நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இடக்கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு வலக்கை கட்டை விரலால் தட்டச்சு செய்வது தற்போதைய சூழ்நிலையில் சிரமமாக உள்ளது..
எனினும், தங்கள் அனைவருடனும் இருக்க வேண்டும் என்ற ஆவலால் பதிவுகளை இரண்டு நாட்களுக்கு
ஒருமுறையாகத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
வடகுரங்காடுதுறைக் கோயிலைப் பற்றிய செய்திகள் தொடர்கின்றன..
***
தாகம் தீர்வதற்கு வழி இயலாத சோகத்துடன் சென்று கொண்டிருந்த அவர்களது வழியில் குறுக்கிட்டது - குலை குலையாய் காய்களுடன் அழகான தென்னந்தோப்பு.. அதைக் கண்டதும் தாகம் இன்னும் மேலோங்கி நின்றது.. ஆனாலும், யார் இங்கே வருவார்.. உயரத்தில் இருக்கும் இளநீரைப் பறித்துத் தருவார்.. என்று ஏங்கிய வேளையில் -
அதோ இளைஞன் ஒருவன் அவனருகில் பின்னல் அலங்காரச் சடையுடன் கன்னி ஒருத்தி அவனது கையைப் பற்றியபடி.. அவனது காதலி போலும்.. கூடவே வழிக்குத் துணையாய் ஒற்றைக் காளை..
அவர்களிடம் உதவி கேட்கலாம் - என, இவர்கள் எண்ணிய சமயத்தில் -
வந்திருப்பவர்கள் இறைவனும் இறைவியும் என்பதை உள்ளுணர்ந்து கொண்ட நெடுமரம் ஒன்று நக்கீரரைப் போல தருக்கிக் கொண்டு எதிர்வாதம் செய்து நிற்காமல் தன் தலையைத் தாழ்த்தி வணங்கி நின்றது..
இதைக் கண்டு அதிசயித்த தாயும் மகளும் திகைத்து நின்றனர்..
தயாநிதியாய் வந்த தயாபரன் என்றும் மாறாத புன்னகையுடன் இளநீர்க் காய்களைப் பறித்தான்.. தாகத்தில் தவித்திருந்த தாயும் மகளும் அருந்துவதற்கு ஏற்றவாறு அவற்றை சீவிக் கொடுத்து - குலை வணங்கு நாதன் - என, புதுப்பெயரினை சூட்டிக் கொண்டான்...
ஏழைக்கு இரங்கிய தயாநிதி என்று அழகு சடை முடியாளுடன் இங்கே வீற்றிருக்கின்றான் இறைவன் ..
குலை வணங்கும் காட்சி |
வாலி வணங்குதல் |
வாலி வழிபடும் சுதை சிற்பத்தில் உள்ள மரத்தில் சிட்டுக்குருவி ஒன்றினையும் கண்டு மகிழ்க..
கருவறை விமானத்தின் தென்புறத்தில் இவ்வரலாறு சிற்பமாக விளங்குகின்றது..
அந்த காலத்தில் வாழ்ந்ததிருமாளிகைப் பத்தியுடன் பிரகாரம் விளங்கியிருத்தல் வேண்டும்.. ஆனால் இப்போது வெட்ட வெளியாய் ஒற்றைப் பிரகாரம்.. அதன் மேடையில் பின்னமடைந்த சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. அவற்றுள் ஸ்ரீ ஜேஷ்டா தேவியின் சிற்பமும் ஒன்று..
நிருதி மூலையில் விநாயகர் சந்நிதி..
தற்போது முருகன் இருக்கும் மண்டபம் |
இங்கே அருணகிரியார் வருகை தந்த பொழுதில் முருகனின் சந்நிதி கோலாகலமாக விளங்கியிருத்தல் வேண்டும்.. காலப்போக்கில் அந்த சந்நிதி ஏதோ காரணங்களால் கரைந்து விட்டது போலும்.. அதன் பின் நல்லோர் சிலர் கூடி - முருகனின் திருமேனியை வள்ளி தெய்வானையுடன் இப்போதுள்ள நிலையில் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.. - என்று எனது மனதிற்குப் படுகின்றது.. உண்மை நிலை எதுவோ!..
வடக்கு கோட்டத்தில் நின்ற திருக் கோலத்தில் பிரம்ம தேவன்.. எதிரில் சண்டீசர்.. அருகில் அஷ்ட புஜ துர்கா தேவி..
ஈசானியத்தில் சபா மண்டபம்..
நடராஜ சபைக்கு எதிரில் இரட்டை வைரவர், சனைச்சரன், சூரியன், சந்திரன்.. அருகில் சமயக் குரவர்கள்..
நிம்மதியாக மும்முறை வலம் செய்து விட்டு நந்தி மண்டபத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம்..
*
மேலும் சில செய்திகளுடன் இன்னுமொரு பதிவு தொடரும்..
இன்றைய பதிவில் குரங்காடுதுறைத் திருப்புகழ்
(நன்றி : கௌமாரம் தளம்)
*
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக்கவசத் ... திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத் தணிந்தாழி வனைக்கடகச் ... சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்தமலர்ப் ... புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற் ... புகல்வேனோ..
