ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

திகழொளி ஞாயிறு - 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

***

அன்னை புற்றுருவாக புன்னை வனத்தினுள் எழுந்த திருத்தலம்.

வேண்டி நின்ற மன்னனுக்காக  - தான் இருக்கும் இடத்தைத் தானே - ஒரு சிறுமியின் வடிவாக வந்து காட்டியருளிய திருத்தலம்.


அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த இளவரசிக்கு மீண்டும் - விழிகள் கிடைக்கப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் திருக்கரங்களால் - ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ பைரவ உபாசகரான மகான் பாடகச்சேரி சுவாமிகள் பலகாலம் தங்கி இருந்த திருத்தலம். 

அவர் திருக்கரங்களால்  நிறைவான அன்ன தானங்கள் வழங்கப்பட்ட திருத்தலம். நோயுற்ற மக்களுக்கு- ஸ்ரீபாடகச்சேரி மகான் செய்த நன்மைகளை நினைவு கூரும் வகையில் அவர் தம்  திருவடிவம் விளங்கும் திருத்தலம். 

ஸ்ரீ முத்துமாரியம்மனுடன் -
ஸ்ரீ விஷ்ணுதுர்கையும்
ஸ்ரீ காளியம்மனும் சந்நிதி கொண்டு விளங்கும் தலம்.


மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம்.

அம்மை நோய் கண்டவர்கள்  பெருமளவில் வந்து தங்கி பிரார்த்தனை செய்து குணமடையப் பெறும் திருத்தலம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் - செய்யப்படும் தைலக்காப்பின் போது உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி  - அம்பாள் -  தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் திருத்தலம்.

கோடையில்- அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக  வியர்வைத் துளிகள் பூக்கும் திருத்தலம்.

ஆறடி உயரத்தில் எழில் தவழும் திருமுகத்துடன் - அம்பாள் அருள் பொழியும் திருத்தலம்.


சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்கும் திருத்தலம். 

நாமெல்லாரும் அறிந்திருக்கும்
அந்தத் தலம் தான் - தஞ்சை புன்னை நல்லூர் திருத்தலம்.

அங்கே - குடிகொண்டு விளங்குபவள்,

மகமாயி என்று மக்களால்
கொண்டாடப்படும் 
ஸ்ரீ முத்து மாரியம்மன்!..

அம்மன் புற்றுருவினள்..
அதனால் நித்ய அபிஷேகங்கள் அனைத்தும் - சந்நிதிக்கு அருகில்
வடக்கு நோக்கி விளங்கும்
ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கே நிகழ்த்தப்படுகின்றன..

இரண்டாம் ராஜ கோபுரத்தின் கீழ் - ஸ்ரீ பூர்ணகலா புஷ்கலா சமேத
ஸ்ரீ ஹரிஹர புத்திர ஸ்வாமியுடன் 
ஸ்ரீ காளியும் வீற்றிருக்கின்றாள்..

கொடிமரத்தின் தென்புறம் மேற்கு முகமாக ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் ஸ்ரீ லாட சன்னாசி, ஸ்ரீ வீரன் - என பரிவார மூர்த்திகள்..

மூன்றாம் திருச்சுற்றில்
ஸ்ரீ விளக்கு நாச்சியார் - மாவிளக்கு
மேடை.. வேம்பு மற்றும் புன்னை 
மரங்களுடன் பழமையான புற்று..

வருடத்தின் ஞாயிற்றுக் கிழமைகள் அனைத்தும் விசேஷங்கள் என்றாலும்
பெருந்திருவிழா நடைபெறும்.. 

பெருந்தொற்றின் பிடியிலான
இக்கால கட்டத்தில் திருவிழா சூழ்நிலைகள் எப்படியோ!?..

இன்று கூட ஏழாண்டுகளுக்கு
முந்தைய பதிவு.. சற்றே மாற்றங்களுடன்..


