நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மூன்றாவது
வெள்ளிக்கிழமை
சுவாதி நட்சத்திரம்..
தேவாரம் பாடியருளிய மூவருள் ஒருவரான ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய நாள்..
அவரது வரலாற்றை விவரித்துக் கூறுவதற்குப் காலங்கள் பல ஆகக்கூடும்..
எனவே மிகச்
சுருக்கமாக இப்பதிவு..
திருக் கயிலாயத்தில் ஈசனின் அனுக்கத் தொண்டராக திரு நீற்று மடல் தாங்கி - அமரர் கூட்டம் அம்மையப்பனைத் தரிசனம் செய்த பின் அவர்களுக்கு திருநீறு அளிக்கும் திருப்பணியில் இருந்தவர்..
அம்பிகையின் சேடிப் பெண்களாக இருந்த அநிந்திதை, கமலினி எனும் கன்னியரை மலர் பறிக்கும் வேளையில் கண் இமைப் பொழுது நோக்கிய காரணத்தால் பூவுலகில் பிறந்து வாழ்வைத் துய்த்து வரும்படியாக அம்மையப்பரால் அநுக்கிரகம் செய்யப்பட்டவர்..
அதன்படி திருநாவலூரில் வாழ்ந்த சடையனார் - இசைஞானியார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்து திருமுனைப்பாடி நாட்டின் மன்னர் நரசிங்க முனையரால் வளர்க்கப்பட்டார்..
பருவ வயதில் திருமணம் நிகழ இருந்த வேளையில் வயோதிகராக வந்து - அடிமையென்று எழுதித் தந்த பழ ஆவணம் தனைக் காட்டி தடுத்து ஆட்கொண்டார் இறைவன்..
அதன்பின் முன்வினைப் பயனால் ஆரூரில் பிறந்திருந்த பரவை நாச்சியாரை (அநிந்திதை) மணங்கொண்டார்.. தலயாத்திரை மேற்கொண்டிருந்த காலத்தில் திரு ஒற்றியூரில் பிறந்திருந்த சங்கிலி நாச்சியாரையும்
(கமலினி) திருவருள் ஆணையால் மணம் புரிந்து கொண்டார்..
அவ்வேளையில்
" உனை விட்டுப் பிரியேன்.. * எனும் வாக்குறுதியையும் வழங்கினார்.. நாள் போன போக்கில் ஆரூரைத் தரிசிக்க ஆவல் எழுந்ததால் சூளுறவை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார்..
ஊர் எல்லையைக் கடக்கும்போது கண்களை இழந்தார்.. மனம் தளராத அவரிடம் இரக்கம் கொண்ட இறைவன்
திருவெண்பாக்கம் எனும் தலத்தில் வைத்து ஊன்றுகோல் அளித்தார்.. அன்னை மின்னொளியாக வழிகாட்டினாள்.. காஞ்சியை வந்தடைந்த சுந்தரருக்கு இடது கண்ணில் பார்வை கிடைத்தது..
அங்கிருந்து ஆரூரை வந்தடைந்து வழிபடும் போது வலது கண்ணிலும் ஒளியினைப் பெற்றார்..
இதனிடையே சுந்தரர் சங்கிலி நாச்சியார் மணம் பற்றி அறிந்து கொண்ட பரவை நாச்சியார் மிகுந்த கோபம் கொண்டார்..
அவரது கோபத்தைத் தணிக்க வேண்டும் என, ஈசனிடமே கேட்டுக் கொண்டார் சுந்தரர்..
ஈசனும் அவ்விதமே மூவரது முற்பிறவியைக் குறித்து கூறியருளினார்..
மாற நாயனார் தாம் - அம்பர் மாகாளத்தில் சோமயாகம் செய்யும் போது ஆரூர் தியாக ராஜப் பெருமானும் அன்னையும் எழுந்தருள்வதற்கு உதவ வேண்டும்.. - என்று சுந்தரரிடம் விண்ணப்பம் செய்து கொண்ட போது,
அவ்வாறே ஈசனும் அம்பிகையும் யாகசாலையில் எழுந்தருளும்படிக்கு சுந்தரர் ஈசனிடம் நட்பு பாராட்டியவர்.. வன்தொண்டர் எனும் சிறப்புப் பெயரையும் பெற்றவர்..
திருநாட்டியத்தான்குடி கோட்புலி நாயனார் தமது மகள்கள் வனப்பகை, சிங்கடி எனும் இருவரையும் சுந்தரர் மணந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி நின்றபோது -
அந்தப் பெண்கள் இருவரையும் தன்னுடைய புதல்விகளாக ஏற்றுக் கொண்டு திருப்பதிகத்தில் வைத்துப் பாடியருளிய உத்தம புருஷர்..
ஏழு திருப்பதிகங்களில் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், ஒன்பது திருப் பதிகங்களில் தம்மை வனப்பகையப்பன் என்றும் குறித்தருளியுள்ளார்..
கேரளத்தில் திரு அஞ்சைக் களத்தில் சேரமான் பெருமாள் நாயனாருடன் தரிசனம் செய்து கொண்டிருந்த போது - போதும் இந்த உலக வாழ்க்கை என்று தோன்றியது..
திருக்கயிலாயத்தில் இருந்து இறைவன் சுந்தரருக்கு அழைப்பு விடுத்து தனது யானை அயிராவணத்தையும் அனுப்பி வைத்தான்..
அந்தளவில் திருக் கயிலாயத்திற்கு யானை மீதமர்ந்து புறப்பட்டார் சுந்தரர்.. சேரமான் பெருமாளும் உடன் புறப்பட்டார்.. ஆயினும், அழைப்பு இல்லாத காரணத்தால் சேரமான் பெருமாள் நாயனாரை
சிவகணங்கள் கயிலாயத்தினுள் அனுமதிக்கவில்லை..
