சனி, நவம்பர் 26, 2022

நாகத்தி ஐயனார்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 10
  சனிக்கிழமை

ஏதோ ஒன்றைத் தேடும் போது - வேறொரு தளத்தில் இக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.. 

இந்தக் கட்டுரையை ஆக்கியவர் தொல்லியல் அறிஞர் திரு குடவாயில் பாலசுப்ரமணியன் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்..

அதனை, அப்படியே இன்றைய பதிவில்
நெஞ்சார்ந்த நன்றியுடன்
வழங்கியுள்ளேன்..
(படங்கள்: Fb அகில்)

நாகத்தி 
ஸ்ரீ அழகிய வேம்புடைய ஐயனார்..


சோழ வளநாட்டின் தலைநகராம் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன் பேட்டையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைக் குறையாக (ஒரு தீவாக) உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். 

காவிரியின் கிளை நதியான வெட்டாறு இவ்வூருக்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் இவ்வூருக்குக் கிழக்கில் இணைந்து ஒரே ஆறாகப் பயணிப்பதால் இவ்வூர், காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே அமைந்த திருவரங்கம், திருவானைக்கா போன்று ஆற்றிடைக் குறையாகவே விளங்குகின்றது,

வளைந்து நெளிந்து செல்லும் வெட்டாறு பாம்புடல் போன்றும், நாகத்தி என்னும் ஊர் பாம்பின் படமெடுத்த தலை போன்றும் விளங்குவதால் இவ்வூருக்கு நாகத் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இது காலப்போக்கில் நாகத்தி என மருவிவிட்டதாகவும் கூறுவர். 

இயற்கை எழில் சூழ்ந்த இவ்வூரின் கண், ஆழி சூழ்ந்த இவ்வுலகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிக அரிய பல்லவர் கால ஐயனார் திருமேனி ஒன்று விளங்குவதும், மிகப்பழைய சிவாலயம் ஒன்று காலவெள்ளத்தில் கரைந்து அதன் எச்சங்கள் மட்டுமே இன்று ஐயனார் ஆலயத்தில் காட்சி நல்குவதும் சிறப்புக்கு
உரியவையாகும். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வூரின் வரலாற்றுச் சிறப்புகளையும், தனித்தன்மை பெற்ற பூரணையுடன் திகழும் ஐயனார் ஆலயம் இதுவே.

நாகத்தி ஐயனார் ஆலயம் பல்லவப் பேரரசர்கள் காலத்திலேயே (இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே) இங்கு ஐயனார் திருவுருவம் அமைக்கப்பெற்றதால் இங்கு ஒரு தேவி மட்டுமே காணப் பெறுகிறார். 


பீடம் ஒன்றின் மேல் ஐயனார் அமர்ந்திருக்க, அருகே ஒரு தேவி மட்டும் நிற்கும் கோலத்தோடு, ஏறத்தாழ ஆறு அடி உயரமாக விக்ரகம் வடிக்கப் பெற்றுள்ளது


வலது காலை பீடத்தின் மேல் குத்திட்ட நிலையில் அமர்த்தி, இடது காலை தொங்கவிட்டபடி ஐயன் அமர்ந்துள்ளார். 

வலக் கரத்தினை குத்திட்ட முழங்கால் மேல் அமர்த்தி பக்கவாட்டில் நீட்டியுள்ளார்.


இடக்கரமோ பீடத்தின் மேல் ஊன்றப் பெற்றுள்ளது. கிரீட மகுடத்துடன் பரந்த ஜடாபாரம் காணப் பெறுகின்றது. 

வலக் காதில் குழையும், இடக்காதில் பத்ர குண்டலமும் விளங்க, மார்பை கழுத்தணி அலங்கரிக்கிறது. தடித்துத் திரண்ட புரிநூல் தோளிலிருந்து வயிறுவரை காணப் பெறுகிறது.


தொடை வரை இடுப்பாடை விளங்குகிறது. பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய் ஒன்று நின்றிருக்கிறது.

தேவியோ நின்ற கோலத்தில் வலக்கரத்தில் தாமரை ஒன்றினை ஏந்தியவாறு பேரழகோடு காணப் பெறுகின்றார். 

