வெள்ளி, ஏப்ரல் 28, 2023

சோலைக் கரும்பு 3

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
 வெள்ளிக்கிழமை

திருப்பதிகப் பாடல்கள்

தேவார, திருவாசகங்களைக் கரைத்துக் குடித்திருக்கீங்க என்பது புரிகிறது..
- ஸ்ரீமதி கீதாசாம்பசிவம்

தெய்வீகமான தேவார திருவாசகத்தை நன்கு படித்தறிந்து மனனமாக உருவேற்றியுள்ளீர்கள். அந்த பக்திக்கு முன் நானெல்லாம் வெகு சாதாரணம்..
_ ஸ்ரீமதி கமலாஹரிஹரன்

மேற்கண்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு
இந்த மாதிரி என்னை நான் நினைத்துக் கொண்டால் பெரிய தவறு செய்தவனாகி விடுவேன்...

இணையத்தில் பன்னிரு திருமுறைகள் வந்த பிறகு அவற்றைப் படிக்கும் தோறும் நினைவில் குறித்துக் கொள்வேன்.. 

சான்றோர்களால் தொகுக்கப்பட்டவை அவை.. 

இப்போது  எளிதாகத் தேடி எடுக்கும்படி அவை இணையத்தில் வைக்கப்பட்டுள்ளன..
அவற்றில் இருந்தே தற்போது குறிப்புகளைத் தேடி எடுத்துத் தொகுத்தே 
பதிவுகளில் தந்து கொண்டு  இருக்கின்றேன்..

இது குறித்து விவரமான பதிவு ஒன்று விரைவில் வெளிவரும்..
***
இன்றைய பதிவில் 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தனது திருப்பாடல்களில் கரும்பினைப் பற்றிப் பேசுகின்ற அழகினைக் காண்போம்..

கழை கொள் கரும்பும் கதலிக் கனியும் கமுகின் காயும்.. - என்றும்

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனி.. - என்றும்

கரும்பு உயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கி விளை கழனி.. - என்றும்

இயற்கை வளத்தையும் நல்லழகையும் நம் கண் முன்னே நிறுத்துகின்றார் -
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

அருள் நிறைந்த
திருப்பாடல்கள் சிலவற்றை இந்தப் பதிவில் சிந்திப்போம்..

இத்திருப்பாடல்கள் தருமபுர ஆதீனத்தின் பன்னிரு திருமுறைத் தொகுப்பில் இருந்து பெறப்பட்டவை..

சான்றோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..

அழகாபுத்தூர்

திரு அரிசிற்கரைபுத்தூர்
(அழகாபுத்தூர்)

மழைக்கண்மட வாளை யொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்து கந்தீர்
முழைக்கொள்ளர வோடு என்பு அணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்து கொண்டிட்
டழைக்கும்புனல் சேர் அரிசில் தென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.. 7/9/9

திருத்துறையூர்

திருத்துறையூர்

அரும்பார்ந்தன மல்லிகை
சண்பகஞ் சாடிச்
சுரும்பாரக்கொணர்ந் தெற்றிஓர்
பெண்ணை வடபால்
கரும்பார்மொழிக் கன்னியர்
ஆடுந் துறையூர்
விரும்பாஉனை வேண்டிக்கொள்
வேன்தவ நெறியே... 7/13/4

திரு கலயநல்லூர்

திரு கலயநல்லூர்
(சாக்கோட்டை)

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்று அவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர் கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே
.. 7/16/1

திரு கலயநல்லூர்

பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின் முளை கறிகற்கக் கறவை கமழ் கழுநீர் கவர் கழனிக் கலயநல்லூர் காணே.. 7/16/6

திரு கழிப்பாலை

திரு கழிப்பாலை

சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கு மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பாருங் கழனிக் கழிப்பாலை மேயானே..7/23/4

திரு கற்குடி

திருகற்குடி
(உய்யக்கொண்டான், திருச்சி.)
வருங்கா லன்னுயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும்பாலன் தனக் காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பாரும் வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே..7/27/9

திரு கானாட்டு முள்ளூர்

திருக்கானாட்டு முள்ளூர்
(கானாட்டம்புலியூர்)

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்துறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. 7/40/3