ஆனாலும் அவருக்கும் கயிலாய நாதனை தரிசனம் செய்து வைத்தார்..
ஆரூரில் இருந்து பரவை நாச்சியாரும் திரு ஒற்றியூரில் இருந்து சங்கிலி நாச்சியாரும் ஒளி வடிவாக திருக்கயிலாயம் வந்தடைந்தனர்..
இறைவன் சந்நிதியில் திருத்தொண்டு புரிந்து இன்புற்று இருக்கின்றதாக இறையன்பர்கள் தலைமேற் கொள்கின்றனர்..
வாழுங்காலத்தில் வள்ளலாக வாழ்ந்தவர் சுந்தரர்.. இறைவனிடம் இருந்து தாம் பெற்ற பரிசுகளை எல்லாம் பிறருக்கும் வழங்கி மகிழ்ந்தவர்..
அவிநாசியில் முதலை விழுங்கிய சிறுவனை மீட்டளித்தவர்..
முதுகுன்றத்தில் ஈசன் அளித்த பொற்காசுகளை மணிமுத்தாற்றில் போட்டு விட்டு ஆரூர் திருக்குளத்தில் இருந்து எடுத்துக் கொண்டவர்.. குண்டையூர் கிழாரிடம் இருந்து தான் பெற்ற நெல்மலையை திரு ஆரூருக்கே பகிர்ந்தளித்தவர்..
திருஆரூரில் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த திருத் தொண்டர்களைக் குறித்து சுந்தரர் பாடியருளிய திருத்தொண்டர்த் தொகை எனும் திருப்பதிகம் தான் பின்னாளில் சேக்கிழார் பெரிய புராணம் இயற்றுவதற்குக் காரணமாக அமைந்தது..
ஸ்வாமிகளின் இயற்பெயர் நம்பி ஆரூரன்.. இவர் இமயத்தின் பனிப் பாறையில் இருந்து தோன்றியதால் " சுந்தரா!.. " - என்று இறைவன் அழைத்தனன்.. சுந்தரர் இறைவனை அழைத்தது பித்தா!.. - என்று!..
சுந்தரர் திருக்கயிலைக்கு ஏகிய போது அவருக்கு வயது பதினெட்டு.. அவர் பாடியருளிய திருப்பதிகங்கள் மூவாயிரத்து எண்ணூறு.. இவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பவை நூறு மட்டுமே..
**
பித்தா பிறைசூடீ பெரு
மானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்
கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத்
தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய்இனி
அல்லேன் எனலாமே.. 7/1
போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7/28
பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.. 7/29
பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப் பானை
இன்ன தன்மையன் என்று அறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலும் ஆமே.. 7/59
இந்திரன் மால்பிரமன் எழிலார்
மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்
தான்மலை உத்தமனே.. 7/100
நம்பி ஆரூரர் திருவடிகள் போற்றி
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
சித்தமெல்லாம் நமக்கு சிவமயமே... சுந்தரர் வரலாறு மறக்காதே.. சிவாஜி கண்முன் வருகிறாரே...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தெய்வீக படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. சுந்தரர் வரலாறு எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கப்படிக்க திகட்டாதது. அருமையாக விவரித்து எழுதியுள்ளீர்கள். தேவாரப் பாடல்கள் அனைத்தும் இனிமை. அவரின் அருள் பார்வை ஈசனின் அருளோடு நம்மெல்லோருக்கும் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன். இன்றைய தினத்தில் அம்மையப்பனை பணிந்து வணங்கிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தேவாரம் வாசிக்க வாசிக்க சித்தம் தெளிவு பெறும்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக்கும் நன்றி..
பதிவு அருமை. சுந்தரர் பற்றித் தெரிந்திருந்தாலும் சுருக்கமாக நீங்கள் கொடுத்திருப்பவையும் படிக்கச் சிறப்பு. இப்போவும் சுந்தரர் பாடிய பதிகங்கள் கண் நோய்க்கு உதவுகின்றன. சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநான் என்ன புதிதாக சொல்லி விடப் போகின்றேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..
அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குசுந்தரர் வரலாறு அறிந்தேன் நன்று. வாழ்க வையகம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குவாழ்க வளமுடன்..
சுந்தரர் வரலாறு அருமை.
பதிலளிநீக்குபாடலை படித்து தரிசனம் செய்து கொண்டேன். சுந்தரர் குருபூஜைக்கு மாமா(மாமனார்) வருட வருடம் திரு அஞ்சைக்களம் சென்று விடுவார்கள்.
நேற்று நாங்கள் சுந்தரர் தேவாரம் படித்தோம், இன்று படிப்போம்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குதங்கள் மாமனார் திரு அஞ்சைக் களத்திற்கு சென்று தரிசனம் செய்வத்சி ஏற்கெனவே அறிந்திருக்கிறேன்..
கருத்துரைக்கு நன்றி..
வாழ்க நலம்..
சுந்தரர் வரலாறு அருமை. கீதாக்காவும் ஆரூரான் கோயில் பற்றிய பதிவில் சுந்தரர் பற்றி இரு மனைவியர் என்று சொல்லியிருந்ததை அப்போதுதான் அறிந்தேன். இங்கு அவரின் வரலாறு.
பதிலளிநீக்குகீதா
ஆமாம் நானும் படித்தேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
'பித்தா' என உரிமையுடன் அழைத்தவர்.
பதிலளிநீக்குகுருபூஜை நாளில் நல்ல பகிர்வு.