ஞாயிறு, ஆகஸ்ட் 08, 2021

கயிலாய தரிசனம்

  

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் 
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி அமாவாசை..

மரபு வழிப்
பெருமையைப் பேணும்
இந்துக் குடும்பங்களில்
முன்னோர் வழிபாடுகள்
நிகழ்த்தப்படும் நாள்..

திரு ஐயாறு (காவிரி), திருமறைக்காடு (சமுத்திரம்),
இராமேஸ்வரம் (சமுத்திரம்),
பாபநாசம்(தாமிரபரணி),
பவானி கூடுதுறை (காவிரி) - முதலான திருத்தலங்களில்
முன்னோருக்கான கடமை
நிறைவேற்றப்படும் நாள்..

கொடுந்தொற்றின்
காரணமாக கடந்த
இரண்டு வருடங்களாக
தமிழகம் முழுதும்
திருக்கோயில் சார்ந்த
விசேஷங்கள் எதுவும்
சரிவர நிறைவேறவில்லை..

இதுவும் 
இறைவனின் நாட்டம் என்று
பொறுத்திருப்போம்..

மேலும்
அப்பர் பெருமான்
சிவசக்தி தரிசனம் கண்டு
இன்புற்றதும் 
இந்த நாளில் தான்..

தம்மைத் தரிசிக்க என்று
தள்ளாத வயதில்
உடல் நலிவுற்ற நிலையில்
திருக்கயிலாய மாமலைக்கு
வந்து சேர்ந்த
திருநாவுக்கரசருக்கு
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமாக
யானை, பசு, மான், பன்றி,
மயில், குயில், அன்னம், அன்றில், நாரை, சேவல் -  எனத் 
திருக்காட்சி நல்கினன்..

அந்த வைபவம்
நிகழ்ந்த திருத்தலம்
திரு ஐயாறு..


மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.. (4/3)

- என்னும் திருப்பாடலைச்
சிந்தித்து வந்திப்பதுடன்
திரு ஐயாற்றுத் திருப்பதிகம்
ஒன்றும் இன்றைய பதிவில்..


நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 38

கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (1)

பொடிதனைப் பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (2)
 
உடைதரு கீளும் வைத்தார்
உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே..(3)


தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயன் ஐயாற னாரே.. (4)

வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை  ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார்
 ஐயன் ஐயாற னாரே.. (5)

சங்கணி குழையும் வைத்தார்
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கமது ஓத வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (6)

பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (7)


ஏறுகந் தேற வைத்தார்
இடைமருது இடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (8)

பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (9)

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன் ஐயாற னாரே.. (10)
-: திருச்சிற்றம்பலம் :-
***

திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

  1. ஆடி அமாவாசை சிறப்புப் பதிவு நன்று.  

    பதிலளிநீக்கு
  2. பாடல் சிறப்பு தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  3. தேவாரங்களை பாடி.ஆடி அமாவாசை சிறப்பு தரிசனம் செய்து கொண்டேன் .
    ஓம் நம சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  4. நான்காம் திருமுறைப் பாடல்கள் மிக அருமை. அனுபவித்துப் படித்தேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..