நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
(வரலாற்றுத் தொகுப்பு)
நன்றி : விக்கி
*
செக்கிழுத்த செம்மல் ஸ்ரீ வ.உ.சி. அவர்களது பிறந்த தினம் நேற்று (5 செப்டம்பர் 1872)..
குற்ற உணர்வு மேலிடுகின்றது என்னுள், இந்த நாட்டுக்காக - மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போன தியாகச் செம்மல் ஸ்ரீ வ.உ. சி. அவர்களை நினைவு கூரத் தவறியமைக்கு..
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஸ்ரீ வ.உ. சி. அவர்களது தியாக வரலாறு "கப்பலோட்டிய தமிழன் " என்று திரைக் கதையாக சொல்லப்பட்டபோது அப்போதைய மூதறிஞர் ஒருவர் இப்படிச் சொன்னாராம்
- " அவர் எங்கே கப்பலை ஓட்டினார்!?.." - என்று..
வ.உ.சி. அவர்கள் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைத் தலைவராகக் கொண்டு,
1906 அக்டோபர் 16 ல் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்..
அப்போது ஷாலேன் ஸ்டீமர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கப்பலை வாடகைக்கு எடுத்தே - தூத்துக்குடி கொழும்பு - துறை முகங்களுக்கு இடையே இயக்கினர்..
இதை விரும்பாத வெள்ளையர் வழக்கம் போல - ஷாலேன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தைக் கூப்பிட்டு மிரட்டினர்.. மிரண்டு போன ஷாலேன் ஸ்டீமர்ஸ் நிறுவனம் - சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு கப்பலை வாடகைக்கு விடாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது.. இதனால் இந்திய வணிகர்கள் திகைத்துப் போயினர்...
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சொந்தமாக கப்பல் வாங்குவதே - என்று தீர்மானித்த சங்கத்தினர் சொந்தத்தில் கப்பல்களை வாங்குவதற்கு முடிவு செய்தனர்..
தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனாலும் அது போதுமானதாக இல்லை.
அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பதற்காக வ.உ.சி. அவர்கள் - பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்று தனது மதியூகத்தினால் அங்கிருந்த பெருவணிகர்களைக் கவர்ந்து பெரும் முதலீட்டைத் திரட்டி - எஸ்.எஸ். காலியோ என்ற கப்பலுடன் தூத்துக்குடிக்குத் திரும்பினார்..
மேலும் ஒன்றாக பிரான்ஸிடம் இருந்து எஸ்.எஸ். லாவோ என்ற கப்பலும் வாங்கப்பட்டது..
சுதேசி நாவாய்ச் சங்கத்தின் வளர்ச்சியைக் கண்டு மனம் புழுங்கிய வெள்ளையர்கள் சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு எதிராக பற்பல இடையூறு களைச் செய்தனர்..
துறைமுகத்தின் - சுங்க அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் - என பலராலும் பல விதமான தொல்லைகளைக் கொடுத்தனர்...
ஒன்றும் பலிக்காத நிலையில்
ஆங்கிலேய நிர்வாகம் வ.உ.சி. அவர்களுக்குக் கையூட்டு கொடுக்க முயற்சித்தனர்..
சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால்
ரூ.1,00,000 கொடுப்பதாக ஆசை காட்டி - வ.உ.சி. அவர்களிடம் தோற்றுப் போயினர்..
இறுதியாக அவர்கள் கையிலெடுத்ததே ராஜத்துரோகக் குற்றச்சாட்டு..
வங்கத்தின் விபின் சந்திர பாலர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதைக் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்த வ.உ.சி. அவர்களையும் திரு. சுப்ரமணிய சிவா அவர்களையும் நெல்லையில் வைத்து 1908 மார்ச் 12 அன்று கைது செய்தது அன்றைய நிர்வாகம்..
இதையடுத்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் கலவரம் ஏற்பட்டது.. நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள் - இவர்களோடு குதிரை வண்டிக்காரர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்..
அப்போது விளைந்த கலவரத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்..
1908 மார்ச் 14 முதல் மார்ச் 19 வரை நடைபெற்ற இதுவே இந்தியாவில் நடந்த முதல் பொது வேலை நிறுத்தம்..
காவல் துறையினர் வ.உ.சி. அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க -
அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி கொள்ளும் வகையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதற்காக இருபது ஆண்டுகளும்
சுப்ரமண்ய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இருபது ஆண்டுகளும் -
- ஆக நாற்பது ஆண்டுகள் தீவாந்திரத்
தண்டனை விதிக்கப்பட்டது..
இதைக் கேட்டு
முழு இந்தியாவும் அதிர்ந்து நின்றது..
இதற்குக் காரணமாக இருந்த கலெக்டர் ஆஷ் என்பவனை 1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் வாஞ்சிநாதன்..
