வியாழன், மார்ச் 23, 2023

வணக்கம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 9
  வியாழக்கிழமை


வணக்கம்!..

பாரதத்தின் உன்னதமான உயர்ந்ததொரு பண்பாடு..

வணங்குவதும் வாழ்த்துவதும் 
இறையுணர்வில் பூத்திருக்கும்
மங்கலத்தின் அடையாளங்கள்..

நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!.. 
- என்றது தமிழ்..

மாணிக்க வாசகர் அருளிய திருவாக்கு இது..

மேலும்,
கரமலர் மொட்டித்து,
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்.. - என்றெல்லாம் இறையடியார்களைக் குறிக்கின்றார் மாணிக்கவாசகர்..

மருகலானடி வாழ்த்தி வணங்கிடே!.. - என்று அன்புக் கட்டளையிடுபவர் திருநாவுக்கரசர்..

இரு கரங்களையும் கூப்பி வணக்கம் என்று செல்லும்போதே மனம் நெகிழ்ந்து விடும்.. 

வணக்கம் சொல்லும் முறையை இடத்துக்கு இடம் வேறுபடுத்தி வகுத்திருக்கின்றனர்.. 
 
வறண்ட மனதுடன் சாதாரணமாக இரு கைகளையும் கூப்புவதோ தலைக்கு மேலே தூக்குவதோ  வணக்கத்தில் சேராது.. முகமும் மனமும் ஒருசேர மலர்ந்திருக்க வேண்டும்.. 

இரு கரங்களையும்  நெஞ்சுக்கு நேராகக் கூப்பி வணக்கம் என்று  சொல்வது ஒருவரை  நாம் மனதார வரவேற்கின்றோம்.. வரவேற்பதில் மகிழ்கின்றோம் - என்பதற்கான அடையாளம்..  

நெஞ்சுக்கு நேராக கை கூப்பி வணக்கம் சொல்வது எல்லாருக்குமானதல்ல..

பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை விழுந்து வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வகுத்தது.. 

தாய் தந்தை உறவு முறை உடையவர்களுக்கும் வயதில் மூத்தோருக்கும் முகத்திற்கு நேராக இரு கரங்களையும் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். 



நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர்கள் என்றால் நெஞ்சுக்கு நேராக கரங்களைக்  கூப்பி வரவேற்க வேண்டும்..


கல்வி கற்பித்த  ஆசிரியருக்கு - நெற்றிக்கு நேராக  கரங்களைக் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும். 

நன்றாக நம்மைப் படைத்து உண்ணவும் உடுக்கவும் உழைக்கவும் உறங்கவும் ஆகியவற்றில் நமக்கு நல்ல சூழலை அமைத்துக் கொடுத்த இறைவன் எல்லாவற்றிற்கும் மேலானவர். 

மனிதன் வகுத்து வைத்திருக்கும் அனைத்தையும் கடந்து உயர்ந்தவர் என்பதால், இரு கரங்களையும் கூப்பி - தலை மேல் வைத்து வணங்குகிறோம்..

கூப்பிய கரங்களை தலையின் மேலே வைத்து வணக்கம் சொல்வதற்கு திரியங்க நமஸ்காரம் என்று பெயர்..

திரியங்க நமஸ்காரத்தில்
உச்சந்தலையில் உள்ள (துரியம்) சஹஸ்ரார கமலத்துடன் கைகளாகிய கமலத்துக்கு ஸ்பரிசம் விளைகிறது..
சஹஸ்ரார கமலமும் கர  கமலமும் தீண்டிக் கொள்வதால்  ஹ்ருதய கமலமாகிய ( அநாகத சக்கரம்) நெஞ்சகத்தில் பேரானந்தம் பெருக்கெடுக்கின்றது..

இதற்கு அடுத்த நிலையாக இரு கரங்களையும் கூப்பி
தலைக்கு மேல் உயர்த்தி வணங்குகிறோம்..

இந்நிலை துவாதசாந்த நமஸ்காரம் எனப்படும்..

கரங்குவிவார் உள்மகிழுங் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க.. -
என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்வது இந்த நிலைகளைத் தான்..


