வெள்ளி, அக்டோபர் 07, 2022

நலியாத நலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று புரட்டாசி 20
வெள்ளிக்கிழமை..

அருணகிரிப் பெருமான் 
அருளிச் செய்த 
திருத்தணிகைத்
திருப்புகழ்..

இன்றைய சூழ்நிலையில்
ஒவ்வொருவருக்கும் 
தேவை நோய் நொடியில்லாத 
நல்வாழ்வு..

நமது வலைத் தளத்திற்கு வருகை தந்து ஊக்கம் அளிக்கும் அன்பு நெஞ்சங்கள் பலவும் ஏதோ ஒரு வகையில் உளக் குறையினாலும் உடல் நோவினாலும் வருத்தமுற்றிருக்கின்றனர்.. 

அன்புக்குரிய கீதாககா அவர்கள் நலக்குறைவினால் பதிவுகளுக்கு வருவதில்லை.. வல்லியம்மா, கமலா ஹரிஹரன் ஆகியோரும் அப்படியே.

அவர்களது நலத்திற்காகப் பிரார்த்தனை 
செய்து கொள்ளும் இவ்வேளையில்
உற்றாரும் மற்றோரும் பின்னும் ஊரும் உலகும் பிழைகளினின்று நீங்கி நலங்கொண்டு வாழ்தற்கு எம்பெருமான் முருகவேள் இன்னருள் நல்குவானாக!..

அதற்கான 
அற்புதத் திருப்புகழ் 
இது..


தனதன தான தனதன தான
தனதன தான ... தனதான

இருமலு ரோக முயலகன் வாதம் 
எரிகுண நாசி ... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை 
எழுகள மாலை ... இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை 
பெருவலி வேறு ... முளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத 
படிஉன தாள்கள் ... அருள்வாயே..

வருமொரு கோடி அசுரர்ப தாதி 
மடியஅ நேக ... இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட 
வடிசுடர் வேலை ... விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி 
தருதிரு மாதின் ... மணவாளா

சலமிடை பூவின் நடுவினில் வீறு 
தணிமலை மேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)

இருமல், முயலகன் எனும் வலிப்பு, வாத நோய்கள்,

எரிச்சலுடைய மூக்கின் நோய், விஷ நோய்கள், நீரிழிவு,

நீங்காத தலைவலி, ரத்த சோகை,

கழுத்தைச் சுற்றி மாலை போல உண்டாகும் புண் இவற்றுடன்,

மகோதர நோய், நுரையீரலில் சளி, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி,

மற்றும் 
கண், காது, வாய், தொண்டை, கழுத்து, தோள், முதுகு, இடுப்பு, கை கால் மூட்டுகள், தோல், சிறுநீரகம், ஜனனேந்திரியங்களில் - இவற்றில் அதிக வலியுடன் கூடிய பிற நோய்கள் எவையும் -

பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து எனைப் பீடித்து வருத்தாதபடிக்கு,

உன்னுடைய திருவடிகளைத்
தந்தருள்வாய் முருகா!..

உன்னை எதிர்த்து கோடிக் கணக்கில் திரண்டு வந்த 
அசுரர்களின் படை

மடிவதற்காக (வும் நீ போரிடும் அழகைக் காண்பதற்காகவும்) வெற்றிச் சங்கொலியுடன் வீர முழக்கமிட்டுக்  கொண்டு வந்த - கால பைரவர் போர்க் களத்தில் ஆனந்த நடனம் ஆடும்படிக்கு,

ஒளிமிகுந்த வேலினை அசுரர்கள் மீது எறிந்தவனே,

மேக வாகனனாகிய இந்திரனால் கற்பக விருட்சத்தின் நிழலில் இருந்து அன்புடன் வளர்க்கப்பட்ட அழகு நங்கை தேவயானையின் மணவாளனே,

கடலால் சூழப்பட்டிருக்கும் 
பூவுலகின் மத்தியில் சிறப்புடன் விளங்கும் திருத்தணிகை மலையின் மீது வீற்றிருக்கும் பெருமாளே!..