மேல் முறையீட்டில் வ.உ.சி. அவர்களது தண்டனைக் காலம் குறைக்கப் பெற்றது.. ஆனாலும் சிறைக்குள கருங்கல் உடைத்ததும் செக்கினை இழுத்ததும் வரலாற்றில் அழியாத பக்கங்கள் ஆகி விட்டன..
மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவுங் காண்கிலையோ?..
எண்ணற்ற நல்லோர்
இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போல்
கலங்குவதுங் காண்கிலையோ?..
- என்ற மகாகவியின் பாடல் நம் உயிரை உருக்குகின்றது..
வ.உ.சி. அவர்கள் சிறையில் இருந்த போது சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்த இயலாத மற்றவர்கள் வெள்ளையனிடமே விற்று விட்டனர்.
வ.உ.சி. அவர்கள் 1912 டிசம்பர் 24 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்..
நாட்டுக்காக உழைத்து அதனால் சிறைக்குச் சென்று செக்கிழுத்து துன்பப்பட்ட வ.உ.சி. அவர்களது வாழ்க்கை விடுதலைக்குப் பின் சோகமாகவே இருந்தது..
விடுதலைக்குப் பின்னர், வ.உ.சி. அவர்கள் -
சென்னை, கோவை, கோவில்பட்டி, தூத்துக்குடி இங்கெல்லாம் வசித்திருக்கின்றார்..
பிறப்பிலேயே செல்வந்தரான அவர் இந்நாட்டுக்காக சிறைக்குச் சென்று அனைத்தையும் இழந்த நிலையில் மண்ணெண்ணெய் வியாபாரமும் செய்திருக்கின்றார்..
எங்கே எனில் -
சிங்காரச் சென்னையில்!..
இம்மண்ணின் தவப் புதல்வனாக வாழ்ந்த
ஸ்ரீ வ.உ.சி. அவர்கள் 1939 நவம்பர் 18 அன்று மறைந்தார்..
இன்றைக்கு அரசியல்வாதியின் நட்பு வளையத்துக்குள் இருக்கும் அரிதாரப் பூச்சிகளிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக இணையத்தில் செய்திகள்..
அரசு அலுவலர் சிலரது வீடுகளில் இருந்தும் இப்படியே!..
தேர்தலில் தோற்றுப் போன ஒருவர் கூட அடுத்த தேர்தலில் எழுந்து நிற்கின்றார்.. லட்சங்களில் உருள்கின்றார்.. புரள்கின்றார்..
ஆனால்,
வ.உ.சி அவர்களை எழுந்து உட்காருவதற்கும் விடவில்லை விதியின் கரங்கள்..
இப்படியான, தியாக தீபங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகின்றோம்?..
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!..
***
செப்டம்பர் 5
ஆசிரியர்கள் தினம்..
எனது ஞானாசிரியர்கள்
அனைவரையும் வணங்கிக்
கொள்கிறேன்..
***
என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியாது. அவர்களையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே போதும் என்கிற காலநிலை இப்போது.. ம்...ஹூம்...
பதிலளிநீக்கு// என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? ஒன்றும் முடியாது. அவர்களையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே போதும்.. //
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் நன்றி ஸ்ரீராம்....
இந்த வருஷம் தமிழக அரசும் கூட இந்த நினைவு கூர்ந்த நிகழ்வில் ஈடுபட்டது கொஞ்சம் மனதில் ஆறுதலைத் தருகிறது. இப்படி எத்தனை எத்தனை பெரியோர்கள் நம் தமிழகத்தில்! அனைவருக்கும் நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது தவிர்த்து வேறே ஏதும் செய்ய முடியாது.
பதிலளிநீக்கு//அனைவருக்கும் நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது தவிர்த்து வேறே ஏதும் செய்ய முடியாது...//
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் நன்றியக்கா....
தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் நிழலை பூஜிப்பவர்கள்.
பதிலளிநீக்குவ.உ.சி. அவர்களின் பெயரன் மறைவுக்கு பத்து நபர்கள் வந்து இருந்தார்கலாம்.
சசிகலா விடுதலையை வரவேற்க பத்தாயிரம் நபர்கள்.
// தமிழக மக்கள் நன்றி கெட்டவர்கள் //
நீக்குஉண்மை.. உண்மை..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜி..
வரலாறு திருத்தி எழுதப்படும் இக்காலத்தில் தியாகி வ உ சி பற்றிய விவரங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கும். கட்டுரை சிறப்பு.
பதிலளிநீக்குJayakumar
தியாகி வ உ சி பற்றிய விவரங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கும்.
நீக்குபாடமாக இருக்க வேண்டும்..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..
இவரைப் போல் சிறை துன்பம் பட்டவர்கள் யாருமில்லை...
பதிலளிநீக்குஉண்மை..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தனபாலன்..
