வெள்ளி, ஏப்ரல் 08, 2022

திருச்செந்தூரில்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

உவரியில் தரிசனம் நிறைவேறிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பகல் 11:00 மணிக்கு திருச்செந்தூரை வந்தடைந்தோம்.. வழக்கமாக தங்குமிடம் அன்னதானக் கூடமாக மாற்றப்பட்டு விட்டது..


காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அன்னதான சேவை திருக்கோயில் சார்பாகத் தொடங்கப்பட்டுள்ளது..



வெளியூர் அன்பர்கள் தமது பொருள்களை வைப்பதற்காக இருந்த அறைகள் சிலவற்றை நிர்வாகத்தினர் இடம் மாற்றி இருக்கின்றார்கள்..  அவசரத்துக்கு ஒதுங்க  இயலாதபடிக்கு பேருந்து நிலைய கழிவறைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.. அங்குமிங்குமாக மக்கள் தவிக்கின்றனர்..

ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி விட்டு  ஸ்வாமி தரிசனம்.. கோயிலுக்கு வரும் பக்தர்களை தர்ம தரிசன பொது வழி, கட்டணத்துடன் கூடிய சிறப்பு வழி - என, பற்பல திருப்பு முனைகளுடைய கூண்டு வழிகளுக்குள் செலுத்தி சந்நிதிக்கு முன்பாக ஒன்றாகக் கலக்கி விடுகின்றனர்..

பிரபலங்களுக்கான ( VIP) தரிசனம் - நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டிருப்பது கொஞ்சம் நிம்மதி.. இப்போது சந்நிதியில்  அர்ச்சனைகள் செய்யப் படுவதில்லை.. 

வள்ளிக் குகை வாசலில் நேர்ச்சைகள்





வள்ளிக் குகைக்கு முன்பாக உள்ள சிற்பத் தூண்



ஆனாலும் திரிசுதந்திரர்கள் சர்வ சுதந்திரமாக கருவறைக்குள் போவதும் வருவதுமாக இருக்கின்றார்கள்..
இலை விபூதி, அபிஷேகப் பன்னீர், எல்லாம் பணம் கொடுப்பவர்களுக்குக் கிடைக்கின்றன..






இந்நிலையில் செந்தில் நாதனைக் கண்ணாரத் தரிசித்தோம்.. இன்னும் சில நொடிகள் கிடைத்திருக்கலாம்..



இரண்டு மற்றும் மூன்றாம் திருச்சுற்றுகள் வலம் செய்ய முடியாதபடிக்கு அடைக்கப்பட்டுள்ளன..



ஸ்ரீ சங்கிலி பூதத்தார்

மேலைக் கோபுரம்
எனவே இரண்டாம் திருச்சுற்றில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சந்நிதிகளையும் மூன்றாம் திருச்சுற்றில் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி, ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பெருமாள் சந்நிதிகளை சோம சூத்ரப் பிரதட்சிணமாகத் தான் தரிசிக்க முடியும்..




எது எப்படியானாலும்
நமக்கு மன நிறைவு கிடைத்து விடுகின்றது..


அந்த அளவில் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள வள்ளிக் குகையையும் தரிசனம் செய்து விட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டோம்..

செந்தூரில் இருந்து முன்னிரவு 7:15 மணியளவில் சென்னைக்குக் கிளம்பும் விரைவு ரயிலில் பயணித்து தஞ்சைக்குத் திரும்பினோம்..
*
வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்குமே செந்தி நகர்ச் 
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு
அரோகரா..
***

13 கருத்துகள்:

  1. படித்ததும் ஏனோ சிலிர்த்து விட்டது.  திருச்செந்தூர் பார்த்ததில்லை.  நான் பார்த்ததில்லை பார்த்ததில்லை என்று சொல்லத்தான் எத்தனை இடங்கள்...  காலையில் செந்தில்நாதனை தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      திருச்செந்தூரை இன்னமும் தரிசனம் செய்ததில்லை எனக் கேட்கும் போது ஆச்சர்யம்..

      முருகனைத் தரிசனம் செய்தற்கு விரைவில் நேரம் கூடி வரும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருச்செந்தூர் படங்கள் எல்லாம் அருமை. வேலும் மயிலும் துணை என்று சொல்வது போல் மயில் நிற்கும் காட்சிகள் மனதை கவர்ந்தது.
    வள்ளி குகை வாசலில் இவ்வளவு நேர்ச்சைகள் பார்த்தது இல்லை முன்பு. போகும் பாதையும் இப்போது தளம் போட பட்டு மாற்றி அமைக்கப்படு இருக்கே! முன்பு மணலாகத்தான் இருக்கும் அந்த இடம்.

    வேலூண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இலை குகன் உண்டு குறைவில்லை மனமே! கந்தன் உண்டு கவலை இல்லை மனமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. வருங்கால்ம் எப்படியாகுமோ தெரியவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருச்செந்தூர் முருகனை தரிசித்தேன். நலமுடன் பயணம் அமைந்தமைக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. வள்ளி குகை உண்மையாகவே குகையாக இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போப் பார்த்தது தான். இப்போப் படங்களில் பார்க்கையில் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் வள்ளி குகை பார்க்க முடியாமல் திரும்பிய அனுபவங்கள் நினைவில் வருகின்றன. உங்களுக்கு தரிசனம் நன்கு கிடைத்தது செந்தில் ஆண்டவன் அருளே. மயில்கள் முன்னெல்லாம் நிறையவே உலாவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      செந்தூரில் வள்ளிக் குகை தரிசனம் எப்போதும் செய்வோம்.. அந்த இடுக்குப் பாதையில் சிறிது நேரம் நிற்பதும் ஐந்து ஐந்து பேரால மூன்றடி வாசல் வழியாக உள்ளே நுழைந்து அங்கு சற்றே பள்ளத்தில் நின்று வள்ளியம்மையைத் தரிசிப்பதும் சுகமானவை...

      தங்களது வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. வள்ளிக்குகையின் நேர்ச்சைகள் புதிய விஷயமாக உள்ளது. நல்ல தரிசனம் கிடைத்தமைக்கு செந்தில் ஆண்டவன் அருளே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவனன்றி ஆவது ஒன்றும் இல்லை தான்..

      தங்கள் கருத்துரைகு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  7. மிகச் சிறிய வயதில் சென்று வந்தது உண்டு. மீண்டும் செல்ல ஆசைப்படும் இடங்களில் இதுவும் ஒன்று. உங்கள் வழி நல்ல தரிசனம் பெற்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..