ஞாயிறு, மார்ச் 19, 2023

ஏழாம் கிழமை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 5
   ஞாயிற்றுக்கிழமை

ஏழாம் கிழமை  - என, எங்கோன் முருகனுக்கு  
தொடுக்கப்பட்ட பாமாலை இது..

ஆறு கிரகங்களை ஆறுதலங்களுடன் வைத்து ஏழாவது கிழமையில் சனைச்சரனுடன் இருகோள் அரவு என ராகுவையும் கேதுவையும் வைத்துள்ளேன்..

நிறைவாக கொடி முதல் குடி வரை 
போற்றியுள்ளேன்..

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு 
முன்னர் நவக்ரக மாலை ஒன்றை எழுதி
வைத்திருந்தேன்..
  
கணினி மாற்றத்தில்
நூற்றுக்கணக்கான கோப்புகள் 
எங்கு சென்றனவோ தெரியவில்லை..


ஏழாம் கிழமை என் கவிக்குள்ளே
எழிலாய்த் திகழ எனக்கருள் புரிவாய்
தாளாம் தண்மலர்த் தாமரை தொழுதேன்
விழிகொண் டருளும் விநாயக வருக..
வாழும் நாளும் வளரும் நாளும்
வழித்துணை என்று வந்தவன் வாழ்க.
சூழும் நல்வினைக் காரணன் வருக..
வலஞ்சுழி வாரணன் வருக வருக..


செங்கதிர் செல்வன் தானெத் திகழும் 
சிவ சண்முகனே சரணம் சரணம்..
செஞ்சுடர் வேலுடன் செந்தூர் திகழும் 
சேந்தன் திருவடி சரணம் சரணம்..
எந்தையும் தாயும் தானென நிற்கும் 
சண்முகவேலா சரணம் சரணம்..
கரிமுகன் சோதர சரணம் சரணம் 
கதிர்வே லவனே சரணம் சரணம்!..


திங்கட் கலையாய் திகழும் தெய்வத் 
தென்பரங் குன்றத் திறைவா போற்றி
எங்கள் பிழைகள் எல்லாம் பொறுத்துப் 
புண்ணியம் அருளும் அரசே போற்றி
வெஞ்சினத் தோர்தனை வீழ்த்திய 
வேலா யுதனே போற்றி போற்றி போற்றி
குஞ்சரி கைத்தலம் பற்றிய குகனே 
குமரா உந்தன் திருவடி போற்றி!..


மங்கலம் யாவும் மாண்புறு வண்ணம் 
மாமலை நின்றவன் மலரடி போற்றி
செங்கரந் தன்னில் சீர்தரும் செல்வப் 
பழனியின் செல்வன் சேவடி போற்றி 
மங்கல மனையுறு மங்களன் போற்றி 
தண்மலர்த் தாமரைத் திருவடி போற்றி
எந்தன் தலைதனில் தாள்மலர் வைப்பாய் 
தண்டா யுதனே தலைவா போற்றி!..


இதமுறு நெஞ்சில் பதமுறு வண்ணம் 
நிதமும் நல்லருள் நல்குவை போற்றி
புதனொடு பூத்திடும் நல்லறி வெல்லாம் 
தமிழொடு நாவில் புரிகுவை போற்றி
ஏரகச் செல்வ என்றன் தலைவா
இணையடி மலர்கள் என்றும் போற்றி
நீரகக் காவிரிக் காவல போற்றி 
செந்தமிழ் சிவகுரு மணியே போற்றி!..


குருமணி போற்றி குகமணி போற்றி 
சேவற் கொடியுடை சிவமணி போற்றி
குஞ்சரி யுடனொரு கோலக்  கொடியாய் 
குறமகள் கொண்ட தவமணி போற்றி
திருவளர் தணிகா சலனே  போற்றி 
கருவளர் உயிருள் தமிழே போற்றி
நெஞ்சகந் தன்னுள் நிலையாய் நிற்கும் 
நின்மலர் அடிகள் போற்றி போற்றி..


அள்ளி அணைத்திடும் அன்னையின் மேலாய் 
அன்பினைக் காட்டும் அரசே போற்றி
குஞ்சரி தன்னொடு குறமகள் கூடி 
சோலைமலை தனில் வாழ்வே போற்றி
வெள்ளி முளைத்திடும் விடியற் பொழுதென 
புண்ணிய நல்கும் திருவடி போற்றி 
அஞ்சிடும் நெஞ்சில் அருள்மழை பொழியும் 
அறுமுக வேலன் அடிமலர் போற்றி!..


உனைச் சரண் புகுந்தேன் உயிரினில் ஏற்றி 
அறுபடை வீட்டின் தலைவா  போற்றி 
கரியன் என்னைக் கடையா வண்ணம் 
அரசே அருள்வாய் அழகா போற்றி
இருகோள் அரவம் வாராது அகல 
மயில் வாகனனே மலரடி போற்றி
எனைக்காத் தருள்வாய் எம்பெருமானே 
பன்னிரு கரத்தாய் பதமலர் போற்றி!..


நாளுடன் நாளாய் நலமுடன் வாழ்க
நலஞ்செய் தமிழின் எந்தாய் வாழ்க
நாவினில் தமிழாய் வந்தாய் வாழ்க
மலையுறு மன்னவ மலரடி வாழ்க
மணிவேல் வாழ்க மாமயில் வாழ்க
மாமலைச் சேவற் கொடியும் வாழ்க
 குஞ்சரி வாழ்க குறமகள் வாழ்க
குலவிடும் அன்பின் குவலயம் வாழ்க..


தண்முகத் தாமரை கணபதி வாழ்க
மண்ணும் வாழ்க விண்ணும் வாழ்க
விளங்கிடும் விண்கோள் யாவையும் வாழ்க
நான்முகன் வாழ்க நாரணன் வாழ்க
வண்டார் குழலி குமரியள் வாழ்க
கொண்டார் மனந்தனில் குழகன் வாழ்க
நன்றாய் நந்தி நற்றாள் வாழ்க
சீராய் சிவகணம் வாழ்கவே வாழ்க..

முருகா.. முருகா
முருகா.. முருகா
***

5 கருத்துகள்:

  1. ஓம் முருகா...  அருமையாய் எழுதி இருக்கிறீர்கள்.  ஏற்கெனவே சொன்னபடி இப்படி எழுதி இருப்பதை சிறு காகிதங்களில் பிரிண்ட் செய்து கோவிலில் வைத்து விட்டால் தரிசிக்க வருவார் பலருக்கு போற்றிச் சொல்ல உதவியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ஏழாம் கிழமை முருகனுக்கு தொகுக்கப்பட்டுள்ளன பாமாலை அருமை. ஓம் முருகா....ஓம் முருகா.

    பதிலளிநீக்கு
  3. அருமையாக எழுதியிருக்கீங்க துரை அண்ணா. பண்டு எழுதிய நவகிரக மாலை நினைவில் இருந்தால் அதையும் எழுதி வைத்துக் கொண்டு பதிவிடுங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாமாலை தொகுப்பு . ஏழாம் -கிழமை முருகனுக்கு தொகுக்கபட்ட பாடல்களை பாடி முருகனை வணங்கி கொண்டேன். பாமாலை அனைத்தையும் தொகுத்து பத்திரமாக புத்தகம் ஆக்கி வையுங்கள் .
    நவக்கிரக மாலையும் புதிதாக எழுதலாம். உங்களால் முடியும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..