வெள்ளி, மார்ச் 04, 2022

புண்ணியம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கதிரவனின் மாலைக் கதிர்களால்  திருக்கயிலாய மாமலை பொன்னாகப் பொலிந்து கொண்டிருந்தது..

அம்மையும்  அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்..
அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக் கொண்டிருந்தனர்..

மயில் ஒருபுறம் சிறகைக் கோதியபடி இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது..

பொற்பிரம்பினைத் திருக்கரத்தில் தாங்கிய வண்ணம் நந்தியம்பெருமான் சேவை சாதிக்க - 

முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளை  வணங்கி மகிழ்வதற்குக் காத்துக் கிடந்தனர்.. 

பரபரப்பு மிகுந்திருந்த வேளை அது..

எம்பெருமானின் திருமுடிமேல் வெண் கொற்றக் குடை என, படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான்..

அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு..
''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''

அவன் இறுமாப்பு எய்திய  அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான்..
விழுந்த வேகத்தில், அழகிய  அவனது தலை ஆயிரமாக சிதறிப் போனது..

ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து  பின் வாங்கி நின்றது..

'' இறைவன் திருமுடியில் இருந்தவனுக்கு
இப்படிப்  போகலாமா புத்தி?.. இனி அவன் கதி என்ன  ஆகுமோ!.. '' - என, அனைவரும் நடுங்கினர்..

கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று  உருண்டான்.. புரண்டான்.. ஓலமிட்டான்  நாகராஜன்.

''... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழை தனைப் பொறுத்து அருளுங்கள்... ஸ்வாமி!..''

பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவன், எம்பெருமான் சந்நிதியின் முன் வருவதற்கு அஞ்சி நடுங்கினான்!...

அம்பிகை புன்னகையுடன் ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.. எம்பெருமானும் புன்னகைத்தார்..

நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று -

'' தகாத எண்ணம் உனக்கு!..
தலைக் கனத்தைத் தாங்க மாட்டாமல் சிகரத்தில் இருந்த நீ பாதாளத்தில் வீழ்ந்தாய்..
தண்டனை பெற்று விட்டாய்.. இருப்பினும் சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று அறிவுரை அருளினார்..

'' உத்தரவு... ஐயனே!...'' - என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலையைத் திரட்டி அள்ளிக் கொண்டு சென்றான்..

பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான்..

அவனது தவத்துக்கு இரங்கி -
பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார்.. அவரிடம் -
சிவராத்திரியின் நான்கு காலத்திலும்  வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான்..

மண்டையில் வைத்துக் கொண்டால் தான் -  கனமாகி விடுகிறதே!...

" நானும் பெரியவன்!.. " என்று தருக்கியதற்கு தலை போயிருக்க வேண்டும்.. ஏதோ நல்ல காலம் தப்பியது.. தம்பிரான் புண்ணியம்..  பழியாய் நினைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும்!.." - என்றெல்லாம் சிந்தித்த  நாகராஜன் ஆதிசேஷனின் தலைமையில்  மாநாடு ஒன்றைக் கூட்டினான்..

அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவரிடமும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டினான்..

'' சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்.. '' - என்று  மகிழ்ச்சி அடைந்த அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர்..

ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!..

தலை சிதறியிருந்த வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் -  காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்..

மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடனும் தவமிருந்தான்..

அவனையும் நல்ல காலம் நெருங்கியது..

சிவராத்திரியின் முதல் காலம்..


விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான்.. தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது.. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான்..

தன்னை மறந்த நிலையில் தனது பிழை தீர - சிவபூஜை செய்தான்.. மனம் நிறைவாக இருந்தது..

கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்..

முதல் காலத்தில்
நாகராஜன் வழிபட்ட திருத்தலம் - குடந்தைக்
கீழ்க்கோட்டம் என்று புகழப்படும் - ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்..

இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்ததை அருகில் இருந்த நாகங்கள் நினைவு படுத்தின..

முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தனது கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக வனம்..  

அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாகியிருந்த சூரிய புஷ்கரணி  நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது..

பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...

இரண்டாங்காலத்தில்  இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்..

''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!... 
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''

- என்று தொழுது நின்றான்.. நினைவில் சேர்ந்த பழுது தீர அழுது நின்றான்.. தொழுது நின்றான்..

