நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 19
செவ்வாய்க்கிழமை
சங்க கால இலக்கியத்தின்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
ஆற்றுப்படை நூலாகிய இதில் சொல்லப்பட்டுள்ள மலை - நவிரமலை.. இதன் அரசன் நன்னன்..
நீர் அகம் பனிக்கும் அஞ்சு வரு கடுந்திறல், (81)
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்,
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசை இல் சிறப்பும், (85)
அவனுடைய நாட்டில் நவிரமலை இருந்தது. நஞ்சுண்ட ஈசனின் கோயிலும் அங்கு இருந்தது. இதன் ஆற்றலை எண்ணி உலகம் அஞ்சிக் கிடந்த காலம் அது. இருள் நீக்க எழும் இளஞாயிறு போன்ற புகழைக் கொண்டவன் நன்னன்.
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய (225)
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை
பராவு அரு மரபின் கடவுள் காணின் (230)
தொழா நிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி (232)
ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை. அங்கே யானைச்சிலை [புகர்முகம்]. இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வ யானைத் தெய்வம். முருகன் குறிஞ்சிக் கடவுள். அதன் கழுத்தில் மாலை. அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி [பொய்கை]. போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி எனும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை. அது தனித்துச் செல்லும் ஆற்று வழி [இயவு]. அந்த யானைக் கோயிலுக்குச் சுற்று மதில். மூத்த (உறுதியான) கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட மதில். அதற்குள்ளே யானைச் சிலைக் கடவுள். மரபு வழியே தொழப்பட்டு வரும் கடவுள். அதனைக் காணும் பொழுது கை தொழுது விட்டுச் செல்லுங்கள். அங்கெல்லாம் உங்களது இசைக் கருவிகளை வறிதே கொண்டு செல்வதை விடுத்து இசை முழக்கித் தெய்வத்தைப் பரவி விட்டுச் செல்லுங்கள்.
வள்ளலாகிய நன்னனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கூத்தன் ஒருவன், வழியில் எதிர்ப்பட்ட வறுமை நிலையில் இருந்த மற்றொரு கூத்தனுக்கு நன்னனது மலை வளத்தையும்,
நன்னனின் கொடைத் திறத்தையும் சொல்வதாக பெருங்கௌசிகனார் எனும் புலவர் பாடியுள்ளார்..
செங்கண் மாத்துவேள் நன்னன் என்பதில் செங்கண்மா என்பது நகர்..
அதுவே இன்றைய செங்கம்.. நூலில் சொல்லப்பட்டிருக்கும் சேயாறு தான் இன்று செய்யாறு..
இன்றைய திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி..
இப்பகுதிக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர், - பல்குன்றக் கோட்டம் - என்று பெயர்.
இப்பகுதியில் சிறப்புடன் ஆட்சி செய்தவர் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசன்..
இம்மலையை
" குறவரும் மருளும் குன்றம்” என்கிறது மலைபடு கடாம்..
இந்த நூலில் , அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும், இசைக் கருவிகள் பற்றியும் பல்வேறு குறிப்புக்கள் காணப்படுகின்றன.
செங்குத்தான பாறைகளையும்
ஆபத்தான பாதையையும் உடைய நவிரமலை இன்றைக்கு பர்வதமலை என வழங்கப்படுகின்றது..
நன்றி சரவணன் |
நன்றி சரவணன் |
பர்வதமலையில் மலை ஏற்றத்தின் போது பக்தர்களுடன் நாய்கள் துணைக்கு வருவதாக சொல்கின்றார்கள்..
கோயிலுக்குக் கதவுகள் இல்லை.. எந்த நாளும் கோயில் திறந்தே இருக்கும். நாமே அபிஷேக அலங்காரம் செய்து வணங்கலாம்..
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் மக்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்..
திருவண்ணாமலையிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது பர்வத மலை..
மலையின் அடிவாரத்தில் இருந்து ஆறு கிமீ., ஆபத்தான பாதையில் நடந்தால் மலையுச்சி என்கின்றது விக்கி..
மேலே உள்ள
காணொளியை முழுதுமாகப் பாருங்கள்
அப்போது தான் மலை படுகடாம் கூறுகின்ற பிரம்மாண்டம் புரியும்..
அந்தக் காணொளியைக் கண்ட பின் காரியுண்டிக் கடவுள், யானை - இவற்றுக்காக தேடிய போது தான்
இணையத்தில் மலைபடு கடாம் கிடைத்தது.. அந்த விவரங்களின் சுருக்கமே இந்தப் பதிவு..
ஆக, மேலே உள்ள காணொளி தான் இந்தப் பதிவுக்கு அடிப்படை...
இந்தப் பதிவினை உருவாக்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றது..
கீழுள்ள காணொளிகள் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தவை..
எல்லாம் காரி உண்ட கடவுளின் கருணை..
காணொளியாளருக்கு நன்றி.
