வியாழன், ஜனவரி 13, 2022

மங்கல மார்கழி 29

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.. 247
*
-: அருளமுதம் :-

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..
திருப்பாடல்கள் 29 , 30..

இன்று
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி..
பெருமாள் திருவடிகள்
போற்றி.. போற்றி!..


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..29


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..30

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் போற்றி..
*
-: ஆழ்வார் திருமொழி :-


பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஒன்றறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1036

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய வெங்கார்வண்ணனை,
விண்ணோர் தாம்பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன்கலியன்
பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கில்லை பாவங்களே..1037
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-

தஞ்சை ஸ்ரீ வீர நரசிம்மர்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம்அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.. 953

ஸ்ரீ பராசர மகரிஷியின் தவத்துக்கு தஞ்சகனும் அவனது சகோதரர்களும்  இடையூறுகளை ஏற்படுத்தினர்.. அவர்களால் மக்களுக்கும் அநேக துன்பங்கள் நேரிட்டன.. செய்வதறியாது தவித்த மகரிஷி
ஸ்ரீ ஹரி பரந்தாமனிடம் தஞ்ச்ம் அடைந்தார்.. ஸ்ரீ ஹரியும் நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளி முனிவரையும் அடியார்களையும் காத்தருளினார்.. 

இவ்வண்ணம் - 
ஸ்ரீ நீலமேகப் பெருமாள், ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள், 
ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் - என மூன்று திருக்கோலங்கள்.. மூன்று திருக் கோயில்களும் ஒரே திவ்ய தேசம் எனக் கொள்ளப்பட்டுள்ளது..

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள்
போற்றி.. போற்றி..
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம் - தஞ்சபுரி
தஞ்சாவூர்


இறைவன்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி

தீர்த்தம் வெண்ணாறு
தலவிருட்சம் வன்னி


அல்லலுற்று
அடைக்கலம் தேடி
வருவோர்க்கு தஞ்சம் அளிக்கும் தலம்.. ஆதலால் தஞ்சபுரி..

தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக தவமிருந்த வேளையில் இராவணனுக்கு அஞ்சிய குபேரன் எல்லாம் வல்ல இறைவனிடம் தஞ்சம் அடைந்தான்
அம்மையப்பனும் குபேரனது தவத்துக்கு மகிழ்ந்து மீண்டும் அளவற்ற ஐஸ்வர்யங்களை வாரி வழங்கியதால்
ஸ்ரீ ஆனந்தவல்லி உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் என்று போற்றப்படுகின்றனர்..

இன்றைய
தஞ்சை மாநகரின்
வடக்கு எல்லையில்
வெண்ணாற்றின்
தென்கரையில்
மேற்கு நோக்கி
அமைந்துள்ள திருக்கோயில்..

இத்துடன் வேறு புராணங்களும் உள்ளன..
அவை பிறிதொரு சமயத்தில்..

தஞ்சை
மாநகரப் பேருந்து
நிலையத்தில் இருந்து
பாபநாசம்,திருவையாறு,
திருக்காட்டுப்பள்ளி,
திருக்கருகாவூர்
வழித்தடப் பேருந்துகள்
அனைத்தும்
கோயிலின் அருகில் 
நின்று செல்கின்றன..
*

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே.. 3/22
-: ஞானசம்பந்தப் பெருமான் :-

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11
-: அப்பர் ஸ்வாமிகள் :-

தாரும் தண் கொன்றையும்
கூவிளம் தனி மத்தமும்
ஆரும் அளவறியாத
ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்றில்லை உலகெலாம் உகப்பார் தொழப்
பேரும் ஓராயிரம் என்பரால் எம்பிரானுக்கே..7/44
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-



அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-


பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து இவர்க்கே..
-: கருவூரார் :-


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!..
-: உமாபதி சிவாச்சாரியார் :-

Fb ல் வந்த காணொளி
வழங்கியவருக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


சிவாய திருச்சிற்றம்பலம்
*
இந்த அளவில்
தஞ்சையம்பதியின்
மங்கல மார்கழி 
திருப்பாடல் பதிவுகள்
நிறைவு பெறுகின்றன..