இரண்டாம் காலத்தில் நாகராஜன் வழிபட்ட திருத்தலம் - திருநாகேஸ்வரம்..

நெருங்கிக் கொண்டிருந்த  மூன்றாம் காலத்தின் நள்ளிரவு.. 

இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளியிருந்த திருக் குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது..

இனி தாமதிக்க நேரமில்லை.. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான்.. குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது..

ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -

 ''..அகந்தை அழித்த ஐயனே.. அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்..

மூன்றாம் காலத்தில் நாகராஜன் வழிபட்ட திருத்தலம் தான் - திருப்பாம்புரம்..

கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப் பட்டது..

பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலத்தை நோக்கி பரபரப்புடன் விரைந்தனர்..

மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன..

சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது..

திருத்தலத்தை நெருங்கியதுமே நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றாமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன..

ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்..

புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்..

அங்கே முன்னமே எழுந்தருளி இருந்த விநாயக மூர்த்தி
கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார்..
அவருடைய திருவயிற்றில் உதர பந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது..

நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனக் கதறி அழுதான்..

நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர்.. அவருடைய அனுமதியுடன் திருக்கோயிலினுள் பிரவேசித்தான்..

கால்கள் தள்ளாடின.. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது..

கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில்  தன் கூட்டத்தாருடன் விழுந்தான்..

''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க.. எம்பெருமானே!..''

குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின..

அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,

கருந்தடங்கண்ணி அம்பிகையும்  காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்..

சிவராத்திரியின் நான்காம் காலத்தில் -
நாகராஜன் வழிபட்ட திருத்தலம் தான் - திருநாகைக் காரோணம்..


அவர் தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான்.. தன் பிழை பொறுத்தருள வேண்டினான்..

அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்..

அந்த அளவில் அவனது மனதில் படம் எடுத்து ஆடியிருந்த ஆணவத்தின் தடம் அழிந்து ஒழிந்தது..

பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்..

அகந்தை அழிவதே சிவ ராத்திரி நாளின் புண்ணியம் ஆகும் - என்பது ஆன்றோர் வாக்கு..

இந்த நான்கு திருத்தலங்களின் பெருமைகளை பின்னொரு பதிவில்
சிந்தித்திருப்போம்..
***
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.5.052.1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு. இந்தக் கதை நான் படித்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. ஓம் சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு.. இந்தக் ததை தங்களுக்குத் தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இப்படி ஒரு சாபவிமோசனம் பற்றிய வரலாறைக் கேட்டதில்லை எனினும் நான்கு தலங்களுமே தரிசித்திருக்கோம். திருப்பாம்புரமும்/திருநாகைக் காரோணமும் ஒரே முறை தான் போனோம். மற்ற இரண்டும் 2,3 முறை போயிருக்கோம். அரிய தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    நான்கு தலங்களுமே சிறப்பு வாய்ந்தவை.. நான்கு தலங்களையும் தரிசித்திருக்கின்றேன்..

    தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  4. இந்தப் புராணம் முதன் முதலாக கேட்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்களும் இப்போது தான் கேட்கின்றீர்களா..

      எப்படியோ.. மனிதனின் ஆணவம் அகல வேண்டும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இது வரை அறிந்திராத புராணக் கதை. (எல்லோராலும் பரவலாகச் சொல்லப்படும் புராணக் கதைகள் தவிர அதிகம் தெரியாதுதான்!!) இப்போதுதான் அறிகிறேன். நன்றி அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. முன்னர் நான் அறிந்ததே. இருந்தாலும் உங்கள் பதிவு மூலமாகப் படித்தபோது அத்தலங்களுக்கு நான் சென்ற உணர்வு ஏற்பட்டது. இவ்வாறான பதிவுகளைத் தொடர்ந்து மென்மேலும் நீங்கள் எழுதவும், நாங்கள் வாசிக்கவும் இறையருளை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஐயா..

    தங்களுக்குத் தெரியாத விஷயத்தையா நான் சொல்லி விடப் போகின்றேன்..
    தங்கள் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. ஓம் நமசிவாய ...

    அகந்தை அழிந்து என்றும் அவன் நினைவில் இருக்க எம்பருமான் துணை புரியட்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. புராணக் கதை நன்று. ஆணவம் நல்லதே அல்ல என்பதைச் சொல்லும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான தகவல்கள். ஆணவம் அழிவைத் தரும் என விளக்கும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சிவாய நம ஓம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..