாதியால் வணங்கப்பட்டவன்..

(யோஜனா என்பது தொலைவினைக் குறித்த வேத கால அலகாகும்..

ஒரு யோஜனா என்பது வேத கால அளவின்படி
12.2 கிமீ ஆகும்.. 

இதனை 8 கிமீ என- நாட்டைப் பிடித்த வெள்ளையர்கள் - தமது வசதிக்காக மாற்றியமைத்துக் கொண்டனர்..


இப்படியான -
புள்ளிருக்கு வேளூர் இறைவனைத் தான் -
சீதையைக் கடத்தி வந்த ராவணனை
ஸ்ரீராமபிரானுக்காகத் தாக்கிப் புடைத்து ராவணனின் செருக்கை அழித்த ஜடாயு வழிபட்டிருந்தான்..

பிறக்கும் பிறப்பை நீக்கி அருள்பவனும், தீவினை காரணமாக வருகின்ற நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள் புரிபவனும், மெய்யெலாம் வெண்ணீறு விளங்குகின்ற திருமேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித் தொண்டு பூண்டிருக்கும் -  மணங்கமழ் பூம் பொழில் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய கவுணியர் கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிக மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபட வல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை என்பதாக நூற்பயன்.. 

 -: தொகுப்பில் துணை :-
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

திருஞான சம்பந்தர்
அருளிச் செய்த
திருப்பதிகம்
அடுத்தொரு பதிவில்..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



8 கருத்துகள்:

  1. வணங்கிக் கொள்கிறேன். ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமச்சிவாய…. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. நிறைய அருமையான தகவல்கள். பதிகம் பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை புள்ளிருக்கு வேளூரில் குடி கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய நல்லதொரு தகவல்கள். ஸ்ரீ வைத்திஸ்வரரையும் ஸ்ரீ தையல் நாயகி அம்மையையும் பக்தியுடன் வணங்கி கொண்டேன். சகல நோய்கள் தீர்த்தருளும் ஸ்ரீ வைத்தீஸ்வரன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஓம் நமசிவாய.. சிவாய நம ஓம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் பிரார்த்தனையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..