பதிவு படித்து மனம் நெகிழ்ந்தது... இத்தகைய கட்டுரைகள் நம் பிள்ளைகளின் சரித்திர புத்தகத்தில் சேர்த்திட வேண்டும். கண்ணீரும், செந்நீரும் சிந்தி இத்தகைய மேன் மக்கள் பெற்ற சுதந்திரத்தை, நம் இளைய சமூகம் அறிந்து கொள்ளுதல் அவசியம். நல்ல பதிவிற்கு நன்றி ஐயா !
பதிலளிநீக்கு// கண்ணீரும், செந்நீரும் சிந்தி இத்தகைய மேன் மக்கள் பெற்ற சுதந்திரத்தை, நம் இளைய சமூகம் அறிந்து கொள்ளுதல் அவசியம். //
நீக்குஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..
பாடலும் பதிவும் மனதை கனக்க வைத்து விட்டது.கண்களில் நீர் திரள்கிறது.
பதிலளிநீக்குவ.உ.சி அவர்களின் எள்ளு பேரனுக்கு 7ம் தேதி திருமணம்.
அவர் குடும்பம் மிகவும் கஷ்டபட்டது. அப்போது யாரும் உதவி செய்யவில்லை, இப்போது அவர் பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டாட படுகிறது .
அவர் தன்னலம், குடும்ப நலம் பாராமல் நாட்டுக்கு உழைத்தார்.
அவர் புகழ் என்றும் சரித்திரத்தில், மக்கள் மனதில் மறையாமல் இருக்க வேண்டும்.
அவருக்கு வணக்கங்கள்.
//அவர் தன்னலம், பாராமல் நாட்டுக்கு உழைத்தார்.
நீக்குஅவர் புகழ் என்றும் சரித்திரத்தில், மக்கள் மனதில் மறையாமல் இருக்க வேண்டும்... //
அதுதான் நமது விருப்பமும்...
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..
பதிவு அருமை.
பதிலளிநீக்குசுதந்திர போராட்ட வீரர் திரு. வ. உ. சி அவர்களின் சரிதம் எத்தனை முறை படித்தாலும் மனதை கலங்க வைக்கிறது. சுதந்திரத்தை பெற அவர்கள் செய்த தியாகங்கள்தாம் எத்தனை.? கல்லான மனதையும் இளக வைக்கும் காவியங்கள். இத்தனையும், ஏனோ தானோவென்று படித்து விட்டு நம் நாடு சுதந்திர நாடு எனறு சொல்ல மட்டுமே நமக்குத் தெரியும். கருத்துரைகளில் காண்பது போல் இளைய தலைமுறைகளுக்கு இது ஒரு பாட நூலாக அமைந்தால் நல்லது. அந்த நல்லவருக்கு என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னவோ தெரியவில்லை. இரண்டு மூன்று முறை கருத்தை பதிவு செய்ய தடங்கல் வருகிறது. இம்முறையும் ஒழுங்காக வர வேண்டும்.
அப்பாடா... ஒரு மட்டும் வந்து விட்டது. மகிழ்ச்சி.
நீக்கு// திரு. வ. உ. சி அவர்களின் சரிதம் எத்தனை முறை படித்தாலும் மனதை கலங்க வைக்கிறது..//
நீக்குநேற்று இந்தக் காணொளியைக் கண்டபோது மனம் கலங்கி அழுது விட்டேன்
கப்பலோட்டிய தமிழன் திரைச்சித்திரம் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தால்.. ?
மக்கள் சுத்தமாகவே மறந்திருப்பார்கள்..
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ..
காலமும் நினைத்துப் போற்றப்பட வேண்டியவர். மனதை நெகிழ்ச்சியடையச் செய்த பதிவு. இனி வரும் தலைமுறையும் அறிந்திருக்க வேண்டிய தலைவர். அருமையான பதிவு. தமிழ்நாட்டின் பெருமை!
பதிலளிநீக்குதுளசிதரன்
கப்பலோட்டிய தமிழர் வாழ்ந்த பூமி இன்று கப்பலோட்ட யாருமில்லாமல் தத்தளிக்கிறது!! தமிழ்நாடு. வாசித்ததும் கண்ணில் நீர். மாபெரும் வீரர் தலைவர் வாழ்ந்த பூமியா இது என்று வெட்கித்தலை குனிய வைக்கும் அளவு போயிருக்கிறது. சாலையில் வீழ்ந்து கிடக்கும் குடியன். பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள். நாடு எக்கேடுக் கெட்டுப்போனால் என்ன என் நாற்காலி என் வீடு என் குடும்பம் முக்கியம்....நெஞ்சு பொறுக்குதிலையே...இப்போதைய நிலையை நினைத்தால்...
பதிலளிநீக்குகீதா
நெஞ்சு பொறுக்குதில்லையே.. இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்!..
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
தியாகச் செம்மல்களை வணங்கு வோம்.
பதிலளிநீக்கு