கந்தா சரணம்
கடம்பா சரணம்
கார்த்திகை மைந்தா
சரணம்.. சரணம்!..
***

9 கருத்துகள்:

  1. கீதா அக்கா, கமலா அக்கா, வல்லிம்மா ஆகியோர் பழையபடி உற்சாகமாக வந்து பதிவுகளில் பங்கேற்கும் வண்ணம் உடல்நலம் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழ் பாடலை பாடி எல்லோருக்கும் வேண்டிக் கொண்டேன்.
    எனக்கும் கால்வலி உள்ளது. மாலையில் செய்யும் கூட்டு வழிப்பாட்டில் கடலூரிலிருந்து ஒரு சகோதரி இந்த திருப்புகழ் பாடலைதான் அடிக்கடி பாடுவார்.
    பாடலும் விளக்கமும் பகிர்வு அருமை.
    காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.
    அருணகிரிநாதரின் திருப்புகழ், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. திருத்தணிகையில் வள்ளி, தெய்வானை சமேதராய் வீற்றிருக்கும் முருப்பெருமானை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன்.🙏.

    காணொளி தொகுப்பு நன்றாக உள்ளது. மீண்டும் ஒருமுறை பாடலுடன் பார்த்து கேட்கிறேன்.

    பதிவுலக சகோதரிகளுக்காக நீங்கள் வேண்டிக் கொண்டதற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் போல் ஏதோ உடல்நல குறைவுகள் இருந்தாலும் அனைவரின் பதிவுகளுக்கும் நேரம் தாழ்த்தியாவது வந்து கொண்டேயிருக்கிறேன். நடுவில் சரஸ்வதி பூஜை வீட்டு வேலைகளில் தொடர்ச்சியாக இரு தினங்கள் வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

    தற்சமயம், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரி கீதா சாம்பசிவம், வல்லி சகோதரி, கால்வலியால் சிரமப்படும் சகோதரி கோமதி அரசு அனைவரும் விரைவில் உடல் நலம் பெற்று உபாதைகள் ஏதுமில்லாது சிறப்பாக வாழ உங்களுடன் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
    அதுபோல் சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் இரண்டு நாட்களாக ஜுரத்தில் அவதிப்பட்டு சிரமபடுகிறார். அவரும் பரிபூரணமாக உடல் உபாதைகள் ஏதுமின்றி நலமுடன் இருக்கவும் முருகனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கும், பதிவின்.சிறப்புக்கும மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் நலம் பெற இறைவன் துணை புரியட்டும்.

    காணொளி பாடல் கேட்டேன் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. அக்காக்கள் இருவரும், அம்மாவும் உற்சாகத்தோடு மீண்டும் வர வேண்டும்,.

    என்னாலும் வர இயலவில்லை மீண்டும் இன்றுதான் உள்ளேன் ஐயா என்று சொல்லியிருக்கிறேன், துரை அண்ணா. வேலைப்பளு. மனமும் சோர்வுதான். எதிலும் உற்சாகம் இல்லாமல் செல்கிறது.

    எனக்கு நேரமின்மையால் துளசியின் கருத்துகளையும் பதிய இயலவில்லை இங்கும் சரி எங்குமே....நானும் வழக்கம் போல் வரத் தொடங்கியதும் அவர் அனுப்பும் கருத்துகளையும் பதிகிறேன்...துரை அண்ணா.

    எல்லோரும் நலம் பெற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்ட உங்கள் நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி. என் மனமார்ந்த நல்லாசிகள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும். வயிற்றின் முக்கியமான பிரச்னையைக் கண்டறிந்து மருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பிச்சிருக்கேன். பிரச்னை தொடராமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  7. இந்தத் திருப்புகழைத்தான் மாரியம்மன் தாலாட்டோடு தினமும் நினைவு கூர்வேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பதிவுலக சகோதர ,சகோதரிகள் அனைவரும் உடல் நலம் தேறி நலமுடன் வாழ முருகன் அருளை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..