வியாழன், ஏப்ரல் 13, 2023

இது.. அது.. எது?..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 30
வியாழக்கிழமை

இன்றைய சூழ்நிலையில்
ஆரோக்கியமான உணவு என்பது மிகவும் முக்கியம்.. 


ஆரோக்கியமான உணவுக்கு சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எண்ணெய் இன்றி நம்முடைய சமையல் இல்லை.. 

அதிலும் 
நீரிழிவு போன்ற  குறை உள்ளவர்களுக்கு என்றால்  சமையல் செய்வதற்கு நல்ல தரமான எண்ணெயைத் தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பாரம்பரியத்தில்
நல்லெண்ணெய் மிகவும் சிறப்பானது.. 

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்குப் பாதுகாப்பு என்கின்றது இன்றைய நவீன மருத்துவம்..

இதை அன்றைக்கே சொல்லி விட்டனர் நம் நாட்டுப் பெரியோர்கள்!.

இந்த மக்களுக்கு " கற்றுக்  கொடுப்பதற்காக " வந்தவர்களின் அடிவருடிகள் இதைத் தான் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்..


நல்லெண்ணய் :
எள்ளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து  
இரத்த சர்க்கரையின் அளவு மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் இதிலுள்ள மக்னீசியம்  நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கின்றது..


கடலை எண்ணெய் :
நிலக்கடலையில் பாலி அன்சாச்சுரேட்டட் (PUFA) மற்றும் மோனோ சாச்சுரேட்டட் (MUFA) கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன..

இவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றன. கடலெண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சிறந்த ஆக்ஸிஜனேற்றி..

நீரிழிவுக்கு கடலை எண்ணெய்  பரிந்துரைக்கப்பட்டாலும்  குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்..


​தேங்காய் எண்ணெய் :
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பல  நன்மைகளைக் கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் type 2 நீரிழிவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. 

தேங்காய் எண்ணெய் இரத்த சர்க்கரையின் அளவை  இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது..
இது பசி உணர்வைக் குறைக்கின்றது.  
தேங்காய் எண்ணெயில்  லாரிக் அமிலம் உள்ளதால் சர்க்கரை குறைபாடு உடையவர்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும் சமையலில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு நம்மிடையே குறைவு..

தேங்காயின் மீது பூஞ்சைகள் வளராமல் இருக்க 
கொப்பரையை கந்தக இரசாயனப் பூச்சுடன் வெயிலில் உலர்த்தப் படுவதாக சொல்கின்றனர்.. எனவே வெளியில் வாங்கும் எண்ணெய்களில் கவனமாக இருப்பது அவசியம்..

கடலை எண்ணெயைப் போல குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


சூரியகாந்தி எண்ணெய் :
சூரியகாந்தி எண்ணெயில் இருக்கும்  Fatty Acids, கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகின்றது.

சூரியகாந்தி விதைகள் புரதச் சத்தைத் தருகின்றன..
கெட்ட கொழுப்பினைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. சூரியகாந்தி விதையிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில்  சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது..


ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய்  நீரிழிவு நோயைத் தடுக்கிறது.. நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களைக் குறைக்கிறது என்றாலும் ஆலிவ் எண்ணெயை ஒருபோதும் சூடாக்கக் கூடாது..

அரபு நாடுகளில் இதனை Cold kitchen ல் மட்டுமே (Salad Dressing) பயன்படுத்துவர்.. 

நமது சமையல் முறை அப்படியானது அல்ல...


செம்பனை எண்ணெய் :

தமிழன் பாமாயில் என்று  சொல்லுகின்ற எண்ணெய்..
செயற்கை வெண்ணெய், செயற்கை கொழுப்பு, செயற்கை சமையல் எண்ணெய் வகைகள்  தயாரிப்பதற்குப்  பயன்படுத்தப்பட்ட இதனை நல்லது என்று சொன்னதும் வர்த்தகம்.. சொல்வதும்  வர்த்தகம்..

இந்த செம்பனைக்காக கிழக்காசிய நாடுகளில் மழைக் காடுகளும் அதன் உயிரினங்களும் அழிக்கப்பட்டு விட்டன என்பது கூடுதல் செய்தி..