1) விக்கி தளத்திற்கு நன்றி
2) சங்கத்தமிழ் தளத்திற்கு நன்றி
கீழுள்ள இணைப்புகளில்
பர்வதமலை, மலைபடுகடாம்
பற்றி வாசித்து மகிழ்க.
1) பர்வதமலை
2) மலைபடுகடாம்
வாழ்க தமிழ்
வாழ்க தமிழகம்..
***
போகும் வழியைப் பார்த்தாலே முதுகுத்தண்டு சில்லிடுகிறது. மலை உச்சியில் மிக அழகான கோவில். அங்கு செல்லும் தைரியம் வருமா என்பது சந்தேகம்!
பதிலளிநீக்குஅங்கு கிடைக்கும் கல்லில் பௌத்தம் - - 63 என்று இருக்கிறதே....
பதிலளிநீக்குதுரை அண்ணா, நவிரமலை, மலைபடுகடாம் என்றும் பாடல்கள் அதன் பொருளைப் பார்த்ததுமே அட! நம்ம பர்வதமலை என்று தெரிந்துவிட்டது. நாங்கள் சென்று வந்திருக்கிறோம். பதிவும் போட்டிருந்தேன்.
பதிலளிநீக்குமிகக் கடினமான மலையேற்றம். அழகான காட்சிகள். சுற்றிலும் காடுகள். நவம்பர், டிசம்பர், ஜனுவரி மாதங்களில் சென்று வருவது நலம். வெயில் கடுமையாக இருக்கும் என்பதால்.
கீதா
நான் போட்டிருந்த பதிவு யாருக்கும் நினைவிருக்குமா என்று தெரியாது.
பதிலளிநீக்குகோயிலை அடைந்ததும் மிக மிக ரம்மியமான அமைதியான அந்த இடம் ஒரு பரவசம் தரும் தருணங்கள். சுற்றிலும் இயற்கை. அதுவும் கோயிலை அடையும் முன் ஒரு 1/2 மணி நேரம் பிந்தைய பகுதியும் கடைசி 10 நிமிடங்களில் பார்க்க முடிந்த காட்சிகளும் அருமை என்றால் அருமை....படங்கள் போட்டிருந்தேன். அப்போது புகைப்படக் கருவி படுத்தியதால் சந்தேகம் கொண்டு காணொளி எடுக்காமல் விட்டுவிட்டேனே என்று இப்போது தோன்றுகிறது.
கீதா
எனக்கு நினைவு இருக்கிறது கீதா. பரவ்தமலை என்று படித்தவுடன் உங்கள் பதிவும், படங்களும் நினைவுக்கு வந்தது.
நீக்குஆபத்தான ஏற்றம் தான். மலை உச்சியில் என்பது மிகவும் பொருந்தும் ஒன்று இக்கோயிலுக்கு. கீழிருந்து கோயிலைப் பார்த்தால் ஆஆஆஆ இங்கயா நாம போகப் போறோம் அங்கு நிற்க இடம் இருக்குமா? போன்ற சந்தேகங்களுடன் ஓர் ஆச்சரியம் எழும்பும் என்பது மிகையல்ல. அந்தக்கோணத்தில் எடுத்த படங்களும் போட்டிருந்தேன்...
பதிலளிநீக்குகீதா
படிகள் இருப்பது ஆரம்ப நிலையில் அப்புறம் கடினம் செங்குத்தாகவும் இருக்கும் பாதை.
பதிலளிநீக்குகீதா
அற்புதமான மலையேற்றம் எனக்குக் கிடைக்கப் பெற்றதற்கு என் மைத்துனர் குழுவிற்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்
பதிலளிநீக்குகீதா
காணொளிகள் அருமை...
பதிலளிநீக்குமூன்று காணொளிகளும் கண்டேன் அருமை
பதிலளிநீக்குநவிர மலை, அரசன் நன்னன் பற்றிய விவரங்கள், பகிர்ந்த பாடல்கள், அதன் விளக்கம், மற்றும் காணொளிகள் அருமை.
பதிலளிநீக்குபர்வத மலை இறைவன், இறைவி படங்கள் மலை உச்சியில் கோவில் படங்கள் எல்லாம் அருமை.
நவிர மலை - இன்றைய பர்வத மலை! ஆஹா... சமீபத்தில் தான் இந்த பர்வத மலை குறித்த தகவல்களை இணையத்தில் தேடி, படித்துக் கொண்டிருக்கிறேன். காணொளிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த தமிழகப் பயணத்தில் பர்வத மலைக்குச் செல்லும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம் - ஈசன் அருள் இருந்தால் அதுவும் நடக்கும்.
பதிலளிநீக்குபர்வத மலை பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. ஒரு காலத்தில் போக நினைத்திருந்தவற்றுள் இதுவும், சதுரகிரியும் உண்டு. இரண்டிற்குமே இப்போதெல்லாம் போவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதிலும் பர்வத மலையில் ஒரு இடத்தில் கிட்டத்தட்ட நூலேணி போன்ற ஒரு ஏணியில் ஏறி மலை மேல் ஏறணும் என்பதை நினைத்தால்!
பதிலளிநீக்கு