வல்வினையின் வலைப்பட்டு  - வாடி வந்தோர்க்கும்
தொல்பிழையால்  அலைபட்டுத் - தேடி வந்தோர்க்கும் 
அல்லலுற்று அவதியுற்று  - நாடி வந்தோர்க்கும்
உற்ற துணை ஏதுமின்றி  - ஓடி வந்தோர்க்கும் 

வற்றாது தான்சுரக்கும்
தண்கருணைப் புதுஊற்று!..
வழியென்று தான் காட்டும்
வளர் நிலவின் ஒளிக்கீற்று!..


அவள் -

குடி கெடுக்கும் பகை கெடுத்தாள் 
கூட வரும் பழி கெடுத்தாள்
வினை கெடுத்தாள் நோய் கெடுத்தாள் 
வழி மறிக்கும் தடை கெடுத்தாள்!..

கரு கொடுத்தாள்  உரு கொடுத்தாள்  
ஒலி கொடுத்தாள்  மொழி கொடுத்தாள் 
மனங்கொடுத்தாள் குணம் கொடுத்தாள் 
தனங்கொடுத்தாள் தவம் கொடுத்தாள்

கோடி கோடி நலம் கொடுத்தாள் 
குன்றாத வளங் கொடுத்தாள்
சொல் கொடுத்தாள் பொருள் கொடுத்தாள்  
பொன்றாத புகழ் கொடுத்தாள்

அருள் கொடுத்தாள்  பொருள் கொடுத்தாள்  
ஆயுளையும் தான் கொடுத்தாள்
நெல் கொடுத்தாள்  நீர் கொடுத்தாள்  
நிலையான பெயர் கொடுத்தாள்!..


மீண்டும் நான் பிறப்பெடுத்தால்
மகிழ்ந்தெனக்கு மடி கொடுப்பாள்
மார்மீது சேர்த்தெடுப்பாள்!..
தலை கோதி தமிழ் கொடுப்பாள்!..

''மகனே நீ வாழ்க!..'' என
வாஞ்சையுடன் வார்த்தெடுப்பாள்!.

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. படங்களும், உங்கள் கவிதையும் மிக அருமை.
    ஞாயிறு புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    முன்பு நிறைய தடவை அம்மனை தரிசித்து வாய்ப்பு கிடைத்தது , தரிசனம் செய்தோம்.

    ஆவணி ஞாயிறு அம்மனுக்கு உகந்த நாள். சிறப்பு பதிவு அருமை. ஒரு முறை தங்கபாவாடை தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கு நல்வரவு..
    அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தயவால் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம் கிடைத்தது. கவிதை அருமை! சமையற்றும் மாரியம்மன், நார்த்தாமலை மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், அன்பில் மாரியம்மன் இந்த நான்கு பெரும் சகோதரிகள் என்று கர்ண பரம்பரை கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். மற்ற மூவரை பற்றியும் எழுதுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      மேலும் எழுதச் சொல்லிதிருக்கின்றீர்கள்..
      முயற்சிக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்னையின் அருள் மிகு தரிசனம் மிக சிறப்பு ...

    ஓம் சக்தி ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஓம் சக்தி, ஓம் சக்தி! ஒரே ஒரு முறை போனோம் இந்தக் கோயிலுக்கு. ஆகவே நல்ல தெளிவான நினைவுகள் இல்லை. பானுமதி சொன்ன கர்ணபரம்பரைக் கதை பற்றியும் உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். நல்ல தரிசனம் கிடைத்தது. மனதிற்கு சாந்தம் அளித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. வழக்கம்போல் எளிமையான தமிழில் சிறப்பான அழகு கொஞ்சும் கவிதை! இது ஒரு வரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. நினைவு தெரிந்து ஒருமுறை சென்ற நினைவு.  மறுபடி இன்று தரிசனம் கிடைத்தது. நன்றி.  உங்கள் கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்னை குறித்த சிறப்பான கவிதை. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மிக்க மகிழ்ச்சி! நல்ல இடுக்கை, நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..