பழத்தின் சதைப் பகுதியில் இருந்து எடுக்கப்படுவதும் விதையில் இருந்து எடுக்கப்படுவதும் ஆக இரண்டு வகை.. 

இந்த எண்ணெயின் நிறம் செம்மஞ்சள்.. சுத்திகரிப்பின் போது செந்நிறம் குறைக்கப்படுகின்றது.

அப்படித் தான், இப்படித் தான் என்றாலும்
ஆராய்ச்சிகள் கூறுவது என்னவெனில், இது உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கின்றது.. இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல - என்பதே!.. 

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு நல்லது என்றாலும் பீட்டா கரோட்டின் கேரட்டில் இருந்து கிடைக்கின்றதே..

ஆகவே இது உடலில் கொழுப்பினை அதிகரிப்பதால் உகந்ததல்ல..

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் (பாமாயில் ) மறுமுறை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.. 

விலை கொடுத்து வினையை வாங்கத் தான் வேண்டுமா?..


எந்த வகை எண்ணெய் ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் உடல் நலக் குறைவு உள்ளவர்கள் -

தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பயன்படுத்த வேண்டும்..

அந்தக் காலத்தில் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்!..

வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு!.. - என்று..

ஊடக வசதிகள் இல்லாதிருந்த அந்தக் காலத்தில் எல்லாருமே அற வழியில்
நின்றிருந்தனர் !..

போலி சமூக ஆர்வலர்கள் பெருகியிருக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல உணவுக்காக ஒவ்வொருவரும் நவீன அரக்கர்களுடன் போராட வேண்டி இருக்கின்றது..

நம்மை நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

11 கருத்துகள்:

  1. பாமாயில் ஆரம்ப காலங்களில் ஓரிருமுறை உபயோகித்ததுண்டு.  ஆலிவ் ஆயில் போன்றவை பக்கம் சென்றதில்லை.  நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் வீட்டில் உபயோகம்.  தேங்காய் எண்ணெயை சமையலில் நான்தான் உபயோகப்படுத்துவேன்.  பாஸ் அவியல் செய்யும்போது மட்டும் உபயோகப்படுத்துவார்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விவரங்கள்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க.

      நீக்கு
  2. இன்று பாமாயிலை தவிர்க்க முடியாத நிலையில் வாழ்கிறோம்.

    காரணம் விலைவாசி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  3. "அறம் என்பது என்ன...?" என்று கேட்கும் காலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலக் கொடுமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. நானும் முன்னரே சொன்னபடி நல்லஎண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தான் பயன்பாட்டில் வைச்சிருக்கேன். தே.எண்ணெயில் தாளிப்பு கீரைக்கு, ஒரு சில வதக்கல் கறிகள், அவியல், அடை, அரிசி உப்புமா போன்றவற்றில் இருக்கும். மற்றபடி எல்லாம் நல்லெண்ணெய். பொரிக்க மட்டும் கொஞ்சமாகக் கடலை எண்ணெய் வைத்துப் பொரித்துவிட்டு மறுநாளே மிச்சம் எண்ணெய் செலவாகும்படி பார்த்துப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணெய் மிச்சம் ஆகாமல் சமைப்பது கலை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. பயனுள்ள பதிவு.தேங்காய் எண்ணெய் எங்கள் வீடுகளில் அதிகம் பயன் படுத்துவார்கள். மாமியார் பலகாரங்கள் தேங்காய் எண்ணெய்யில் செய்வார்கள். அவியல் , மற்றும் சில சமையலுக்கு தேங்காய் எண்ணெய்தான்.
    மீண்டும் மீண்டும் எண்ணெயை சூடாக்க கூடாது என்பதால் அளவாக எண்ணெய் வைத்து பொரிக்க சமைக்க கற்றுக் கொடுத்தார்கள் அத்தை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக செய்திகளும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. அண்ணா நல்ல பதிவு. நம் வீட்டிலும் நல்லெண்ணை, கடலை எண்ணை, தேங்காய் எண்ணைதான். பாமாயில் பக்கமோ ஆலிவ் எண்ணை சிறந்தது என்றாலும் விலை அதிகம் என்பதாலும் அதன் பக்கம் செல்வதில்லை.

    இங்கு பங்களூரில் பாமாயிலின் பயன்பாடுதான் அதிகம் பல உணவகங்களிலும். என்ன சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..