நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 11
வியாழக்கிழமை
பொழுது போகவில்லை என்று ஒருமுறை ஸ்ரீ ஹரி பரந்தாமனும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினர்..
இவர்களது விளையாட்டுக்கு நடுவராக பார்வதி..
இந்தப் பக்கம் அன்பின் கணவர்.. அந்தப் பக்கம் ஆருயிர் அண்ணன்..
சொக்கட்டான் காய்கள் கலகல என்று உருண்டன.. காய் உருட்டும் போது ஏற்பட்டது அவருக்கும் இவருக்கும் வாக்குவாதம்..
இருவரும் இமயவல்லியை நோக்கினர்..
கோவிந்த ரூபிணியின் தீர்ப்பு கோவிந்தனுக்கு சாதகமானது!..
அதனால், கோபித்துக் கொண்ட சிவபெருமான் - " தேவி.. நீ பசுவாகக் கடவது!.. " - என்றபடி புதியதொரு திருவிளையாடலை ஆரம்பித்து விட்டார்..
பசுவாக பூமிக்கு வந்த அம்பிகைக்குத் துணையாக - லக்ஷ்மியும் சரஸ்வதியும் பசுக்களாகி வந்தனர்.
இப்படியான பசுக்களை மேய்ப்பவராக - பெருமாளும் வந்தார்..
அந்தப் பகுதி முழுவதும் மேய்ந்து திரிந்தன தெய்வப் பசுக்கள்..
பெருமாளும் பசுக்களும் காவிரியில் நீராடியபோது சாப விமோசனம் ஆகியதாக ஐதீகம்..
அதன்படி - தேரழுந்தூர் திவ்யதேசத்தின் மூலஸ்தானத்தில் ஸ்வாமியை வணங்கியவாறு காவிரியும் உடன் இருக்கின்றாள்..
பசுக்களை மேய்த்தபடி ஆமருவியப்பன் என திருப்பெயர் கொண்டு திருக்காட்சி நல்கி நின்ற இடம் தான் இக்காலத்தில் தேரழுந்தூர் எனப்படும் திருத்தலம்..
இத்தலத்தில் மேற்கு முகமாக ஈசனும் கிழக்கு நோக்கியவாறு பெருமாளும் அருளாட்சி செய்கின்றனர்..
திரு அழுந்தூர்
(தேரழுந்தூர்)
இறைவன்
ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ சௌந்தரவல்லி
தீர்த்தம் வேத தீர்த்தம்
தலவிருட்சம் சந்தனமரம்
வேதங்களும் தேவர்களும் மார்க்கண்டேயரும் காவிரியும் வழிபட்டு உய்வடைந்த தலம்.
அகத்தியர் பூஜிப்பதை அறியாத ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் சிவ தலத்தின் மேலாக ஆகாயத்தில் தேரைச் செலுத்தியபோது அது மேலே செல்லாமல் பூமிக்குள் அழுந்தியதாக தலபுராணம்..
இதே சம்பவம் வைணவ சம்பிரதாயத்தில் சற்று மாறுதலுடன் - கீழ்க்கண்ட விதமாகச் சொல்லப்படுகின்றது..
உபரிசரவஸ் என்பவன் - தனது தேர் வானத்தில் வரும் போது - தேரின் நிழல் எவற்றின் மீதெல்லாம் படுகின்றதோ அவையெல்லாம் கருகிச் சாம்பலாகிப் போகும்படியான வரத்தைப் பெற்றிருந்தான்.
இப்படி ஒரு வரத்தை எங்கிருந்து பெற்றான் எனத் தெரியவில்லை..
மற்ற உயிர்களின் துன்பத்தில் மகிழ வேண்டும் - என்ற கொடூர எண்ணம் அவனுக்கு!..
தான் பெற்ற வரத்தை சோதித்துப் பார்ப்பதற்கு முனைந்த அவன் விமானத்தில் ஏறிப் பறந்தான்..
இவன் மேலே பறந்த போது - கீழே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களின் மீது விமானத்தின் நிழல் பட்டது.. பெற்றிருந்த வரத்தின் தன்மையால் - பசுக்கள் கதறித் துடித்தன.
பசுக்களின் கதறலைக் கேட்ட ஹரிபரந்தாமன் - சினங்கொண்டு - தேரின் நிழலில் தன் கால் விரலை வைத்து அழுத்தினான்.
அந்த அளவில் - வானில் பறந்து கொண்டிருந்த தேர் பூமிக்கு இறங்கி மண்ணுள் அழுந்தி - புதையுண்டு போனது.
தேர் அழுந்தியதால் - தேரழுந்தூர் என்பது பெயராயிற்று.
ஞானசம்பந்தர் திருப்பதிகம் செய்துள்ளார்..
அப்பர் பெருமான் திருவூர் திருத் தொகையுள் வைத்துப் போற்றுகின்றார்..
சோழ நாட்டின் காவிரி தென்கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முப்பத்தெட்டாவது சிவத்தலமாகும்.
அருகில் உள்ள சிவாலயங்கள்
திருத்துருத்தி (குத்தாலம் - 4 கிமீ)
திருவேள்விக்குடி (5 கிமீ)
திருக்கோழம்பம் (5 கிமீ)
திருநீலக்குடி (6 கிமீ)
திருவாவடுதுறை (6 கிமீ)
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த தேவதேவன் ஊர்போலும்
நீரில் பணைத்த நெடுவாளைக்கு அஞ்சிப்போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே.. 1589
-: திருமங்கையாழ்வார் :-
அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் இவையேந் துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே.. 2/20/5
-: திருஞானசம்பந்தர் :-
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சில சமயங்களில் ஊர் பெயரை வைத்தோ, பெருமாள் பெயரை வைத்தோ நாமே கூட ஒரு பொருத்தமான கதையைப் புனைந்து விடலாம் என்று தோன்றும்.
பதிலளிநீக்குஹரிஹரன் அனைவரையும் காக்கட்டும்.
அதுவும் ஒருவகையில் நல்லது தானே..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
தல வரலாறை அழகாய் கதை போல் சொன்னது அருமை. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
பதிலளிநீக்குஇரண்டுகோவில்களும் எதிர் எதிராக இருக்கும்.
தரிசனம் செய்த நாட்கள் நினைவுகளில் வருகிறது.
பாசுரம், தேவாரம் பாடி வணங்கி கொண்டேன்.
ஆம். இரண்டு கோயில்களும் எதிர் எதிரே அமைந்தவை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
தரிசித்து கொண்டேன் நன்றி. வாழ்க வையகம்.
பதிலளிநீக்குவாழ்க. வளமுடன்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
தேரழுந்தூர் தரிசனம். தலவரலாறு அறிந்தோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குநலம் வாழ்க..
அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
சிவாய நம ஓம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
முணுக்கென்றால் ஒரு சாபம் - ஏன் சிவன் கோபித்துக் கொண்டாரோ?!!! மைத்துனன் தானே!!!..
பதிலளிநீக்குதல வரலாறு சுவாரசியம்...
கீதா
கடைசியில் எல்லச்ம் நாடகம் என முடித்து விடுவார்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நலம் வாழ்க..