நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று செவ்வாய்க் கிழமை
ஸ்ரீ தையல் நாயகி அன்னைக்கொரு
அன்பின் பாமாலை
***
இப்பாமாலை பிரபல ஜோதிடரும் கவிஞருமான உயர்திரு சிவல்புரி சிங்காரம் அவர்களது கவிதையினை ஒட்டி எழுதப் பெற்றது..
***
முன்னவன் மூத்தவன்
மூஷிக வாகனன்
தன்னுடன் கொஞ்சும் மயிலே
தையல் நல்லாள் எனும்
தாயுனைத் தஞ்சமென்
றடியேனும் தேடி வந்தேன்..
தாயென நின்றவள்
தமிழென வந்தவள்
தயவினை நாடி வந்தேன்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 1
நடைகொண்ட விடையோடு
நடங்காணும் நாயகன்
இடங்கொண்ட தேவி போற்றி
தண்டமிழ்க் கந்தனைக்
தண்மலர்க் கடம்பனைக்
கொண்டாடும் குமரி போற்றி
அண்டத்தில் அணுவாகி
அணுவுக்குள் ஆடிடும்
ஆதியே போற்றி போற்றி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 2
காண்கின்ற காட்சியில்
கண்ணொளி ஆகின்ற
கருணையே போற்றி போற்றி
கைகால்கள் நழுவாமல்
கண்கொண்டு வாழ்தற்கு
காமாக்ஷி போற்றி போற்றி
கண்ஆயிரம் என்று
புண்ஆயிரம் கொண்ட
புன்மையைத் தீர்த்த தேவி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 3
அருணனின் பிள்ளைகள்
ஐயனின் அடிதொழ
அருள்முகம் காட்டி நின்றாய்
அன்றரக்கன் செய்த பிழை
ஆகாதது என்று கழுகரசன்
தோளில் நின்றாய்
ரகுராமன் வரும் வரையில்
புள்ளரசன் இன்னுயிர்
அன்னையே காத்திருந்தாய்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 4
தீமைக்கும் தீயர்க்கும்
திருமுகம் காட்டியே
திருவருள் ஊட்டாதவள்
திருவடி தொழுகின்ற
தூயோர்க்கு என்றுமே
நல்வழி மாற்றாதவள்
திண் என்று போர் கொண்டு
தீயவர் முடி வென்று
பழிபாவம் தீர்ப்பாளவள்
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 5
சொல்லுக்குள் சொல்லான
சுந்தரி சௌந்தரி
சூலினி போற்றி போற்றி
சூழ்வினை நீக்கிட
வாராஹி என்றுவரும்
வளர்சிவை போற்றி போற்றி
மகிஷனைத் தீர்த்திட்ட
மா துர்க்கை மங்கலை ஈஸ்வரி
போற்றி போற்றி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
திருவடி போற்றி போற்றி.. 6
பேராயிரம் கொண்ட
பெருமான் எழுந்தனன்
பிணிகளைத் தீர்க்க என்று
பிரியாத தேவியவள்
உடனாகி வருகவே பிணி
தீர்க்கும் தைலம் கொண்டு
நானுண்டு என்மகனே
அஞ்சாதே நீ என்று
அன்புடன் சொல்லி வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் வருக வருக.. 7
சித்தாமிர்தக் குளம்அதன்
அருகில் நின்வாசல்
என்றுமே மறந்ததில்லை
ஆண்டுகள் பலசென்று
சந்நிதிக்கு வந்தாலும்
அன்பு செய்ய மறந்ததில்லை
தடம் மாறிச் சென்றதில்லை
தடுமாறுகின்றேனே
தாய் உள்ளம் காண வில்லையோ
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 8
அறியாமல் செய்தபிழை
அத்தனையும் அன்னையே
அன்புடன் நீ பொறுப்பாய்
அறிந்தெனது உளம் செய்த
ஒருநன்மை இருந்தாலேஅது
கொண்டு அன்பு தருக..
பிள்ளைமனம் தெரியாத
அன்னையென் றெவருமே
இவ்வுலகில் இருந்ததில்லை
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 9
புள்ளிருக்கு வேளூரில்
புகழ்கொண்ட புண்ணியமே
புத்தொளி கொண்டு வருக
முள்ளிருக்கும் வழிதன்னில்
முன்னெடுத்து வைக்காமல்
முன்நின்று காக்க வருக
உற்றதுணை நீயின்றி
மற்றவர் யாருண்டு
உதவிட உவந்து வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 10
பகை வென்று பிணி வென்று
முடிகொண்ட நாயகி
பைரவி பரமேஸ்வரி
கால்களில் தோள்களில்
பலம் தந்து நலம் தருக
சங்கரி ஜகதீஸ்வரி
ஆனந்த வல்லியாய் அருள்
கொண்டு வரவேணும்
அன்னையே புவனேஸ்வரி
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக.. 11
கற்பகவல்லியே என்துயர்
தீர்க்கவே காற்றாகி
வருக வருக
கால் கொண்டு எழுந்திட
காருண்ய வல்லியே
ஊற்றாகி வருக வருக
தஞ்சையில் உன்செல்வன்
தமிழ் கொண்டு பாடிடும்
கவிகேட்க வருக வருக
வைத்திய நாதனுடன்
வளர் தையல்நாயகி
என்வாசல் தேடி வருக..12
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***
பாமாலை பிரமாதம். இதை நமக்குள் வைக்காமல் பேப்பரில் பிரிண்ட் எடுத்து ஜெராக்ஸ் எடுத்து கோவில்களில் வைக்கலாம். நிறைய பேருக்கு உதவும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நீக்குதஞ்சையில் உன் செல்வன் - கவி முத்திரை.
பதிலளிநீக்குதற்செயலாக அந்த வரிகள் அமைந்து விட்டன.. மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபாமாலை நன்று ஜி வாழ்க வையகம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
நீக்கு//தஞ்சையில் உன் செல்வன் தமிழ் கொண்டு பாடிடும் கவி// மிக அருமை. சற்றே நீண்ட பாமாலை எனினும் பாடித்துதிக்கு ஏற்றது. வணங்கிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..
நீக்குஅன்னைக்கு ஒரு பாமாலை - மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரையும் பாராட்டும் வாழ்த்தும் உளமார்ந்த நன்றி..
நீக்குஅருமை ஐயா...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குதுரை அண்ணா கலக்கல் சக்திக்குச் சூட்டிய பாமாலை.!
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குசிறப்பான பாமாலை . வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதையல் நாயகி அம்மன் பாமாலை மிக அற்புதம்.
பதிலளிநீக்குதையல் நாயகியும், வைத்திய நாதனும் உங்கள் கை வலியை சரிவெய்வார்கள் விரைவில். துயர் தீர்ப்பார்கள்.
உற்றத்துணையாக வருவார்கள் எப்போதும்.
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. ஆறுதல் கருத்துரைக்கு நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவும், அன்னையின் அருள் சுரக்கும் படமும் அருமை தையல் நாயகி அம்மனை துதித்து தாங்கள் இயற்றிய பாமாலை மிகவும் நன்றாக இருக்கிறது. இறுதி வரிகள் மனதை மெய்யுருகச் செய்தன. அம்மையும், அப்பனும் தங்களை என்றும் ஒரு குறையும் வாராது காப்பார்கள். அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிவுக்கு கருத்திட நேற்று வர இயலவில்லை மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும்.
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..