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் ... சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத் திருங்கான நடக்குமவற் ... கினியோனே..
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் ... தொடும் வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப் ... பெருமாளே..
வெற்றிவேல்.. வீரவேல்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
உங்கள் கட்டை விரலில் என்ன/ மருத்துவரைப் பார்த்தீர்களா? ஏன் இன்னும் சிரமம் தொடர்கிறது?
பதிலளிநீக்குகட்டை விரலில் ஏதும் பிரச்னை இல்லை.. வாட்ஸாப்பில் விவரம் சொல்லி இருக்கின்றேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அன்று கேட்ட கேள்விக்கு விடை கிடைத்தது. குலை வணங்கு நாதன் பெயர்க்காரணம் தெரிந்தது. படங்கள் அழகு. தந்தைக்குரிய கோவிலாக இருந்தாலும் தனயனுக்கு நண்பர்களும் பக்தர்களும் இருப்பார்களே.. அதுபோல அருணகிரிநாதர் வந்து முருகனை வணங்கிச் சென்றிருக்கலாம்.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்.. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....
நீக்குஜேஷ்டா தேவி இருந்தால் மிகப் பழைய கோயில். முற்காலச் சோழர்கள் கோயில்களில் எல்லாம் ஜேஷ்டா தேவியும் சப்த கன்னியரும் இடம்பெறுவார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். மதுரைத் திருவேடகம் கோயிலிலும் அப்படியே! சப்தகன்னியருக்கு வழிபாடும் அங்கே செய்திருக்கோம். இந்தக் கோயில் போனதில்லை. அரிய தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் சரியே.. இது மிகவும் பழைமையான கோயில் தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..
தங்கள் கைவலியைப் பற்றிக் கேட்டு எழுதி இருந்த கருத்துரை வரவில்லை. கை மணிக்கட்டில் வலியா? அல்லது முழங்கையிலா? அல்லது கை முழுவதுமா? ஸ்பான்டிலைடிஸ் காரணமாகக் கூட இருக்கலாம். அதற்கு சிகிச்சை அளித்தால் கை வலி சரியாகலாம். (இதைத் தான் முன்னரும் சொல்லி இருந்தேன். அது வரலை.) கவனமாக இருக்கவும்.
நீக்குஇரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் வந்த விளைவு.. இத்தனைக்கும் மிகவும் கட்டுப்பாடாகத் தான் இருக்கின்றேன்..
நீக்குதற்போது ஆயுர்வேத சிகிச்சை..
தங்கள் அன்பினுக்கு நன்றியக்கா..
விரல் வேதனைக்கு மருத்துவம் பார்த்தீர்களா ஜி ?
பதிலளிநீக்குதல வரலாறுகளோடு படங்களை தரிசித்து கொண்டேன் நன்றி.
விரலில் பிரச்னை ஏதும் இல்லை ஜி.. கையில் தான் வலி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவும், படங்களும் அருமை. கோவிலைப் பற்றிய விபரங்களும், அதன் தலபுராண கதையும் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படங்களையும் பொறுமையுடன் எடுத்து பகிர்ந்து கண் முன்னே கோவிலை நிறுத்துகிற மாதிரி எல்லா விபரங்களும் தந்து, எங்களையும் கோவிலை சுற்றிப்பார்த்து ரசித்து அருமையான தரிசனம் பெற்று தந்த பதிவை தந்த தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அருமையாக எழுதி உள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கள் உடல்நலம் பார்த்துக் கொள்ளவும். விரைவில் தங்கள் உடல் உபாதைகள் அனைத்தும் குணமாக இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் அன்பின் பிரார்த்தனைக்கும் நன்றி..
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதட்டச்சு செய்ய முடியவில்லை என்றால்....
பதிலளிநீக்கு1) பேசினால் போதும்...
2) திருத்தம் செய்ய வேண்டும்...
3) படங்களை இணைக்க வேண்டும்...
4) சரி பார்த்து விட்டு பதிவை வெளியிட வேண்டும்...
இந்த முறையில் முன்பு ஒருசமயம் செய்திருக்கின்றேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல பேசி செய்யலாம். சாரின் அண்ணா அப்படித்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் விரல் நலமாக வாழ்த்துக்கள்.
கோயில் தலவரலாறு , மற்றும் படங்கள் அருமை.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..
நீக்குதல வரலாற்றுக் கதையும் அறிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குவிரல் நலமாக வேண்டுவோம். வலி அதிகம் இருந்தால் அதில் ஊசி போடுவார்களே.
விரலில் பிரச்னை இல்லை.. கையில் தான் வலி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு வேண்டுதலுக்கு நன்றி..
கைவலி விரைவில் குணம் அடைய பிரார்த்தனைகள். தல புராணம் படித்து மகிழ்ந்தேன். குலை வணங்கு நாதன் பெயர்க்காரணம் படித்து ஆனந்தம். எத்தனை எத்தனை கதைகள். அருணகிரிநாதர் பாமாலையும் மிகவும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
பதிலளிநீக்கு