செவ்வாய், ஜனவரி 17, 2023

காணும் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
செவ்வாய்க்கிழமை
மங்கலகரமான
தை மாதத்தின் மூன்றாம் நாள்.
  
அனைவருக்கும்
அன்பின் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்..


இந்நாளில் பெரும்பாலான
மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சந்தித்து  அன்பையும் மகிழ்ச்சியையும் மங்கலங்களையும் பகிர்ந்து கொள்வர்.. 




இது தைப்பொங்கலின்  மூன்றாம் நாள் விழா.

காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் கூறுவர்..

கிராமங்களில் பொது மந்தையில் இளம் பெண்கள் கூடி கூட்டாகப் பொங்கல் வைத்து கோலாட்டம் கும்மி என விளையாடி மகிழ்வர்..

பெண்கள் தமக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர்.

ஆண்களும் உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசங்கள் நிகழ்த்திக் காட்டுவர்..

பெண்களுக்கு சிறப்பான நாள் இன்று.




இந்நாளில் 
சில குடும்பத்துப் பெண்கள் தமது குல வழக்கப்படி கணுப்பிடி நோன்பு என, உடன் பிறந்த சகோதரர்களுக்காக ஏற்பர்..

தமிழகத்தின் சில வட்டாரங்களில்
காணும் பொங்கல் ஆற்றங்கரைத் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது..

இன்று சுவாமி தீர்த்தவாரிக்கு ஆற்றங்கரைக்கு எழுந்தருள்வார்.. மக்கள் குதூகலத்துடன் பல விதமாக  விளையாடி மகிழ்வார்கள்..




பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

வாத்யாரே.. 
இது உமக்கே நியாயமா!?..


கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
காணும் பொங்கல்
நல்வாழ்த்துகள்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
***

22 கருத்துகள்:

  1. எங்கள் வீடுகளில் பொங்கலுக்கு மறுநாளே சகோதரிகளை அழைத்து கணு மரியாதை செய்துவிடுவோம்.  இன்றைய கணு சகோதரிகள் செய்வதாயின் அது வேறு.  இன்று மக்கள் ஊர்முழுக்க லோலோ என்று சுற்றுவார்கள்.  எல்லா இடங்களும் நிரம்பி வழியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்றைய கணு வேறு விதம். இன்று மக்கள் ஊர்முழுக்க லோலோ என்று சுற்றுவார்கள். எல்லா இடங்களும் நிரம்பி வழியும்!.. //

      உண்மை தான்..
      குறிக்கோள் இன்றிக் கெடுகின்றது சமுதாயம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  2. கவிதை ஜோர்.  இளமை ததும்பும் கவிதை..  ஆமாம், நடுவே எதற்கு வாத்தியாரை இழுக்கிறீகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியார்.. ங்கறது நானே தான்..

      இந்த வயதில் இது மாதிரி ரசனை தேவையா என்று மனதில் தோன்றியது..

      அதற்காகத் தான் அந்தக் கேள்வியும் பதிலும்!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் அருமை. காணும் பொங்கலின் விளக்கம் குறித்து நன்றாக எழுதி உள்ளீர்கள்.

    கவிதையை படித்து மிகவும் ரசித்தேன்.எனக்கும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு வந்த மாதிரி இடையில் அந்த வாத்தியார் யாரென ஒரு சிறு சந்தேகம் வந்தது. அதற்கு தங்கள் விளக்கமான பதிலும் கண்டு கொண்டேன்.

    கவிதை ஊற்று தங்களிடமிருந்து தங்கு தடையின்றி பிறக்கிறது. ஆண்டவன் அருளை எண்ணி அதியசிக்கிறேன். இந்த இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பெயரில்லா17 ஜனவரி, 2023 08:38

    கணுப் பொங்கல் நம் வீடுகளில் நேற்று. ஊரில் இருந்தவரை இரண்டாம்நாள் கணுப்பொங்கல் கொண்டாடும் போதே கலந்த சாதத்துடன் ஊரோடு ஆற்றங்கரை சென்றுவிடுவது வழக்கம். அது ஒரு கனாக்காலம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பெயரில்லா17 ஜனவரி, 2023 08:41

    சென்னையில் காணும் பொங்கல் என்றாலே ஒரே கூட்டம்தான் அதுவும் கடற்கரைப் பகுதி சில பூங்காப்பகுதிகள் என்று....கூட்டம் கூடப், 'பாவம் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு இதுதானே ஒரு சுற்றுலா போன்று' என்று நினைத்தாலும் எங்கெங்கும் காகிதக் குப்பைகளும் துப்பப்படும் கரும்புச் சக்கைக் குப்பைகளும், கையில் கொண்டு வந்த சாப்பாட்டுக் குப்பைகளும் ஆக இருக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. பெயரில்லா17 ஜனவரி, 2023 08:44

    கவிதை அட்டகாசம் துரை அண்னா. அது சரி எதுக்கு வாத்தியாருக்கு (நீங்கதானே??!!) அந்தக் கேள்வி?!!! இளமை என்பது மனதில் அதற்கு வயதுகிடையாது துரை அண்ணா. எந்த வயதிலும் இப்படியான எழுத்துகள் எழுதலாமே...அதிலென்ன தவறு?!!!! ஜமாயுங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் சரி தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  8. பெயரில்லா17 ஜனவரி, 2023 11:29

    நன்னாளில் நல்ல பகிர்வு. அனைவருக்கும் கணுப் பண்டிகை வாழ்த்துகள்.

    படங்கள் அனைத்தும் சூப்பர். பார்க்கும்போது இதமாக இருந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. பெயரில்லா17 ஜனவரி, 2023 11:32

    மேலே உள்ளது எனது கருத்து (மாதேவி) பெயரில்லாவில் :) வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  10. மாட்டுப் பொங்கல் அன்னிக்கே கணுப்பிடி வைச்சுடறது வழக்கமாப் போச்சு. சென்னையில் இருந்தவரை அடுத்த தெரு அண்ணன் வீட்டில் இருந்து சாப்பாடு வரும். இங்கே வாங்கவோ/கொடுக்கவோ யாருமே இல்லை. கொடுத்தால் முகச்சுளிப்பை எதிர்கொள்ளணும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      காலம் இப்படியும் ஆகி விட்டது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் அருமை. சிறு வயதில் பொங்கலுக்கு மறுநாள் இப்படி நீர் இருக்கும் இடங்களுக்கு போய் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடியது, கலவை சாதங்கள் கொண்டு போய் உறவுகளுடன் மகிழ்ந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.

    மாயவரத்திலும் மாட்டு பொங்கல் அன்று பூம்புகார், அல்லது தரங்கம்பாடி போய் விடுவோம்.
    போகி பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல் என்று நாளு நாள் விழா இப்போது எல்லாம் ஒரே நாளில் முடிந்து விடுகிறது.

    கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..