இதனை ஒத்த ஒரு திருவடிவம் வேறு எங்கும் காணமுடியாது. இங்கு நிற்கும் தேவி தாமரையை ஏந்தியுள்ளதால் இவள் பூரணாதேவி என அழைக்கப் பெறுகிறாள்.

எழுத்து:
குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்..

வெகு விரைவில் இத் திருக்கோயிலில் தரிசனம் செய்த பின் மீண்டும் எழுதுகின்றேன்..

அழகிய வேம்புடைய ஐயனார் போற்றி..
***

18 கருத்துகள்:

  1. கேஜிஜியின் கல்யாணமாகாதேவிக்கும், எங்கள் குலதெய்வம் இருக்கும் ஊர் (அவரும் அய்யனார்தான்) , மழுவச்சேரிக்கும் மிக அருகே உள்ள ஊர் என்று தெரிகிறது.  சாஸ்தா கம்பீரமாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அழகிய வேம்புடைய ஐயனார் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    சனிக்கிழமை அய்யனார் தரிசனம் நன்று.
    பாலசுப்பிரமணியம் அவர்கள் கட்டுரைகள் நிறைய படித்து இருக்கிறேன். நன்றாக எழுதுவார். கடைசி படம் மலர்ந்த முகம் அழகு. அய்யனாரின் மலர்ந்த முகம் நம்மை மகிழ்விக்கும்.

    விரைவில் தரிசனம் கிடைக்கட்டும், உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஐயனாரின் மலர்ந்த முகம் நம்மை மகிழ்விக்கும்..//

      உண்மை தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. வித்தியாசமான கோலத்தில் சிலையமைப்பு இப்படி கண்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வித்தியாசமான கோலத்தில் சிலையமைப்பு இப்படி கண்டதில்லை. //

      நானும் இப்போது தான் இப்படி காண்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. வித்தியாசமான ஐயனார். பெயரிலும் புதுமையாக உள்ளது. மிக அழகான சிற்பம். செதுக்கிய சிற்பி மஹா ரசிகன். விரைவில் உங்களுக்குத் தரிசனம் கிட்டட்டும். பின்னர் மேலதிகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஐயனார் வழிபாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது புரிகிறது. ஆனால் யாரும் ஒத்துக்க மாட்டாங்க. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஐயனார் வழிபாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது புரிகிறது. ஆனால் யாரும் ஒத்துக்க மாட்டாங்க. :( //

      அது தான் தமிழ்நாடு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. இன்னிக்கு ஒரு தரம் கருத்தைப் பதிந்திருக்கேன். இருக்கா/இல்லையானு பின்னர் வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள்.. வாருங்கள்..

      மகிழ்ச்சி..
      நன்றியக்கா

      நீக்கு
  6. ரொம்பவும் வித்தியாசமான தோற்றம். அதுவும் சாவகாசமாக அமர்ந்து, ம்ம் சரி அப்புறம் என்ன விஷயம் சொல்லு என்று சொல்வது போல ஒரு தோற்றம். இயல்பான தோற்றம். படங்கள் அழகு. நல்ல அழகான வர்ணனையான எழுத்து. நீங்களும் சென்று வந்து எழுதுங்கள் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சாவகாசமாக அமர்ந்து, ம்ம் சரி அப்புறம் என்ன விஷயம் சொல்லு என்று சொல்வது போல ஒரு தோற்றம்...//

      ஆமாம்.. அது தான் தோழமை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காணக் கிடைக்காத ஐயனார் சிலை கண்டு தரிசித்து மகிழ்ந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஐயனார் படங்கள் அனைத்தும் தரிசித்து கொண்டேன். இக்கோவிலைப் பற்றிய நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். அழகாக பதிவாக்கித் தந்த திரு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    தங்களுக்கும் விரைவில் இக் கோவிலின் தரிசனமும் கிடைக்கட்டும். உங்கள் மூலம் எங்களுக்கும் கோவிலைப் பற்றி நிறைய விபரங்களும், சுவாமியின் தரிசனமும் கிடைக்கும் எனப் பிரியப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தங்களுக்கும் விரைவில் இக் கோவிலின் தரிசனமும் கிடைக்கட்டும்.//

      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..