உடன் பயணித்த அனைவருக்கும்
அன்பின் வணக்கம் நன்றி..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. மங்கல மார்கழியில் வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் பக்தியும் பரவசமும். அனைவருக்கும் நல்லது கிடைக்க எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கு நல்வரவு..
      எங்கும் நன்மைகள் நிகழ வேண்டிக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.. நன்றி..
      நலமே வாழ்க.

      நீக்கு
  2. நிறைவான மங்கள மார்கழி பதிவுகள் நிறைவை எட்டி விட்டன.  உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் ஒரு சபாஷ்.  எங்களையும் பக்திக் கடலில் ஆழ்த்தி வந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      இதில் என்னுடைய பணி என்று ஏதும் இல்லை..

      பெரியோர்கள் சொல்லி வைத்ததையே பதிவுகளில் தந்திருக்கின்றேன்..

      அனைவருடைய ஒத்துழைப்பிற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. வாழ்க வையகம் தரிசித்தேன் நன்று.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க வளமுடன்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. அட நாளைதான் வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை அழைத்து செங்கண்திருமுதத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று என்று மங்களம் என்று நினைத்தேன். இங்கு இன்று கறவைகள் என்பதால் தயிர்சாதம் படைத்தாயிற்று. நாளை பொங்கலோ பொங்கல்

    துரை அண்ணா பாசுர அமுதம் இன்றோடு நிறைவு பெற்றாலும் உங்களின் வழக்கமான தமிழமுதம் தொடருமே!

    நிறைவாக மங்களமாக முடிந்தது மகிழ்ச்சி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ..

      இந்த மட்டுக்கு நல்லபடியாக நிறைவு ஆனதற்கு அன்னை ஸ்ரீ ஆண்டாள் அவளே துணை செய்தாள்..

      இன்னும் சிறப்பாக செய்ய முடியவில்லையே என்னும் மனக்குறை உண்டு..

      ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. வருங்காலம் சிறப்பாக அமையும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நேற்று அடித்து வைத்த கருத்தும் சேர்ந்து கொண்டுவிட்டது. அது அப்புறம் போட முடியாமல் தங்கி இருந்ததும் சேர்ந்துகொண்டு... கறவைகள் நேற்று அல்லவா நேற்றுதான் தயிர்சாதம் இறைவனுக்கு....

    இன்று சிற்றஞ்சிறுகாலே!!

    சிறப்பாக முடியவில்லையா?!!!! அண்ணா மிக நன்றாக வந்திருக்கிறது. மிக்க நன்றி அண்ணா உங்கள் வாழ்த்துக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இன்று காலையில் விரஜா நதி எனப்படும் விண்ணாற்றில் குளித்து விட்டு கரையிலுள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாள், ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள், ஸ்ரீ நரஸிம்ஹப் பெருமாள்,
    ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர், அசூர்
    ஸ்ரீ பாலதண்டாயுத ஸ்வாமி - என ஆலய தரிசனம் செய்து விட்டு இப்போது தான் வந்தேன்..

    தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. இன்றைய மங்கல மார்கழி பதிவு மிக அருமை.
    காணொளியும் , படங்களும் அருமை.
    பாடல்களை பாடி வணங்கி கொண்டேன்.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இனிதாக தந்த மார்கழி பதிவுகளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் பாசுர பாடல்களை பாடி எம்பெருமாளை வழிபட்டதோடு எல்லா ஊரின் இறைவனையும், இறைவியையும் தரிசனம் செய்து வைத்தீர்கள். மிக்க நன்றி.

    குறளமுதம், அருளமுதம், ஆழ்வார்களின் திருமொழியமுதம், திருவாசகமுதம் என பல அமுதங்களை இந்த மாதம் முழுவதும் தந்து எங்களை பக்தி கடலில் நீராட்டியதற்கு உங்களுக்கு பணிவான நன்றிகள்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    இந்த வருடம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் தான் மார்கழிப் பதிவுகளை ஆரம்பித்தேன்..

    நல்லவிதமாக நிறைவடைந்தது இறைவன் கருணையே..

    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..