நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 21
சனிக்கிழமை
நன்றி:-
பதிகப் பாடல்கள்:
பன்னிரு திருமுறை
படங்கள்: இணையம்..
**
காஞ்சியில் இருந்து திரு ஆரூருக்குப் புறப்பட்ட சுந்தரர்,
முன்னெறி வானவர் கூடித் தொழுதேத்து முழுமுதலை
அந்நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர் குலக்கொழுந்தை மறந்திங்ஙனம் நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.. (7/51)
- என்ற உணர்வுடன் சென்றார்.
வழியில் திரு ஆமாத்தூர், திருநெல்வாயில் அரத்துறை ஆகிய தலங்களைத் தரிசித்து சோழ நாட்டை அடைந்தார்..
திருவாவடுதுறையை வணங்கி வழிபட்டுத் திருத்துருத்தியைச் (குத்தாலம்) சேர்ந்தார்..
அங்கே வட குளத்தில் மூழ்கிக் குளிக்க அவரைப் பற்றியிருந்த தோல் நோய் விலகிற்று..
உத்தால வேதீஸ்வரரையும் பரிமள சுகந்த நாயகியையும் தரிசித்த பின் -
அங்கிருந்து திரு ஆரூரை அடைந்தார்..
ஆரூர் பூங்கோயிலினுள் சென்று வழிபட்டார்..
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திரு ஆரூரீர்
வாழ்ந்து போதீரே.. (7/95)
எனக்கு இத்தனை இன்னல்களைக் கொடுப்பது தான் நீதி எனில், நீரே வாழ்ந்து கொள்ளும்!..
- என்று, மனம் குழைந்து பாடினார்..
இது கேட்ட - இறைவன் இரக்கங்கொண்டு
போதும் விளையாட்டு என, வலக் கண்ணிலும் பார்வையைத் தந்தருளினன்..
இரு விழிகளிலும் பார்வை மீளப் பெற்ற சுந்தரர் - புற்றிடங் கொண்டாரையும் அல்லியங்கோதை அன்னையையும் கண்ணாரக் கண்டு வணங்கி இன்புற்றார்..
இதற்கிடையே -
திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டதால் வருத்தமுற்றிருந்த பரவை நாச்சியாரின் ஊடலையும் தியாகேசப் பெருமான் தீர்த்து வைத்தருளினார்..
பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே..
என்று, சுந்தரரும் - தியாகேசப் பெருமானை வணங்கி இன்புற்றிருந்தார்..
ஸ்ரீ சுந்தரர்
திருக்கயிலாயத்தின் வெண்பனிப் பளிங்கில் இருந்து - எம்பெருமானின் சாயலாகத் தோன்றியவர்..
ஈசனின் அணுக்கத் தொண்டராக திரு நீற்று மடல் தாங்கி திருப்பணி புரிந்தவர்..
ஈசனால், சுந்தரா.. என விளிக்கப்பட்டவர்..
நந்தவனத்தில் மலர் கொய்த வேளையில் அம்பிகையின் பணிப் பெண்களாகிய அநிந்திதை கமலினி என்ற நங்கையர் இருவரை மின்னல் பொழுது நோக்கிய காரணத்தால் அவர்களுடன் வாழ்தற்பொருட்டு பூமியில் தோன்றினார்.
தமிழகத்தில் திருமுனைப்பாடி நாட்டின் தலை நகராகிய திருநாவலூரில் ஆதிசைவ வேதியர் மரபில் சடையனார் இசைஞானியார் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார்..
குழந்தைக்கு நம்பி ஆரூரர் எனப் பெயரிட்டு வளர்த்து வருங்கால், திருமுனைப்பாடி நாட்டின் அரசராகிய நரசிங்க முனையரையர் குழந்தையின் அழகினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோரிடம் சென்று கேட்டுப் பெற்றுத் தமது வாரிசாக வளர்த்து வந்தார்..
பதின்ம வயதில் திருமணம் கூடி வந்த வேளையில் - ஈசனால் தடுத்தாட் கொள்ளப்பட்டார்..
அது முதல் அரச உரிமையைத் துறந்து சிவாலயங்கள் தோறும் வணங்கி வழிபட்டவர் ஆரூரர்..
ஈசனிடம் கொண்ட அன்பினால் தம்பிரான் தோழர், வன்தொண்டர் என்பன சிறப்புப் பெயர்கள்..
மக்களைக் காப்பதற்கு அறியீரானால் எதற்காக இருந்தீர் எம்பெருமானீர்?.. என, வினவும் அளவுக்குத் திறம் படைத்தவர்..
ஈசன் தமக்களித்த பெருஞ் செல்வத்தை எல்லாம் ஊர் மக்களுக்குப் பகிர்ந்தளித்தவர்..
கோட்புலி நாயனாரின் மகள்களான வனப்பகை, சிங்கடி - எனும் இருவரையும் தன் மகள்களாக ஏற்றுக் கொண்டு பதிகங்களில் பாடி மகிழ்ந்தவர்..
சோமாசி மாற நாயனார்க்கு சிவதரிசனம் செய்து வைத்தவர்..
அவிநாசியில் முதலை தின்று தீர்த்த சிறுவனை அதன் வாயில் இருந்து மீட்டுக் கொடுத்தவர்..
ஆரூரில் பரவை நாச்சியாரையும் திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் இறையருளால் மணந்து கொண்டவர்..
இப்படி இருந்தும் சங்கிலி நாச்சியாருக்கு செய்தளித்த சாத்தியத்தை மீறியதால் இரு விழிகளிலும் பார்வையை இழந்து எண்ணற்ற துன்பங்களை அடைந்தவர்..
பார்வை இழந்த நிலையிலும் மன உறுதியுடன் தலங்கள் பலவற்றைத் தரிசித்தவர்..
வையகத்து மாந்தராகிய நம்மில் யாரும்
நம்பி ஆரூரர்க்கு அணுவளவும் ஈடாக மாட்டோம்..
இருப்பினும் துயருற்ற வேளையில் ஸ்ரீ நம்பி ஆரூரர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் நம் பொருட்டு நின்று உலவுகின்றன..
அத்திருப்பதிகங்களின் துணை கொண்டு நாம் பிறர்க்காகவும் நமக்காகவும் - ஈசன் எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்வோம்..
கட்டமும் பிணியும் களைவானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை
விரவினால் விடுதற் கரியானைப்
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை
வாராமே தவிரப் பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலுமாமே.. (7/59)
ஆரூரா தியாகேசா..
தியாகேசா ஆரூரா..
சுந்தரர் திருவடிகள்
போற்றி போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க....
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நீக்குநலம் வாழ்க..
சுந்தரர் அருளி செய்த பதிகங்களை பாடி அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
பதிலளிநீக்குமீளா அடிமை, பொன்னும் மெய் பொருளும் பாடல் அடிக்கடி பாடுவேன்.
சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி.
சுந்தரர் அருளிச் செய்த பதிகங்களை பாடி அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..
நலம் வாழ்க..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
ஓம் சிவாய நம..
நீக்குவாழ்க வளமுடன்..
மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நலம் வாழ்க..
சுந்தரர் அருளிய பதிகங்களை வாசித்துக் கொண்டேன். எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
//எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும்..//
நீக்குஅதுவே.. அதுவே..
அன்பின் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
நலம் வாழ்க..
அருமை...
பதிலளிநீக்குமுருகா சரணம்...
முருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி தனபாலன்..
நலம் வாழ்க..
சுந்தரர் திருவடிகள் போற்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..