நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 17
வியாழக்கிழமை
சதயத் திருநட்சத்திரம்
மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழரின் ஆயிரத்து முப்பத்தேழாவது
பிறந்த நாள்..
சைவமும் தமிழும் செய்த தவத்தின்
பயனாகத் தோன்றிய திருமகன்..
சுந்தர சோழர் எனப்பட்ட (947) இரண்டாம் பராந்தகருக்கும் வானவன் மாதேவிக்கும் மூன்றாவதாகத் தோன்றிய தவக் கொழுந்து..
தமிழகம் உய்ய வந்த சிவக்கொழுந்து..
இயற் பெயர் அருள்மொழி வர்மன்..
பிறக்கும் போதே சங்கு சக்கர ரேகைகளுடன் பிறந்தவர்..
தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரத தேசத்தில் எங்குமே கேட்டிராத புதுமையாய் தனது சிற்றப்பன் உத்தம சோழரை மன்னனாக்கி நாட்டை அவரிடம் ஒப்படைத்து அழகு பார்த்த பெருமகன்.. உத்தம சோழர் எனப்பட்ட மதுராந்தகரின் காலத்துக்குப் பிறகே (985) அரியணை ஏறினார்..
இவரது ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரளத்துடன் நடந்தது..
இவரது பட்டப் பெயர்களாகி வருவன : இராசகேசரி, மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன், சோழ நாராயணன், கேரளாந்தகன், சிங்களாந்தகன், பாண்டிய குலசனி,
ஜெயங்கொண்டான்..
பிற்காலச் சோழர்களின் முன்னோடி -
விஜயாலயர்..
இவர் இளவரசராக பட்டமேற்று (848) பல்லவப் பேரரசிற்காக திருப்புறம்பியத்தில் (880) போரிட்டு அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களைத் தோற்கடித்து முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சையைத் தாக்கிக் கைப்பற்றினார்..
இந்த வெற்றியினால் பல்லவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த சோழர்கள் கப்பம் நீங்கினர்..
இதைத் தொடர்ந்து தஞ்சையின் எட்டுத் திசைகளிலும் காளி கோயில்களை நிர்மாணித்து தஞ்சையைத் தலை நகராக அறிவித்தார்.. அதுவரையில் பழையாறை அரண்மனையில் இருந்த சோழ வம்சம் தஞ்சையில் வேரூன்றியது..
இப்படியாக விஜயாலய சோழர் நிர்மாணித்த அரசு ராஜராஜ சோழரின் காலத்தில் மகோன்னத நிலையை எய்தியது.
ராஜராஜ சோழர் தம்மைச் சிறு வயதில் வளர்த்தெடுத்த பாட்டி செம்பியன் மாதேவியாரிடமும் சகோதரி குந்தவை நாச்சியாரிடமும் பேரன்பு கொண்டு திகழ்ந்தார்..
ராஜராஜ சோழரின் பட்டத்தரசியார் லோகமாதேவி..
ராஜேந்திரன் குந்தவை என - மகனும் மகளும்..
ராஜராஜ சோழரின் ஆட்சிக் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் பொற்காலமாகும்.
ராஜராஜ சோழரின் மெய்க்கீர்த்தி:
" ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கை பாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீ்கோவி ராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
உலகளந்த கோல் எனப்பட்ட அளவு கோலைக் கொண்டு விளைநிலங்கள் வகைப்படுத்தப்பட்டன..
மிகச்சிறந்த ஆளுமையுடன் கப்பற்படை நடத்தப்பட்டு முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரமும் புலிக் கொடியின் கீழ்க் கொண்டு வரப்பட்டன..
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வைக்கப்பட்டிருந்த மூவர் தமிழை கறையான்களின் வாயில் இருந்து மீட்டெடுத்து - திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு ஏழு திருமுறைகளாகத் தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்தார்..
ஸ்ரீ ராஜராஜ சோழரின் இருபத்து ஆறாம் ஆண்டில் தலைநகர் தஞ்சையில் மிகப் பெரிய சிவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.
