வியாழன், நவம்பர் 23, 2023

பூந்தமிழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 7
வியாழக்கிழமை

நேற்று எபி யில் வெளியான
பதிவின் தலைப்பு
தேனொழுகும் தீந்தமிழே..

தமிழே தமிழே
தீந்தமிழே..
தவமாய்த் தழைத்திடும்
பூந்தமிழே!..


மீனழகும் மானழகும்
கானழகும் கவினழகும்
வானழகும் தானழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 1

புலர்கின்ற பொழுதழகும்
பொன்தூறல் வடிவழகும்
வார்க்கின்ற முகிலழகும்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 2

பொன்னழகாய் பூவழகாய்
பொலிகின்ற இதழழகாய்
இன்னழகாய் எதிரழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 3

கண்ணழகாய் காதழகாய்
காந்தளென்ற விரலழகாய்
பெண்ணழகாய் பேரழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 4

அழகழகாய் குழல்முடித்து
அகிலதனால் மணம் நிறைத்து
கழலதனால் கவிபடித்தால்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 5

வாளழகால் வாழ்ந்ததுவும்
நூலிடையால் தொலைந்ததுவும்
வேல்விழியாள் அணைந்ததுவும்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 6


வில்லழகும் வேலழகும்
விளையாடும் நல்லழகும்
சொல்லான சொல்லழகும்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 7

பெற்றதுவும் உற்றதுவும்
நற்றவமாய் கற்றதுவும்
குற்றங்கள் அற்றதுவும்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 8

செய்யழகாய் சேயழகாய்
மையழகாய் மணியழகாய்
அழகழகாய் அணியழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே.. 9

தையழகாய் தழையழகாய்
தாவிவரும் தனியழகாய்
மெய்யழகாய் பொய்யழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 10

ஊரழகாய் பேரழகாய்
திருவழகாய் கருவழகாய்
உயிரழகாய் உருவழகாய்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 11

நானழகாய் சொல்லுதற்கு
தானமிழ்தாய் வந்ததுவும்
நான்நலமாய் வாழ்வதற்கும்
தேனொழுகும் தமிழ் தீந்தமிழே!.. 12


பால் என்பது மொழி பஞ்சு என்பது 
பதம் பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ 
செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் 
என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே 
முத்தி காண்பதுவே?..
( கந்தர் அலங்காரம்)
**
 
அமுதே தமிழே நீ வாழ்க
அழகே உந்தன் புகவ் வாழ்க!.. 
***

10 கருத்துகள்:

  1. அருமை. அருமை. அந்த ஒரு வார்த்தை உங்கள் கற்பனையை தூண்டி விட்டது. அசத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் தமிழ் தான்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. 'தேனொழுகும் தீந்தமிழ்' அழகழகாய் அணியணியாய் தேனொழுக நிற்கிறது சுவைத்தோம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      வாழ்க தமிழ்..

      நீக்கு
  3. ஒரு பதிவின் தலைப்பால் நல்லதொரு கவிதை கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      வாழ்க தமிழ்..

      நீக்கு
  4. உங்கள் தேனொழுகும் தீந்தமிழ் கவிதை அருமை.
    கந்தர் அலங்கார பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// தேனொழுகும் தீந்தமிழ் கவிதை அருமை.. ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க தமிழ்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..