திரு கச்சூர் ஆலக்கோயில்

திரு கச்சூர் ஆலக்கோயில்

மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானே..
7/41/5


திருஆரூர்

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லைஇருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக்
கட்டியைக் கரும் பின்தெளி தன்னைக்
காதலாற் கடற்சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை மறக்கலு மாமே.. 7/59/10


சுந்தரர் திருவடிகள் போற்றி.. போற்றி

பதிவின் பகுதி 
இரண்டு

தஞ்சை பெரிய கோயில் 
திருவிழா காணொளி
நன்றி: SFA Studios 


ஓம நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. தமிழே இனிது..  அதில் கரும்பையும் சேர்த்தால்  இன்னும் இனிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. திருவாரூர் திருத்தலத்தைத் தவிர மற்றவற்றை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

    பாசுரங்களும் பதிவும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. எம்பெருமான் ஈஸ்வரர் குடி கொண்டிருக்கும் அனைத்து கோவிலின் கோபுர தரிசனங்கள் பெற்றுக் கொண்டேன். சுந்தரர் பாடிய திருப்பாக்கள் நன்றாக உள்ளன. நீங்கள் நல்லதோர் தரும் குறிப்புக்களைப்பார்த்து , நினைவில் இருத்திக் கொண்டு, அந்தந்த சமயத்தில் பதிவுகளில் வெளியிடும் திறமைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்விதம் செய்யக் கூட இயலாதவள் நான். . எனவே உங்கள் தெய்வதன்மையுள்ள பதிவுகளுக்கும், அதை அற்புதமாக தொகுத்து தரும் தங்களது உழைப்பிற்கும் தலை வணங்கிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பதிவுகளை வழங்கி சிறப்பாக தொண்டாற்றி வரும்
      தங்களையும் வணங்கிக் கொள்கிறேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. காணொளி பாட்டு இன்னும் கொஞ்சம் வந்து இருக்கலாம் என நினைத்தது மனம். அருமையான காணொளி.

    பாடல்களை தேடி அந்த ஊர்களின் படங்களையும் பகிர்வது அருமை.
    கோபுர தரிசனம் கிடைத்தது காலையில் . பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    காலை யெழுந்து தொழுவார் தங்கள்
    கவலை களைவாய் //
    காலையில் எழுந்தவுடன் பதிகத்தைப்பாடி தொழுது கொண்டேன்.
    என் கணவர் அந்த அந்த கோவில்களை தரிசனம் செய்யப் போகும் போது தேவார பாடல் புத்தகத்தை எடுத்து போவார்கள்.
    அந்த ஊர் பதிகத்தை அங்கு அமர்ந்து பாடி வருவார்கள். அது போல பதிகம், கோவில்கள் படம் போடுகிறீர்கள் போய் வந்த புண்ணியம் இதிலும் உண்டு. இருக்கும் இடத்தில் இருந்து அவரை நினைத்து பாடுவதும் நம் வினை அகலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்தர தொழில் நுட்பத்துடன் திருவிழாக்களைப் படம் பிடித்து வழங்கும் அவர்களுக்கு நாம் கருத்து சொல்ல இயலாது..

      இந்த அளவுக்கு வழங்குவதே பெரிய விஷயம்..

      // கோயில்கள் படம் போடுகிறீர்கள்.. போய் வந்த புண்ணியம் இதிலும் உண்டு. இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை நினைத்து பாடுவதும் நம் வினை அகலும்.. //

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. கோயில்களின் பெயர்கள் என்ன அழகான பெயர்! எப்போதும் சொல்வதுதான் 'திரு' என்று தொண்டங்குவதே மனதைக் கவர்ந்துவிடும்!

    தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே! காணொளி அருமை. பாட்டும். சின்னதாகிவிட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி இடத்தில் இருந்து வருகின்ற காணொளிக்கு நாம் ஆலோசனை ஒன்றும் சொல்ல முடியாது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. இந்தப் பதிவுக்குக் கொடுத்த கருத்து காணாமல் போயிருக்கு. என்ன சொல்லி இருந்தேன்னு நினைவில் இல்லை. ஆனால் நெல்லைக்குப் பதில் கொடுக்கையில் உங்கள் தேவார/திருவாசக அறிவாற்றலே நினைவில் வந்து போனது.

    பதிலளிநீக்கு
  7. சுந்தரர் பாடிய பாக்களுடன் கோவில் கோபுர தரிசனங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..