கரங்குவிவார் உள்மகிழுங் கோன் .. - என்பதற்கு இதயக்கமலத்தில் வசிக்கின்ற இறைவன் என்றும் பெரியோர்கள் பொருள் சொல்கின்றார்கள்..

அதுவும் ஏற்புடையதே..
அநாகதம் எனும் இதயக் கமலத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்து விட்டால் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் எல்லாம் தானே நடக்கும் என்பர்..

தலைக்கு மேல் கூப்பி இறைவனை வணங்குவது பாரதப் பண்பாடு.. இந்த மண்ணிற்கே உரியது.. இந்த அன்பும் அன்பின் அடையாளமும் வந்தேறிய எவராலும் சொல்லித் தரப்பட்டதில்லை..

இதற்கு வேறு யாரும் உரிமை கொண்டாடவே முடியாது..

பிறந்த குழந்தைக்கு உச்சந்தலையில் சிறு குழி எலும்பினால் மூடப்படாமல் தோலினால் மூடப்பட்டிருக்கும்.. இதை பிரம்மரந்திரக் குழி என்பர்..

இந்த பிரம்மரந்திரம் என்பது தக்ஷிணமேரு எனப்படும் தஞ்சை பெரியகோயில்  ஸ்ரீ விமானத்துடன் பேசப்படுவது.. வேறு எந்தக் கோயிலிலும் பிரம்மரந்திரம் பேசப்படுவதில்லை..

நான் இருக்கின்றேன்!. - என்று,  ஒவ்வொரு மனிதனுக்கும் ஈசன் உணர்த்தும் இடம் தான் பிரம்மரந்திரம்..


கர்ப்பப்பையில் - காத்திருக்கும் கரு முட்டையை துளைத்துக் கொண்டு நுழைந்த நுண்ணியதோர் உயிரணுவை பத்து மாதங்களில் சிசுவாக ஆக்கத் தெரிந்த இறைவனுக்கு - அந்த சிசுவின் உச்சந் தலையை எலும்பினால் மூடத் தெரியாதா?..

தெரியும்!..

உச்சந்தலைக் குழியைத் தோலால் மூடி அனுப்பி வைக்கின்ற ஈசனின் விளையாட்டு அங்கிருந்து தான் தொடங்குகின்றது...

இதற்கு மேற்கத்திய விஞ்சானம் (விஞ்ஞானம்) பல வித விளக்கங்களைத் தருகின்றது என்றாலும் நம்முடைய மெய்ஞ்ஞானம் வேறு!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. கரம்கூப்பி நமஸ்காரம் சொல்வதன் வகைகளை பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன்.  மறுபடி நினைவுபடுத்திக் கொண்டேன்.  பிரம்மரந்திரக் குழி பற்றி மேலும் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. நாளையும் கட்டுரை தொடரும் என்று நினைக்கிறேன். பாதியில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தொடர்கின்றது..

      அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம்...... வணக்கம் எத்தனை விதங்கள்...... விரிவான விளக்கம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அரிய தகவல்கள் தந்தீர்கள் ஜி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வணக்கம் , வாழ்க வளமுடன்
    எல்லாம் மிக அருமையான விளக்கங்கள்.
    பிரம்மரந்திர குழி விளக்கம் அருமை, மேலும் அடுத்த பதிவில் வரும் என்று நினைக்கிறேன்.
    அநாகத சக்கரம் சரியாக இயங்கினால் எல்லாம் சுகம்.
    நல்ல காரியங்கள் நல்லதாக நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவும் காத்திருக்கின்றது..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
    வாயினர் ஆதல் அரிது

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான குறள்..

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வணக்கம் பற்றிய விளக்கங்கள் அருமை. வாசித்திருக்கிறேன். இங்கு மீண்டும் உங்கள் பதிவின் வழி அதன் பெயர்களையும் - திரியங்க என்பதானவை - தெரிந்துகொன்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. வணக்கம் குறித்த விபரமான பதிவை ரசித்துப் படித்தேன். ஒவ்வொருவரையும் முறைப்படி வணங்கிக் கொள்ளுதல் எப்படி எப்படியென தெரிந்து கொண்டேன். அருமையான நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இருகரம் கூப்பி வணக்கம் செய்யும் முறைகள் பற்றி விரிவான பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..