சனி, மே 09, 2020

ஏழையேன் என்செய்கேனே

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில் 
அரங்க தரிசனம்



தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த
திருமாலை

அதில் இரண்டாம் திருமொழியின் சில திருப்பாசுரங்களும்
மூன்றாம் திருமொழி முழுமையும்..

இது
பூமாலையா பொன்மாலையா 
புகழ் மாலையா!..
ஏழையேன் அறிகிலேன்!... 
***

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே.. 873

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே.. 890


கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுப் பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன்ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்தவாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென்று உணரமாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் காலத்தைக் கழிக்கின்றாயே.. 895


குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்தனல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன்
அளிப்பதெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகருளானே.. 896

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கனார்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றினேனே.. 897


குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலே
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய்யாதே அளியத்தேன் அயர்கின்றேனே.. 898

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி
செம்புலாலுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பரம் ஆயதுண்டே நாய்களோம் சிறுமையோரா
எம்பிராற் காட்செய்யாதே எஞ்செய்வான் தோன்றினேனே.. 899


ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனேஎன் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே.. 900

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திருஅரங்கா
எனக்கினி கதி என்சொல்லாய் என்னைஆளுடைகோவே.. 901

தவத்துளார் தம்மில் அல்லேன் தனம்படைத் தாரில்அல்லேன்
உவர்த்தநீர் போல என்றன் உற்றவர்க் கொன்றும் அல்லேன்
துவர்த்தசெவ் வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே.. 902


ஆர்த்து வண்டலம்பும் சோலை அணிதிரு அரங்கந்தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே.. 903

மெய்யெலாம் போகவிட்டு விரிகுழலாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்துநின்றேன்
ஐயனே அரங்கனேஉன் அருளென்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே.. 904

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. ஓம் நமோ நாராயணாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  2. இனிமையான பாசிரங்கள். அரங்கனின் அருட்பார்வை அனைவர் மீதும் பரவட்டும்

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாசுரங்கள். படங்கள் பகிர்வுக்கு நன்றி. அம்பேரிக்காக் கிளம்பும் முன்னரும் அரங்கனைக் காணப் போக முடியவில்லை. இப்போதும் வந்து 3 மாதங்கள் ஆகப் போகின்றன. இன்னமும் அரங்கனைக் காணவில்லை. இங்கே உங்கள் பகிர்வின் மூலம் தரிசனம் கிட்டிற்று. முகநூலிலும் ஸ்ரீரங்கம் குழுமத்தினர் மூலம் அவ்வப்போது அரங்கன் தரிசனம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரங்கன் அருள் தங்களுக்கு எப்போதும் உண்டு...

      அனைத்தும் நலமாக நடக்கும்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  4. அருமையான பாசுரங்கள்! ரொம்ப நாட்கள் கழித்து இவற்றை மீண்டும் படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  5. "ஏழையேன் என் செய்கேனே" தலைப்பை மட்டும் படித்து, 'ஏழையேன் ஏழையேனே' என்றல்லவா வரும். இவர் எதைப்பற்றி இடுகை எழுதியிருக்கார் என்று பார்க்க வந்தேன். திருமாலையால் கட்டிப்போட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. "மூன்றாம் திருமொழி முழுமையும்" என்று தலைப்பில் உள்ளதே.

    அணிலம் - அணிலும்

    இந்தப் பாசுரங்களில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், அந்த பக்தி என்ற உயர் நிலையிலிருப்பவர், தன்னைப் பற்றி விளித்துக்கொண்டதை நாம் படிக்கும்போது, நம் தாழ் நிலைமை தெரிவரும். அவர் தன்னைப்பற்றி (அல்லது பக்தனைப் பற்றி),

    'குளித்து மூன்று அனலை ஓம்பும்-அக்னி ஹோத்திரம் செய்யும், குறிகொள் அந்தணமை தன்னை-அந்த உயர் நிலையை, ஒளித்திட்டேன் - விட்டுவிட்டேன்'

    உன் பொன்னடியைச் சரணடைவதில்லை, உன் திருக்குணத்தைப் பற்றிப் பேசுவதில்லை, உன் மீது அன்பு கொண்டு நெஞ்சம் உருகுவதில்லை, மரங்களைப் போன்ற வலிய நெஞ்சம் கொண்டுள்ளேன், வஞ்சமுடையவனானேன், மனத்தில் தூய்மை இல்லை, வாயில் இன்சொல் வருவதில்லை, கோபத்தில் என்னைச் சேர்ந்தவர்களிடம் தீயைப் போன்று சுடுசொல் பேசுகிறேன், தவம் செய்ததில்லை, பணம் உடையவனும் இல்லை, உப்பு நீர் போல என்னைச் சேர்ந்தவர்களுக்கு உபயோகம் இல்லாதவனாக இருக்கிறேன் என்று அவர் சொல்லும் குணங்கள் நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருப்பதைக் காண்கிறோம். அப்படிப்பட்டவர்களும் அரங்கனைச் சரண் அடைந்தால், நல் கதி பெற முடியும் என்று பாசுரம் பேசுகிறது.

    திருமாலைக்கு உருகார் ஒரு மாலைக்கும் உருகார்.

    பதிலளிநீக்கு
  7. திருப்பாட்டு பாடி மகிழ்ந்தேன்.
    அரங்கன் அனைவரையும் காக்க வேண்டும்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. அரங்கன் அருள் உமக்குண்டு

    பதிலளிநீக்கு
  9. இந்த உலகம் கொரோனாவால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து மீள முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனைப் போல் போராடிக் கொண்டிருக்கிறது. முதலையை அழித்து, கஜேந்திரனை காப்பாற்றியது  போல் திருமால்தான் இவ்வுலகை காக்க வேண்டும். 

    பதிலளிநீக்கு
  10. ஓம் நமோ நாராயணாய....

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  11. தொண்டரடிப்பொடியாழ்வார் தரிசனம் அழகான அனுபவம், அருமையான படங்களுடன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..