செவ்வாய், மே 03, 2022

அக்ஷய திரிதியை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை - 20
வளர்நிலவின்
மூன்றாம் பிறை
அக்ஷய திரிதியை..
செவ்வாய்க்கிழமை

வனவாசம் சென்ற பாண்டவர்களுக்கு
ஸ்ரீ பரந்தாமனின் கருணையினால் ஸ்ரீ சூரிய மூர்த்தி அட்சய பாத்திரத்தைநல்கிய நாள்..
***
இறைவழிபாட்டிற்கும் தான தர்மத்துக்கும்
உகந்த இன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தான் உருப்படலாம் என்ற புரளி பிரசித்தம்..


" இன்றைக்குத் தங்கம் வாங்குங்கள்.. அதுவும் எங்களிடம்  -  வாங்கினால் தான் உங்கள் வீட்டில் மங்கலம் பொங்கும்!.. " என்று எங்கெங்கும் சத்தம்..

திருவருட் செல்வர்களாகிய
நால்வருள் ஈசனிடம் பொன்னும் மணியும் வேண்டுமென்று பல முறை கேட்டுப் பெற்றவர் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்..

இறைவன் ஒரு முறை அருளிய செல்வத்தைக் கொண்டு சிறப்புடன் வாழலாகுமே!.. ஏன் பல முறை கேட்டுப் பெறவேண்டும்?.. 
என்று எழும் வினாவிற்கு விடை - 

தான் பெற்ற கொடையை தானே வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் வாரிக் கொடுத்திருக்கின்றார் சுந்தரர்..

ஒரு முறை திருக்கோளிலிக்கு அருகில் குண்டையூர்க் கிழார் என்பவர் சுந்தரருக்குக் கொடையளிக்க இயலாமல் போயிற்றே.. என்று வருந்துகின்றார்... 

காரணம் அப்போது மழை பொய்த்ததால் வறட்சி.. விளைச்சல் இல்லை..

அன்றைய இரவில் ஈசன் சுந்தரருக்குக் கொடுப்பதற்காக குண்டையூரில் மிகப் பெரிய நெல் மலையை அருளுகின்றார்.. 


பொழுது விடிந்ததும் நெல்மலையைக் கண்டு வியந்த கிழார் சுந்தரர்க்குத் தகவல்
அனுப்புகின்றார்.. 

விரைந்து வந்த சுந்தரர் நெல்மலையைக் கண்டு மகிழ்ந்து இறைவனைப் போற்றிப் புகழ்வதோடு - இதை அள்ளிக் கொண்டு போய் வீட்டில் சேர்ப்பதற்கு எம்மிடம் போதுமான ஆட்களில்லை.. ஆகவே, ஐயா.. நீரே இதற்கொரு வழி காட்டுக!.. என்று  உரிமையுடன் விண்ணப்பம் செய்து கொள்கின்றார்..

இதைச் செவியுற்ற இறைவன் பூத கணங்களை அனுப்புகின்றார்.. 

கயிலாய மாமலையில் வேலையின்றி அரட்டை பேசிக் கொண்டிருந்த பூத கணங்கள் எல்லாம்  அலறி அடித்துக் கொண்டு குண்டையூருக்கு ஓடி வந்தன..

நெல்மலையைக் கண்ட பூத கணங்கள் - இதனை எங்கே கொண்டு சேர்ப்பது?.. - என்று வினவின..

" தேவையுள்ள இடத்தில் எல்லாம் திருவருளினைச் சேர்க்கவும்!.. " - என்று அன்புடன் விடை பகர்ந்தார் சுந்தரர்..

அவ்வளவு தான்..
நெல்மலையைப் பிரித்து அள்ளிய பூதங்கள் திரு ஆரூர் மற்றும் சுற்றுப்புற வீடுகள் தோறும் நெல்லைக் கொட்டி நிறைத்து விட்டு கயிலைக்குப் போய்ச் சேர்ந்தன..

அந்த அளவில் அங்கே வறட்சி நீங்கி வளம் பெருகியதாக சுந்தரர் புராணம்.. இந்நிகழ்வு ஆண்டு தோறும் மாசி மகத்தை அனுசரித்து திருக்கோளிலி, திரு ஆரூர் கோயில்களில் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது..

