புதன், ஜூன் 28, 2023

மனை மங்கலம் 4

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஆனி 13
 புதன்கிழமை


இது கர்ம பூமி.. 

முன்னமே தீர்மானிக்கப்பட்ட விதிகளின்படி
வாழ்வதற்காகவே - நாம் வந்திருக்கின்றோம்..  

லாபம் நஷ்டம், கஷ்டம் இஷ்டம் - வாழ்ந்துதான் ஆக வேண்டும்..

இறை வழிபாடு என்ற ஒன்று மட்டுமே கரை சேர்க்கும்.. 

பரிகாரங்கள் அல்ல.. 

இருப்பினும்,
உண்மையான பரிகாரம் என்பது - செய்த பிழைகளுக்கு மனம் வருந்துவதும் திருந்துவதும் ஏழைகளுக்கு இரங்கி உதவுவதும் தான்!..

மனமகிழ்ச்சிக்காக எளிய பரிகாரக் குறிப்புகளை பின்பொரு நாளில் தருகின்றேன் - என்று சொல்லியிருந்தேன்..

அதன் பொருட்டு இந்தப் பதிவு..

தானம் தவமிரண்டும் தங்கா வியன்உலகம் 
வானம் வழங்கா தெனின்.. (19)

- என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு..

தானம் தவம் இரண்டைப் பற்றியும் பல இடங்களில் பேசுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.

அரிது அரிது - என்று வரிசைப்படுத்துகின்ற ஔவையார் -

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!.. 

- என்று நிறைவு செய்கின்றார்..

தானம் பிறர் பொருட்டு.. தவம் தன் பொருட்டு.. வானவர் நாட்டிற்கான இரண்டு கதவுகளில் ஒன்று தானத்தினாலும் மற்றொன்று தவத்தினாலும் திறந்திடும்.. - என்பார் வாரியார் ஸ்வாமிகள்..

தானம் என்ற சொல் சமஸ்கிருதம்..
அதற்கு அறம் என்பது நேரடியான பொருள்..

" அறம் செய விரும்பு!.." என்றவர் ஔவையார்..

மனதளவில் விருப்பம் கொண்டு வீணே பொழுது கழிக்காமல் ஏழை எளியோர்க்கு இயன்றவரை உதவ வேண்டும்..

அறம் செய விரும்பு -
என்றாலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து விட வேண்டும்..

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.. (36)

தானங்கள் பலவகை..

தானம் செய்வது அவரவர் விருப்பம்.. அவரவர் சூழ்நிலை..
ஆயினும், தோஷங்கள் விலகுவதற்காக  செய்யப்படும் தானங்கள் நன்மை அளிப்பன..

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை 
நமக்காக நம் கையால் செய்வது நன்று.. 
- என்று எழுதினார் கவியரசர்.. 

எத்தகைய சூழல் என்றாலும் தானம் கொடுப்பதை நாமே நம் கையால் கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்..

தானங்களைப் பற்றி புராண இதிகாச வரலாறுகளில் நிறையவே காணப்படுகின்றன.. 

கொடுப்பதற்கு மனமிருந்தும் பொருளின்றித் தவிப்போர்கள் புண்ணியர் ஆகின்றனர்.. 

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.. - என்று வள்ளுவப் பெருந்தகை குறிக்கும் அளவுக்கு தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் கொடையாகக் அளித்தவர் ததீசி முனிவர்..

ஊர் காக்கும் காவிரி மீண்டு வருவதற்காகத் தன் உயிரையும் கொடுத்தவர் ஹேரண்ட முனிவர்.. 

சாபத்தினால் வயோதிகம் அடைந்த
தகப்பன் யயாதிக்குத் தனது இளமையை தாரை வார்த்துக் கொடுத்தவன் இளவரசன் பூரு.. 

இவன் தேவயானியின் பணிப் பெண்ணாகிய ஷர்மிஷ்டைக்கு யயாதியினால் பிறந்தவன்.. இந்தத் தவறைச் செய்ததனால் தான் யயாதி இளமையை இழந்தான்..

தமிழ் வாழவேண்டும் - என்பதற்காக, ஆயுள் விருத்தி அளிக்கும் நெல்லிக்கனியை ஔவையாருக்கு ஈந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி.. 

தமிழ்ப் புலவனின் வறுமை தீர்வதற்காக தன்னையே தானமாகக் கொடுத்தவன் பெரு வள்ளல் குமணன்..

