செவ்வாய், டிசம்பர் 13, 2022

ஸ்ரீ காத்தாயி அம்மன் 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 27
  செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் தரிசனம் தொடர்கின்றது..

பெரிய கார்த்திகைக்கு மறுநாள் புறப்பட்ட போது மேக மூட்டமாகத் தான் இருந்தது..

புன்னை நல்லூருக்கு செல்வதாக நினைத்துக் கொண்டிருந்த என்னை என் மகன் அழைத்து வந்து நிறுத்தியது காத்தாயி அம்மன் கோயில் வாசலில்..






ஏழெட்டு ஆண்டுகளுக்கு 
முன்பு நினைத்துக் கொண்டது - இந்தக் கோயிலைத் தரிசிக்க வேண்டும் என்று..
ஆனால் அதற்கான முயற்சி என, என்னிடம் ஏதும் இல்லை..

காலமும் நேரமும் சேர்ந்து கொண்டு காத்தாயி அம்மன் கோயில் வாசலில் கொண்டு வந்து நிறுத்தி விட்டன..






இப்படியொரு அமைப்பில் இத்தனை சந்நிதிகளுடன் எங்கும் கண்டதில்லை..

தஞ்சை மாநகரில் கீழராஜ வீதியின் முனையில் காத்தாயி அம்மனுக்கு இத்தனை பரிவார மூர்த்திகளுடன் சிறியதாக கோயில் ஒன்று உள்ளது.. அங்கு ஆனை குதிரை மட்டுமே இல்லை.. 

ஆடி தை மாதங்களில் சிறப்பாக பால் குட உற்சவம் நடத்தப்படுகின்றது.. அங்கே தரிசனம் செய்திருக்கின்றேன்.. அந்தக் கோயிலுக்கு மூலஸ்தானம் இந்தக் கோயில் தான் என்பார்கள்..

ஆனாலும் இத்தனை பிரம்மாண்டத்தை நினைத்துக் கூட பார்த்ததில்லை..



பரந்த வெளியில் கோயில்களும் பெரிய திருக்குளமும்... மிகவும் சுத்தமாக கோயில் வளாகம் இருக்கின்றது..

ஆங்காங்கே வேம்பு, 
அரசு, நெல்லி,கூந்தல் பனை மரங்கள்..

தொடர் மழையால் சற்றே சேறு.. இது இயல்பானதே..




சின்னஞ்சிறு கிராமம்..
நெடுஞ்சாலையில் இருந்து சிறு கடைத் தெருவைக் கடந்தே வருகின்றோம்.. கோயிலுக்கு வழிகாட்டி அறிவிப்புகள் ஆங்காங்கே..

வடவாற்றைக் கடந்ததும் சற்று தூரத்தில் கோயில்..
கோயிலின் அருகிலேயே பூக்கடைகள்..

பரிவார மூர்த்திகளை வணங்குகின்றோம்.. 
கோயிலின் தென்புறமாக பேருருவங்களாக சப்த முனீஸ்வர தரிசனம்..

தீமைகளை பூமிக்குள் அழுத்துவதாகத் தோற்றம்..






குழந்தை முனி மட்டுமே பேருருவம்..  ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆறடி நீள பாதக்குறடுகளே முனீஸ்வரன் பெருமையைப் பறை சாற்றும்..

வலம் செய்து வணங்கி மூலஸ்தானத்திற்குள் செல்கின்றோம்..

பச்சைப் பட்டுடுத்திய  பைங்கிளியாய் கையில் குழந்தையுடன் ஸ்ரீ காத்தாயி அம்மன்.. 

முன் மண்டபத்தில் வேறு சில சுதை சிற்பங்கள்.. இவை அத்தனையும் உள் சுற்றுப் பிரகாரத்தில் எடுப்பாக விளங்குகின்றன.

கோயிலில் தரிசிக்கும் போது இத்தனை மூர்த்திகளும் நமக்காகத் தான் என்ற நம்பிக்கை நமக்குள் பிறக்கின்றது..

அதுவே அனைத்திற்கும் அடிப்படை... 

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அடுத்திருக்கும் புலவர் நத்தம் எனும் கிராமத்தில் தான் கை கொடுக்கும் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் விளங்குகின்றது ..

வாய்ப்பு கிடைக்கும் போது புலவர் நத்தம் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் தரிசனம் செய்திட வாருங்கள்..



வானில் மேக மூட்டமாக இருந்தும் ஒரு துளி கூட விழவில்லை.. 

ஆனால்,
அம்மனின் கருணை மழையில் நனைந்திருந்தோம்..

மேலும் சில படங்கள் நாளைய பதிவில்!..

காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி
கண்டபிணி ஓட்டிடுவாள் காற்றாகி

கண்காட்டி நலம் புரிவாள் ஊற்றாகி
கண்நிறைந்து வாழ்த்திடுவாள் நாற்றாகி..

ஓம் சக்தி ஓம்
***

11 கருத்துகள்:

  1. வாய்ப்பு கிடைக்கும்போது கட்டாயம் தரிசிக்க வேண்டிய இடம். அழகான படங்களுடன் சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் வந்து தரிசனம் செய்து பயன் பெறுங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்துடனும் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலைப் பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொண்டேன். புன்னை நல்லூர் அம்மன் கோவிலுக்கு வந்து ஒரு தடவை தரிசனம் செய்துள்ளோம். மற்றொரு முறை வரும் போது அருகே இருக்கும் இந்தக் கோவிலுக்கும் வந்து தரிசிக்கும் வாய்ப்பை அன்னை தர வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அருமையானதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மறுமுறை வரும் போது அருகே இருக்கும் இந்தக் கோவிலுக்கும் வந்து தரிசிக்கும் வாய்ப்பை அன்னை தர வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...//

      தங்களது பிரார்த்தனை நிறைவேறட்டும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. அருமை சார். காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி. திருக்கண்ணபுரம் சேர்ந்தாள் மகமாயி என்ற பாடல் கேட்டிருக்கிறேன். நீங்கள் போட்டிருக்கும் பாடல்புதிது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு அன்பின் நல்வரவு..

      சீர்காழி அவர்களது பாடலின் முதல் வரியை வைத்துக் கொண்டு நானொரு வழி நடைப் பாட்டு எழுதியுள்ளேன்..

      நாளைய பதிவில் அது வெளியாகும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்த ஊரைப் பற்றியோ கோயில் பற்றியோ கேட்டதில்லை. சீர்காழியின் பாடலைக் கேட்டிருக்கேன். இன்றைய பதிவில் உங்கள் அருமையான பாமாலையையும் ரசித்துப் படித்தேன்.. இத்தனை பெரிய கோயிலாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. அருமையான தரிசனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. புன்னை நல்லூர் பக்கமா? பார்க்க வேண்டிய கோயில்தான்.
    வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க வேண்டும்.
    நீங்கள் எழுதிய பாடல் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..