ராஜராஜ சோழர் இப் பெருங்கோயிலுக்கு
ஸ்ரீ ராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டார்..
இன்று - பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
தஞ்சை பெரிய கோயிலில்
மாமன்னர் ராஜராஜ சோழரின் ஆயிரத்து முப்பத்தேழாவது சதய விழா 27/10 அன்று பந்தற்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது..
இன்று மாலை ஸ்ரீப்ரஹந்நாயகியுடன் பெருவுடையார் ஸ்வாமி ரிஷப வாகனத்தில் திருவீதி எழுந்தருளும் வேளையில் - ஸ்வாமிக்கு நேர் எதிராக கை கூப்பிய வண்ணம் மாமன்னரும் திருமேனியும் சப்பரத்தில் உடன் எழுந்தருள்வார்..
ராஜ வீதிகளில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் மாமன்னருக்கு மாலை மரியாதைகள் நடைபெறும்..
(சில குறிப்புகள்: நன்றி - விக்கி)
நாமும் இருந்த இடத்தில் இருந்தே ராஜராஜ சோழருக்கு மானசீகமாக மரியாதை செலுத்துவோம்..
மாமன்னர் புகழ் வாழ்க.. வாழ்க!..
***
பெருமையுடன், மகிழ்வுடன் அவர் பெருமைகளைப் படித்து இன்புற்றேன். நம் மண்ணின் பெருமை.
பதிலளிநீக்குமாமன்னரின் திருவடிகள் பதிந்த இம்மண்ணிற்கு நெஞ்சார்ந்த வணக்கம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
வாழ்க மாமன்னர்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குவரலாற்று தகவல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குகாணொளி கேட்போர்க்கு உணர்ச்சிகள் பொங்கும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஉரிய நாளில் அருமையான பதிவு.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா...
நீக்குராஜராஜ சோழன் கதையைப் படிக்கும்போது எனக்குத் தோன்றுவது, இவர்தான் தலைமைக்கு வரவேண்டும் என்பது ஒவ்வொருவர் தலையிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு உழைப்பு தேவையில்லை. எத்தனையோபேர் இருக்க அருள்மொழிக்கு தலைமைப் பதவி வந்தது. அதையும் சித்தப்பனிடம் கொடுத்துவிட்டு பதினைந்து வருடங்கள் பொறுமையாகக் காத்திருத்தல் என்பது பெரிய குணம். சோழ மன்னர்களிலேயே ராஜராஜன் புகழ்பெற்றது அதனால்தான், ராஜேந்திர சோழன் இன்னும் அதிக வெற்றிகளை ஈன்றியிருந்தபோதிலும்
பதிலளிநீக்கு// சித்தப்பனிடம் கொடுத்துவிட்டு பதினைந்து வருடங்கள் பொறுமையாகக் காத்திருத்தல் என்பது பெரிய குணம். //
நீக்குஉண்மை.. ராஜராஜன் புகழ்பெற்றது அதனால்தான்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதிவு.
பதிலளிநீக்குராஜராஜ சோழன் வரலாறு பகிர்வு சிறப்பு.
படங்கள் அருமை.
காணொளி அருமை.
இன்று என் மகனுக்கும் பிறந்த நாள்.
தங்கள் மகனுக்கு அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமையாக உள்ளது. மன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் வரலாறு பகிர்வு படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது. எத்தனை முறை படித்தாலும் புதுமையாகவே உணர்வது மன்னர்களின் வரலாறு. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. நம் நெஞ்சில் நீங்கா புகழுடன் அமர்ந்திருக்கும் மன்னரை இன்றும், என்றும் சிரம் தாழ்த்தி வணங்குவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// நம் நெஞ்சில் நீங்கா புகழுடன் அமர்ந்திருக்கும் மன்னரை இன்றும், என்றும் சிரம் தாழ்த்தி வணங்குவோம்.. //
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..