இப்படியிருக்க -
பொருள் இருந்தும் ஈந்து மகிழும் மனம் இன்றி ஒளித்து வைத்து வாழ்வோர்க்கு கடும் நரகங்கள் காத்திருப்பதாக  அப்பர் பெருமான் எச்சரிக்கின்றார்..

சரி.. தானம் யாருக்கு யார் கொடுப்பது?..

யாரும் கொடுக்கலாம்..
யாருக்கும் கொடுக்கலாம்..
வறியவர் எவரோ அவருக்குக் கொடுப்பதே சாலச் சிறந்தது..

ஏழை ஒருவனின் மனம் குளிரும்படிக்கு அளப்பரிய அன்புடன் செய்வதுவே - தானம், ஈகை, கொடை..

இதைத்தான் 
வகைப்படுத்திக் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை..

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து..


எளிய மனிதருக்கு 
ஏற்றவையாகவும் பொருள் படைத்தோர்க்கு உரியவையாகவும் சில தானங்கள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன.. 

தண்ணீர், மோர், உப்பு தானம் செய்வதால் தர்ம தேவதையின் நல்லாசிகள் கிட்டும்..

தயிர் தானம் செய்வதால் இந்திரிய தோஷம் விலகும்..

நெய் தானம் செய்வதால் பீடைகள் விலகும்..

பசும் பால் தானம் செய்வதால் துக்கமும் பிணிகளும் அகலும்..

தேன் தானம் செய்வதால் ஞான விருத்தி ஏற்படும்.

தீப தானம் செய்வதால் கண் நோய்கள் விலகும்..

நெல் தானம் செய்வதால் செல்வம்  விருத்தியாகும்..

அரிசி தானம் செய்வதால் தோஷங்கள் அகலும்..

தேங்காய் தானம் செய்வதால் தடைகள் விலகி வெற்றி சேரும்..

சர்க்கரை வெல்லம் தானம் செய்வதால் எதிரிகள் விலகுவர்..

நெல்லிக் கனி தானம் செய்வதால் மஹாலக்ஷ்மி ப்ரீதி ஏற்படும்..

காய்கள் தானம் செய்வதால் பித்ரு சாபம் நீங்கி முன்னோர் நல்லாசிகள் கிட்டும். மறந்தும் பாகற்காய் கொடுக்கக் கூடாது..

பழங்கள் தானம் செய்வதால் சகல காரியங்களும் சித்தியாகும்..

அன்ன தானம் செய்வதால் - வறுமை வந்து சூழாது. கடன் தீர்ந்து குறையாத செல்வம் சேரும்..

தாம்பூலம் தானம் செய்வதால் சாபங்கள் விலகும்..

வஸ்திர தானம் செய்வதால் ஆயுள் விருத்தி உண்டாகும்..

பசு தானம்  கன்றுடன் பசுவை தானம் வழங்குவதால் முன்னோர்க்கு நற்கதி விளையும். சந்ததியர்க்கு நல்வாழ்க்கை அமையும்..

வெள்ளி தானம் செய்வதால் சகல போகங்களும் உண்டாகும்..

ஸ்வர்ண தானம் செய்வதால் மஹாலக்ஷ்மி ப்ரீதியுடன் செல்வ வளம் சேரும்..

வித்யா தானம் - ஏழைப் பிள்ளையின் படிப்புக்கு உதவுவதால்
மகரிஷிகளின் ஆசி கிட்டும்..

கன்யா தானம் - ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுவதால் சகல தேவதா பிரீதியுடன் சர்வ மங்கலம் உண்டாகும்..

பூமி தானம் செய்வதால் ஈஸ்வர தரிசனம் கிட்டும்..

கிழிந்த துணிகள் உடைந்த பொருட்கள், வீணாகிய தானியங்கள், கெட்டுப் போன உணவுகள் - இவற்றை ஒருபோதும் தானமாகக் கொடுக்கக் கூடாது..

இயன்ற அளவில் தானம் வழங்கப் பழகுவோமாயின் அதுவே தவ வாழ்க்கை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை..

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று..

- " வள்ளுவரு இப்படியும்  தானே சொல்லியிருக்கார்.. நாந்தான் பொய்யே சொல்றதில்லையே.. நான் எதுக்கு தானஞ் செய்யணும்?.. தவம் செய்யணும்?.. " 
-  என்று யாரும் வரலாம்..

ஒற்றைச் சுவையுடன் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த உலக மக்களுக்கு அறுசுவைகளைக் காட்டியதே நமது கலாச்சாரம்..  

இதன்படியும் தான் வாழ்ந்து பார்ப்போமே!..

