இன்று
விடியும் பொழுதிற்குச்
சற்று முன்பாக
(2:30 மணியளவில்)
எனது தாயார்
ஸ்ரீமதி லீலாவதி துரைராஜன் அவர்கள்
சிவபதம் எய்தினார்கள்..
எண்பத்தைந்து வயதினைக்
கடந்த அளவில்
ஒன்றரை மாதத்துக்கு முன்
கடும் உடல் உபாதைக்கு
ஆளானார்கள்..
அப்போது காத்தளித்த இறைவன்
இப்போது தன் நிழலில் சேர்த்துக்
கொண்டான்..
உடல் மிகவும் தளர்ந்திருந்த போதிலும்
மேலதிகத் துன்பம் எதுவுமின்றி
தூக்கத்தில் பிரிந்திருக்கின்றது
உயிர்..
இளைய மகன் உடன் வர
உற்சாகத்துடன் வாக்களித்துத்
திரும்பியிருக்கின்றார்கள்..
அம்மாவை நல்லபடியாகக்
கவனித்துக் கொள்ளும் பேறு
எனது இளைய சகோதரனாகிய
மனோகரனுக்குக்
கிட்டியிருக்கின்றது..
மூன்று வாரங்களுக்கு முன்
இளைய மகனின் மகள்
(இளைய பேத்தி) சடங்காகிய
மகிழ்ச்சி அம்மாவுக்கு..
அம்மா உடல் நலக் குறைவுடன் இருந்தபோது காணொளியில்
பேசினேன்..
தவிரவும்
என்னுடன் பேசும் பொழுதெல்லாம்
கண் கலங்குவார்கள்..
விதியின் கைப் பாவையாகி விட்ட
என்னால் தாயின்
கண்ணீரைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை..
மறுபடியும் பேசியிருக்கலாம்
என்று பேதை மனம் இப்போது மருகுகின்றது..
சீக்கிரம் வந்து விடு செல்லையா..
என்று கலங்கினார்கள்...
அபுதாபியில் இருக்கும்
எனது மருமகன், மகள்
குழந்தைகளைக்
காண்பதற்குப்
பிரியப்பட்டார்கள்..
என்ன செய்வது?..
நினைப்பதெல்லாம்
நடந்து விடுவதில்லையே..
ஆயினும்
என் தாயின் திருவடி
என்றும் என் நெஞ்சில்
நிலைத்திருக்கும்..
ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக்
கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி..
-: பட்டினத்தடிகள் :-
இறைவன் திருவடிகளில்
என் அன்னையின் ஆன்மா
இனிதிருக்கட்டும்..
ஆனாலும்
மீண்டும் நான் பிறக்கும் போது
என் அன்னையே என்னை
மடி தாங்குவாள்..
இவ்வரத்தை
நல்க வேணும்
இறைவா..
எம்பெருமானே!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