திங்கள், ஜூலை 17, 2023

ஆடித் திங்கள்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி முதல் நாள்
திங்கட்கிழமை


இன்று சூரிய உதயத்தில் இருந்து தட்சிணாயன புண்ணிய காலம்..

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கின்ற காலம்.. 

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி வரையிலான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு மாலை நேரம்.. இரவுப் பொழுதாக அமைகின்றது...

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்..

பழைமையில் நம்பிக்கை உடைய மக்கள் எந்த விதமான வணிகமும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்..

பழைய பொருட்களைக் கூட விற்பனை செய்ய இயலாமல் ஈ விரட்டிக் கொண்டிருந்த காலம் மாறிப் போய் - 

அந்தத் தள்ளுபடி இந்தத் தள்ளுபடி, அதுக்குத் தள்ளுபடி இதுக்குத் தள்ளுபடி..  - என்று கிளம்பி விட்டதால் - கடைத் தெருக்களும் வணிக வளாகங்களும் பரபரப்பாகி விட்டன இன்றைக்கு..

தள்ளுபடி என்பதில் ஏகப்பட்ட உள்குத்து வேலைகள்,  ஜகஜ் ஜாலங்கள், தில்லாலங்கடிகள், தகிடுதத்தங்கள் - என்று கரடியாய்க் கத்தினாலும் யாரும் கேட்டுக் கொள்வதில்லை..

காலம் அல்லாத காலத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக் கூடாது என்று முன்னோர் வகுத்திருந்த நியதிகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டன..


உண்மையில்
ஆடி மாதமானது முன்னோருக்கும்  தெய்வ வழிபாட்டிற்கும் உரியதாகும்..

முக்கியமாக அம்மனுக்குரிய மாதமாகும்..

ஸ்ரீ காவேரி
நடந்தாய் வாழி காவேரி!.. - என்று ஆடிப் பெருக்கில் சிறப்பிக்கப்படுகின்ற மாதம்..

ஆடிப் பட்டம் தேடி விதை!..
வேளாண்மையே பிரதானமாக இருந்த காலத்தில் விதை விதைப்பதற்கான மாதமாக குறிக்கப்பட்டது..

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்!.. - என்று மழைக்கான குறிப்பினை உடையது இந்த மாதம்..

ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை - என்று இந்த மாதத்தில் விசேஷங்கள் பல இருந்தாலும் ஆடி மாதமானது அம்மனுக்குரிய மாதமாகும்.. 

ஆடி மாதத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் சிறப்புடையவை..

அம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள், பால் குடங்கள், கூழ் வார்த்தல் முதலானவற்றால்  மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். 

ஆடி மாதத்தில் அம்பாளுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல் சாற்றுவது சிறப்பிலும் சிறப்பு..

அம்மன் கோயிலுக்கு   மங்கலப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, அதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

ஐந்து ஏழு ஒன்பது என, 
சுமங்கலிப் பெண்களுக்கு - மஞ்சள் குங்குமம், பூ இவற்றுடன் தாம்பூல தானம் செய்வது கூட நல்லது தான்.. 

ஆடியிலே காவிரி பெருக்கெடுத்தால் தான் நமக்கு நீர்!..

வயல் வேலைகள் செம்மையுற்று ஆடிப் பட்டத்தில் தேடி எடுக்கப்பட்ட விதை விதைக்கப்பட்டால் தான் நமக்கு சோறு!..




கருத்துப் படங்கள்
நன்றி : இணையம்

நீரும் சோறும் குறைவின்றி 
நிறைந்தால் தான் 
தள்ளுபடி லொள்ளுபடி  
- எல்லாம் என்பதை 
யாரும் மறுக்க முடியாது..


அவ்வண்ணம் 
நீரும் சோறும்
சிறப்பதற்காகத் தான் 
அம்மன் வழிபாடு!..

வாழ்க வளம் வாழ்க நலம்

ஓம் சக்தி சக்தி ஓம்
***

14 கருத்துகள்:

  1. ஆடிமாதத்தில் சிறப்புகளை சுவாரஸ்யமாக எடுத்துக் காட்டி இருப்பதை ரசித்தேன்.  மதி ஜோக் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்....

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  2. ஆஹா.. ஆடி மாத தர்ப்பணம் முடிந்தது. இப்போ திருப்பதி இரயிலில். ஆடி விஷயங்களைத் தள்ளுபடி இல்லாமல் எழுதிட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அடுத்தது தான் என்று எங்கள் பக்கத்தில் அனுசரிக்கின்றனர்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  4. ஆடி மாத சிறப்புகள் மற்றும் தள்ளுபடிகளை பற்றி எழுதி விட்டீர்கள்.
    மக்களுக்கு தெரியாமல் இல்லை, இருந்தாலும் கடைக்கு போய் பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஒரு ஆனந்தம்.
    ஆடி மாதம் காவேரி நலமாக வந்து பயிர் பச்சைகள் செழிக்கட்டும். இல்லங்களும், நாடும் செழிக்கட்டும்.
    அன்னை மனம் குளிர்ந்து அனைவருக்கும் நல் வாழ்வு தரட்டும்.
    பிரார்த்தனை செய்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நல்வாழ்வுக்கும்
    பிரார்த்தனை செய்து கொள்வோம்.

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அழகு. அன்னையை தரிசித்துக் கொண்டேன். ஆடியின் சிறப்புகளை அழகாக எழுதி விட்டீர்கள். பிரபல கடைகளில் தள்ளுபடிகள் சகாய விலையில் கிடைப்பதாக மக்கள் அலைபாயும் தெருக்களை முன்பு ஒரு முறை இந்த ஆடியில் நெல்லைக்கு சென்றிருந்த போது பார்த்திருக்கிறேன். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

    ஆடித்தள்ளுபடி ஜோக்ஸ் அருமை. காவிரி அன்னை அனைத்து வளங்களையும் மக்களுக்கு தர நானும் வேண்டிக் கொள்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  7. ஆடி மாத சிறப்புகள் பற்றி நல்ல பகிர்வு.

    எங்கள் பக்கங்களில் நேற்று ஆடிக் கூழ் காச்சுவார்கள். பனங்கட்டி ,தேங்காய் பால் ,உழுந்துமா,அரிசிமாவு உறுண்டை தேங்காய் பல்லு சேர்த்து காச்சுவார்கள்.

    சிறுவயது பாடல் ஒன்று இருக்கிறது.
    .'ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்காட்டு கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே'
    என சிறுவயதில் பாடுவோம். முன்னைய காலத்தில் ஆடிப் பிறப்புக்கு பாடசாலை விடுமுறை இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக விவரங்களும்
      கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  8. சிறப்பான ஆடித்தள்ளுபடிப் பதிவை எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்ய முடியாது. விபரங்கள் அழகாய்த் தொகுத்து அளித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      ஆடித் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..