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!..
(திருமந்திரம்)
-: திருமூலர் :-

சுகம் சௌக்யம் சௌபாக்யம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. சிறந்த பதிவுகளில் ஒன்று.  நிறைய ரெபரென்ஸ் சொல்லி இருக்கிறீர்கள்.  நினைவிலிருந்தா, புத்தகம் பார்த்தா என்று கேட்க விரும்புவது என் பிரமிப்பால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு.

      இன்றைய பதிவின் சில விஷயங்கள் சின்ன வயதில் இருந்தே மனதில் பதிந்திருப்பவை..

      அரிது.. அரிது.. பாடலும் அப்படித் தான்.. வாரியார் ஸ்வாமிகள் உரையும் அப்படியே..

      திருமூலரின் திருவாக்கு புகுமுக வகுப்பில் பயின்றதாகும்..

      மற்றபடி தேவார திருவாசக திவ்ய ப்ரபந்தத் திருப் பாடல்களை அவ்வப்போது தேடி எடுத்துக் கொள்வேன்..

      என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நீண்ட நாட்களுக்குப் பிறகு குமணன் பெயர்!  என்னுடன் இதே பெயரில் ஒரு மாணவன் படித்தான்.  எப்போதும் பாரி, கர்ணன் என்று சொல்லும் நாம் குமணனை மறந்து விட்டோமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கல்வித் திட்டங்களின் மீது ஆதங்கம் உடையவர்களுள் நானும் ஒருவன்..

      வள்ளல் குமணன், வேலு நாச்சியார், குயிலி போன்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள்..

      ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர்..

      எது எதற்கோ முக்கியத்துவம்
      கொடுக்கப்படுகின்ற இக்காலத்தில் நல்ல விஷயங்களைப் புறந்தள்ளுவதே நாகரிகம் ஆகியிருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தானம், தவம் பற்றி அறிவிற் சிறந்த அனேகரின் சொற்களோடு அழகாக விவரித்து கூறியுள்ளீர்கள். அற்புதமான தங்களின் எழுத்துக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொரு பொருட்களை வழங்கும் தானங்களின் பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன். தவறாமல் ஏழை எளியோர்க்கு நம்மால் இயன்றவரை தானம் தந்து தவத்தை பெறுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாமல் ஏழை எளியோர்க்கு நம்மால் இயன்றவரை தானம் தந்து தவத்தை பெறுவோம்..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. நல்ல தகவல்கள் நிறைந்த சிறப்பான பதிவு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  5. நல்லார்க்கு ஈதலைத் தானம் என்றும் இல்லார்க்கு ஈதலை ஈகை என்றும் வேறுபடுத்திக் கூறி, இல்வாழ்வார் அறங்களில் சிறந்தது தானம் என்பார் வ உ சிதம்பரம் பிள்ளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான செய்தியைச் சொல்லி இருக்கின்றீர்கள்..

      இந்நாட்டிற்காக அனைத்தையும் இழந்த ஐயா வ.உ.சி. அவர்களது கருத்து மேலானது..

      வ.உ.சி. அவர்களும் தெய்வத் திருக்குறளுக்கு உரை செய்திருக்கின்றார்கள்.

      அது நம்மிடையே பரவாமல் தடுக்கப்பட்டதாக உணர்கின்றேன்..

      நல்ல விஷயங்கள் இன்றைக்குத் தளர்ந்திருந்தாலும் மீண்டும் துளிர்த்துத் தழைக்கும் என்பதில் ஐயமில்லை..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. நல்ல கருத்துகள். தானமும் கூட எந்த வித எதிர்பார்ப்புமின்றி கொடுத்தல் சிறப்பு இல்லையா துரை அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
  7. குமணன் கதையை மூன்றாம் வகுப்பில் படித்திருக்கேன். இத்தகைய பாடங்களை எல்லாம் இப்போதுள்ள குழந்தைகள் அறிய மாட்டார்கள். சொல்லிக் கொடுப்போருக்கே தெரிந்திருக்காது. எங்கே! ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ஆகியவை எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  8. தானம் குறித்த தகவல்கள் அனைத்தும் நன்று. உங்களது உழைப்பு பாராட்டுக்குரியது. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  9. அருமையான பதிவு.
    நிறைய நல்ல தகவல்.
    முடிந்தவரை பிறருக்கு உதவுவது சிறந்தது.
    திருமூலர் திருமந்திரம் பாடல் பகிர்வு பதிவுக்கு பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  10. தானம் பற்றி நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..