வெள்ளி, டிசம்பர் 01, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 15
வெள்ளிக்கிழமை

இன்று
பொதுத் திருப்புகழ்
( அகத்துறை பாடல்)


தானந்த தானத்தம் ... தனதான
 
நீலங்கொள் மேகத்தின் ... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ... தருள்வாயே..

வேல்கொண்டு வேலைப்பண் ... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ... குலகாலா
நாலந்த வேதத்தின் ... பொருளோனே
நானென்று மார்தட்டும் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நீல நிற மேகத்தைப் 
போன்று விளங்கும் மயிலின் மீது
நீ எழுந்தருளிய அழகைக்
 கண்டு மயங்கி

பேதைப் பெண்ணாகிய நான் 
உன்னிடம் மையல்
கொண்டேன்.. 

(எனது மயக்கம் தீரும்படிக்கு)
அழகிய உனது மார்பில் விளங்கும் 
நறுமணம் மிக்க மலர் மாலையைத் தந்து 
அருள் புரியமாட்டாயா..

சூரசங்கார காலத்தில்
பெருங்கடல் வற்றிப் 
போகும்படிக்கு உனது 
வேலினை எறிந்தவனே..

வீரமுடைய அசுர குலத்திற்கு 
யமனாக விளங்கியவனே..

நான்கு வேதங்களுக்கும் 
உட்பொருளாக விளங்குகின்றவனே..

எல்லா உயிர்களிலும் 
உள் நிறைந்து 
இருப்பவன் நான் - என்ற 
பெருமையுடன் மார்தட்டிக் 
கொள்ளும் பெருமாளே!..

முருகா.. முருகா..
முருகா.. முருகா..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. நீல மயில் மீது ஞாலம் வலம்வந்த நீதான் எமக்கருள வேண்டும் முருகா...

    பதிலளிநீக்கு
  2. கார்த்திகை வெள்ளி நாளில் கார்த்திகேயன் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு

  3. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.எல்லா உயிர்களிடத்தும் உள் நிறைந்து இருக்கும் பெருமானை வணங்கி மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழ் பொருளுடன் வாசித்துக் கொண்டேன் துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கார்த்திகை வெள்ளியில் அருமையான திருப்புகழ். நன்றி :)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..