" ஊரெல்லாம் தான் வறட்சியாக இருக்கிறதே.. சுந்தரருக்காகக் கிடைத்த நெல் மலையில் - பத்து மூட்டையை நாம் நமக்காக ஒதுக்கி வைத்துக்கொண்டு  மிச்சத்துக்கு சேதி சொல்லி விடுவோம்!.. " - என்று குண்டையூர்க் கிழார் நினைக்க வில்லை... அதுவே அவருடைய சிறப்பு..

" ஆகா.. இவ்வளவு பெரிய நெல் மலையை இறைவன் நமக்காகக் கொடுத்து இருக்கின்றான்... வேண்டியதை வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்றுக் காசாக்கி பரவையிடம் கொடுத்து விட்டால் அவள் பார்த்துக் கொள்வாள்.. பல தலைமுறைகளுக்குக் கவலை இல்லை!.. " - என்று சுந்தரரும் நினைக்கவில்லை.. மாறாக பசித்தோர் அனைவருக்கும் பயனாகட்டும் என்று கூறியது அவருடைய மாண்பு..

இதுவே உயரிய ஞானம்..

இந்நிகழ்வில் இருந்து 
நமக்குக் கிடைக்கும் திருக்குறள் - 

காக்கை கரவா கரைந்து உண்ணும்
ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள..

ஆகையினால்
இந்த நந்நாளில் சிவநேசச் செல்வர்களாகிய நாம் அனைவரும் நமது குரு நாதராகிய சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் காட்டிய வழியில் நின்று - பொன்னும் மெய்ப்பொருளும் தந்தருளும் புண்ணியனிடம்
வேண்டிக் கொள்வோம் -
பசியும் பிணியும் பகையும் பாரில் நீங்கட்டும்!.. என்று..
***
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்.
:- திருவள்ளுவர் :-

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவருக்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநரகங்கள் வைத்தார்..
-: திருநாவுக்கரசர் :-
*

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே..7.020.1
*

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்து அணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.. 7/59/1
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


அக்ஷய திரிதியை
பிரார்த்தனைகளுடன்
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. சிறப்பான புராணக்கதையைச் சொல்லி இன்றைய தினத்தின் சிறப்பை விளக்கி இருப்பது நிறைவு தருகிறது.  இந்தக் கால அரசியல்வாதிகள் நினைவுக்கு வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      பெரிய மிகப் பெரிய உள்ளம் படைத்தவர்களால் சிறப்புற்றது இந்த மண்..அரசியல் வியாதிகளால் இன்றைக்கு அல்லலுறுகின்றது..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு.
    சுந்தரர் தேவாரம், நாவுக்கரசர் தேவாரம் படித்து வணங்கி கொண்டேன். பசியும், பிணியும், பகையும் ஒழிந்து அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொண்டு நலமாக வாழ அருள் புரியட்டும் இறைவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வாழ்க வையகம்..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சிறப்பான நாளில் சிறப்பான கதை. தங்கம் மீதான மோகம் குறித்து என்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்றைய நாளில் சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. புராணக்கதை அறியாதது. இந்த நாள் ஒரு வியாபார நாளாகிவிட்டது. தங்க மோகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கத்தின் மீதுள்ள மோகம் தீர்வதற்கு இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் கண்களில் ஒற்றிக் கொள்வது போன்ற அழகுடன் திகழ்கின்றன. சுந்தரர் கதை ஏற்கனவே படித்ததென்றலும், இன்று இந்த நாளுக்குப் பொருத்தமாக பகிர்ந்ததை படித்த போது கண்கள் நிறைந்து விட்டன. இறைவனின் கருணையே கருணை. அதுவும் அவன் அடியார்களுக்கு அவன் தரும் கருணையை எண்ணி, எண்ணி மனம் பரவசமடைகிறது. இந்த நாளில் அனைவரும், பசி, பிணியின்றி அனைவரையும் இறைவன் எம்பெருமான் சர்வேஷ்வரன் காத்தருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். அழகிய பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நல்லோர்கள் நமக்குக் காட்டிய வழியில் நாமெல்லாம் பயணிக்க இறைவன் அருள் புரிய வேண்டும்..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..