புதன், ஜூலை 26, 2023

ஆடிச் சுவாதி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 10
புதன் கிழமை


திருக்கயிலாய மாமலையின் பனித் திரளில் இருந்து சிவபெருமானது பார்வையினால் தோன்றியவர் சுந்தரர்..

ஈசனுக்கு அருகில் திருநீற்று மடல் தாங்கியிருந்தவர் சுந்தரர்..


தேவியின் பணிப் பெண்களாகிய கமலினி அநிந்திதா எனும் தேவ மங்கையர் கயிலாயத்தின் நந்தவனத்தில் மலர் கொய்தபோது
கண் இமைப்பொழுது அவர்களைக் கண்டு நோக்கியதால  புவியில் பிறக்கும்படி நேரிட்டது..

இறைவன் அருளாணையின்படி
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திரு ஆரூரில் பரவை நாச்சியாரை மணம் கொண்டு,


நாச்சியாரின் திரு மாளிகையிலேயே எழுந்தருளி
திரு ஆரூரில்  உறைந்தருளும் தியாகேசப் பெருமானை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார்..

அந்த வேளையில்
திருநாட்டியத்தான்குடி தலத்தில் வாழ்ந்து வந்த  கோட்புலியார் - இவர் முன்பொரு சமயத்தில் போர்த் தொழில் உடையவர் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் அருட்திறத்தைக் கேள்வியுற்று -

திரு ஆரூருக்கு வந்து ஸ்வாமிகளை வணங்கித் தொழுது தம்முடைய ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு பணிவுடன் 
அழைக்கின்றார்.  

சுந்தரரும் இசைவு கொள்ள கோட்புலியார் மகிழ்வுடன் தமது இல்லத்திற்கு விடைபெற்றுச் செல்கின்றார். 

சில தினங்களில் வன்தொண்டர் ஆரூரிலிருந்து புறப்பட்டுத் திரு நாட்டியத்தான்குடி தலத்தினை அடைகின்றார். 

எம்பெருமான் - இத்தலத்தில்
ரத்னபுரீஸ்வரர், மாணிக்கவண்ணர் - எனும் திரு நாமங்கள் கொண்டு அன்னை ஸ்ரீ மங்களாம்பிகையுடன் அருள் பாலிக்கின்றார்..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் வருகையை ஊர் மக்களுக்கு அறிவித்த கோட்புலியார்  தமது இல்லத்தையும் வீதியினையும் நல்ல முறையில் அலங்கரிக்கின்றார்..

ஊரின் எல்லையில் தம்பிரான் தோழரைக் கண்டு மனமகிழ்ந்து மேள தாள சிவ கோஷங்களுடன் வரவேற்று தம் மனைக்கு அழைத்துச் செல்கின்றார்.. 

ஸ்வாமிகளை தங்கப் பலகையில் எழுந்தருளச் செய்து,  திருப்பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்து சிவானந்தம் கொள்கின்றார். 

ஸ்வாமிகளுக்குத் திருவமுது செய்விக்கின்றார். 
தம்முடைய புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் அழைத்து சுந்தரரைப் பணியச் செய்கின்றார்.. 

அத்துடன்,
" அடியவனின் புதல்வியராகிய இவர்களைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு அருள வேண்டும்.. "- என்று விண்ணப்பமும் செய்து கொள்கின்றார்.      

அது கேட்ட சுந்தரர், பெருங் கருணையுடன் அம்மங்கையர் இருவரையும் தம்முடைய புதல்விகளாக அறிவித்து -  ஏற்றுக் கொண்டு இரும்பூது எய்துகின்றார்.. 

சிங்கடி, வனப்பகை இருவரையும் - தம் மடிமேல் இருத்தி ஆசி கூறி அருள்கின்றார்..

பின்னர் அனைவருடனும்  திருக்கோயிலுக்குச் சென்று, ஈசன் எம்பெருமானைக் கண்ணார தரிசித்து  திருப்பதிகம் பாடித் துதித்தார்..

திருப்பதிகத்தின் 
நிறைவில் கோட்புலி நாயனாரைச் சிறப்பித்துப் பாடி - தம்மைச் சிங்கடியப்பன் என்று குறித்து மகிழ்கின்றார் சுந்தரர்..

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற 
கொடிறன் கோட்புலி சென்னி 
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான்குடி 
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடியப்பன் 
திரு ஆரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடுமின் தொண்டீர் 
பாடநும் பாவம் பற்றறுமே.. (7/15/10)


அதன்பின் -
மேலை வினையின் பயனாக திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு அன்பு கொண்டு -  உனை விட்டு நீங்க மாட்டேன்.. - என, சூளுரை செய்து கொடுத்து அவருடன் வாழ்ந்தார்.. 

