சனி, மார்ச் 11, 2023

அவனுக்குத் தெரியும்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 27
சனிக்கிழமை
-::-


வெற்றிச் சங்குகள் எங்கும் முழங்கின..

துரியோதனின் வீழ்ச்சியுடன்
மகாபாரதப் போர்  முடிவுக்கு வந்து விட்டது.. 

பாண்டவப் படை வீரர்கள் வெற்றிக் களிப்பில் ஆழ்ந்தனர்..

போர் முடிவுக்கு வந்தவுடன் அர்ச்சுனன் தேரிலிருந்து  
தனது சாரதியாகிய  கண்ணனை இறங்கி - தனக்குக் கை கொடுத்து இறக்கி விடுமாறு கூறினான். 

சாரதி முதலில் தேரிலிருந்து
இறங்கி - அரசனின் கையைப் பற்றி தேரிலிருந்து இறக்கி விட வேணடும் என்பது மரபு.. 

அந்த வழக்கப்படியே கண்ணனை முதலில் இறங்கும்படி அர்ச்சுனன் கூறினான்.

ஆனால், கண்ணனோ - அதைக் கேளாமல் அர்ச்சுனனை, முதலில் இறங்குமாறு கூறினான்.. 

அர்ச்சுனன்  யோசிக்கவே சற்றே கோபத்துடன் அவனை இறங்கச் செய்தான் கண்ணன்.  

அர்ச்சுனன் இறங்கியவுடன்,
குதிரைகளின் கயிற்றை வீசி  பிணைப்பை விடுவித்தபடி - கண்ணன் தேரிலிருந்து இறங்கினான்..

தேரின் பிணைப்பில் இருந்து விடுபட்ட
சைப்யா,மேகபுருஷ், சுக்ரீவ், பலஹாகா - எனும் நான்கு குதிரைகளும் வெருண்டு ஓடித் தப்பித்தன..
 
கண்ணன் தேரில் இருந்து இறங்கிய அக்கணமே, தேரின் கொடியிலிருந்த அனுமன் - "ராம் ராம்!.." - என்றபடி விண்ணில் தாவினார்...

அந்த விநாடியே - தேர் தீப்பற்றிக் கொண்டது. 

காண்டவம் என்ற வனத்தை  அக்னிக்கு இரையாக்கிய போது அக்னி தேவனால் அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்ட அந்தத் தேர் அக்னியுடன் ஐக்யமாகியது..

அதுவரைக்கும் தேரைச் சூழ்ந்திருந்த பகை அஸ்திரங்களின் மந்திர சக்திகள் தேரைப் பற்றிக் கொண்டன. 

தேரிலிருந்து வலுவில் இறக்கப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த அர்ச்சுனன் இதைக் கண்டதும்
அதிர்ச்சியடைந்தான்.. 

தான்  காப்பாற்றப்பட்டதை உணர்ந்து பரந்தாமனின் திருவடிகளில் விழுந்தான்.. 

அஸ்திர மந்திரங்கள் குறித்து கண்ணன்
 உணர்ந்திருந்ததாலேயே  அர்ச்சுனனுக்கு தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று, அர்ச்சுனனை முதலில் தேரிலிருந்து இறங்கச் செய்து காத்தருளினான்..
**


பல நேரங்களில் நாம் கேட்பதை கடவுள் தருவதில்லை..
நமது விருப்பங்களை  நிறைவேற்றுவதும் இல்லை!..

அது ஏன்?.. 

இப்படித்தான் பல சமயங்களில் - நடக்கின்றது..

நினைத்ததை தெய்வம் நடத்திக் கொடுக்க 
வில்லையே.. என்று நாம் வருத்தத்துடன் இருக்கின்றோம்..

இதன் பேரில் சிலர் கோயிலின் பக்கம் தலை காட்டுவதே இல்லை

நமக்கு எதை எப்போது எப்படிக் கொடுப்பது என்று கடவுளுக்குத் தான் தெரியும்!.. 

வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது  அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டி னல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே...
-: ஸ்ரீமாணிக்கவாசகர் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. எல்லாம் நன்மைக்கே. எதை எப்போது எப்படி கொடுக்க வேண்டும் என்று இறைவன் அறிவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லாம் நன்மைக்கே. எதை எப்போது எப்படி கொடுக்க வேண்டும் என்று இறைவன் அறிவான்.///

      உண்மை.. உண்மை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ஆறுதலாச் சொல்லறீங்க. ஆனால் அனுபவிக்கும்போது கஷ்டம் நமக்குத்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவிக்க வேண்டும் என்பதே விதியாக இருந்தால் என்ன தான் செய்வது?..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. அருமை...

    வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு மேல் வேறொன்றும் இல்லை!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. //7நமக்கு எதை எப்போது எப்படிக் கொடுப்பது என்று கடவுளுக்குத் தான் தெரியும்//

    நல்லதொரு விளக்கம் ஜி
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அவன் செயல் என்று சொல்லி வைத்தார்கள்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. அனைத்தையும் இறைவன் அறிவான்
    நல்ல கதை மூலம் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    'எதை எப்போது எப்படிக் கொடுக்க வேண்டும் ' கேட்காமலேயே பல சமயங்களில் கிடைக்கும். எல்லாம் அறிந்த அவனுக்கே தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தெரிந்தவன் இறைவன் ஒருவனே...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. கதையை வாசித்து வரும் போதே மனதில் எழுந்த என்ன கருத்திட கருத்திட நினைத்தேனோ அதே கருத்தினை, நீங்களும் சொல்லிவிட்டீங்க பிங்க் நிற எழுத்துகளில்!!!! அதேதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மாவில் இருந்து வரக் கூடிய கருத்துகள் ஒத்துப் போவதில் அதிசயம் இல்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. இன்று வாட்ஸப் செய்தியும் நீங்கள் சொன்னது போலவே வந்தது.
    எடுத்து காட்டு-: உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா , உயிர் என்ற மாட்டுடன் பூட்டி இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்.

    அவனே தீர்மானிப்பவன், அவன் இயக்குவான், மனிதன் இயங்குகிறான்,

    எவ்வளவு காலம், எவ்வளவு நேரம், எவ்வளவு பாரம் தீர்மானிப்பது இறைவனே!

    நமக்கு எதை எப்போது எப்படி கொடுப்பது என்பதை தீர்மனிப்பது இறைவனே என்பது உண்மை. அவன் ஆட்டி வைக்கிறான் நாம் ஆடுகிறோம்.


    பதிவு மிக அருமை.
    பாடல் பகிர்வு, படங்கள் எல்லாம் அருமை.
    இறைவன் மேல் பாரத்தைப்போட்டு சிவனே என்று இருப்போம்.

    பதிலளிநீக்கு
  8. /// அவனே தீர்மானிப்பவன், அவன் இயக்குவான், மனிதன் இயங்குகிறான்.///

    அற்புதமான கருத்து... இதை உணர்ந்து விட்டால் ஆணவத்துக்கு இடமே இல்லை..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி ..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..