சில மாதங்களில் ஆரூர் காண்பதற்கு ஆவல் மீதூற - தாம் செய்து கொடுத்த சூளுரையை மீறி ஒற்றியூரின் எல்லையைக் கடந்தபோது இரு கண்களிலும் பார்வையைப் பறி கொடுத்தார்.. 

காஞ்சியில் காமாட்சி அன்னையின் திருவருளால் வலக் கண்ணைப் பெற்ற சுந்தரர் ஆரூரில் இடக் கண்ணையும் பெறுகின்றார்..

சுந்தரரின் செயலால் மனம் வருந்தியிருந்த பரவை நாச்சியாரின் மனைக்கு தூது சென்றனன் பரமன்..

அச்சமயம் 
ஆரூர் பூங்கோயிலில் திருத்தொண்டர் தொகையைப் பாடுகின்றார்..


குண்டையூர் கிழார் அளித்த நெல் மூட்டைகள் ஈசன் அருளால் நெல் மலைகள் ஆகின்றன..  

அந்த நெல் மலையை சிவ பூத கணங்களைக் கொண்டு ஆரூரின் மனைதோறும் நிறைத்தவர் சுந்தரர்..


அவிநாசி தலத்தில் முதலை விழுங்கிய பாலகனை மீட்டு அளித்தவர்..

மலைநாட்டின் திரு அஞ்சைக் களத்தில் சுந்தரர் இருந்த போது காலம் கனிந்தது..
 
ஐராவணம் எனும் வெள்ளை யானையை  எம்பெருமான் கருணையுடன் அனுப்பி வைத்தார்..


நிறை தேகத்துடன்  வெள்ளை யானையில் ஆரோகணித்து
தனது தோழராகிய சேரமான் பெருமாளுடன் திருக்கயிலாய மாமலைக்கு ஏகினார் சுந்தரர்..

திருக்கயிலாயத்தின் தோர்ண வாயிலில், 
" உமக்கு இப்போது அழைப்பில்லையே!.. " - என, பூத கணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் சேரமான் பெருமாள்..

சுந்தரர் அம்மையப்பனைத் தரிசித்து தமது தோழராகிய சேரமான் பெருமாளுக்கும் திருக்காட்சி நல்குமாறு விண்ணப்பித்துக் கொண்டார்.. 

சுந்தரர் தம் பிரார்த்தனையின் பேரில் அம்மையப்பனைத் தரிசித்த சேரமான் பெருமாள் திருக் கயிலாய ஞான உலா பாடித் துதித்தார்..


சுந்தரரின் திருக் கயிலாயத் திருப்பதிகத்தினை வருணனும் சேரமான் பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான உலாவினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவும் பூவுலகிற்கு கொண்டு வந்து சேர்த்ததாக சிவ மரபு..

இப்பூமியில் பதினெட்டு ஆண்டுகளே வாழ்ந்து ஈசன் தமக்களித்த செல்வங்களைப் பிறர்க்கே அளித்து -  செயற்கரிய செயல்கள் பல செய்தவர் சுந்தரர்..

சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்கள் மூவாயிரத்து எண்ணூறு.. நமக்கு  கிடைக்கப் பெற்றவை நூறு திருப்பதிகங்கள் மட்டுமே.. 

அவற்றுள் ஏழு திருப்பதிகங்களில் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், ஒன்பது திருப்பதிகங்களில்  வனப்பகையப்பன் என்றும் குறித்து மகிழ்கின்றார்.. 


சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் 
திருக்கயிலாயத்திற்கு ஏகிய 
ஆடிச் சுவாதி இன்று..
**

சேரமான் பெருமாள் நாயனார் போற்றி..
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

6 கருத்துகள்:

  1. சிறப்பு.  பாம்புக்கடியில் மாண்ட சிறுவனை மீட்ட கதை வேறு ஒருவரா?  ரத்னபுரீஸ்வரர் மாணிக்க வண்ணர் என்று தொடங்கும் வரியில் ஓரிரு எழுத்துகள் விடுபட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  2. சுந்தரர் தேவமங்கை இருவரையும் விட்டு விட்டு தனியாகவா வெண்யானையின் மீதேறி வானுலகம் சென்றார்?  அவர்கள் என்ன ஆனார்கள்?

    பதிலளிநீக்கு
  3. சிங்கடியப்பன், வனப்பகை அப்பன் பற்றிய செய்திகள் புதிது. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சுந்தரர் வரலாறு மிக அருமை.
    சுந்தரமூர்த்தி நாயனார் திருநடசத்திரம் அன்று திருவஞ்சைக்களம் கொவிலுக்கு என் மாமனார் வருடா வருடம் போய் வருவார்கள் அந்த நினைவுகள் வந்து போயின.சேரமான் பெருமாள் நயானார் பாதம் போற்றி சுந்தரர் பாதம் போற்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆடிச் சுவாதி சிறப்பு அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..