செவ்வாய், மே 05, 2020

சிவமே சரணம் 18

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருஞானசம்பந்தப்பெருமான்
அருளிச் செய்த திருப்பதிகம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 123

திருத்தலம் - திருவலிவலம்
இந்நாளில் வலிவலம்

திருஆரூர் - கீவளூர் - திருத்துறைப்பூண்டி
சாலையில் அமைந்துள்ளது வலிவலம்...



இறைவன் - வலிவல நாதர், மனத்துணைநாதர்
அம்பிகை - மாழையொண்கண்ணி

தீர்த்தம் - காரண கங்கை
தலவிருட்சம் - புன்னை

தளர்வுற்ற மனங்களின் துயரினைத் தீர்த்து
என்றும் துணையாக வருவதால் இறைவனுக்கு
மனத்துணை நாதர் என்பது திருப்பெயர்...


மாழையொண்கண்ணி எனில்
மாவடுபோல் ஒளி பொருந்திய 
கண்களை உடையவள் அம்பிகை..

காரணர் என்ற முனிவருக்காக
சிவ வழிபாட்டின்போது
கங்கை ஊற்றெடுத்ததால்
காரண கங்கை எனும் பெயராயிற்று..



வலியன் எனப்படும் கரிக்குருவி
வலஞ்செய்து வணங்கியதால்
வலிவலம் என்பது தலப்பெயர்..

இந்த வலியனைத் தான்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்
ஆனைச்சாத்தன் என்றழைக்கின்றாள்...


பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு உடையவன் விரைமலர்
மாவியல் பொழிவலி வலம்உறை இறையே.. 1

இட்டம தமர்பொடி இசைதலின் அசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு உடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலம்உறை இறையே.. 2

உருமலி கடல்கடை உழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் இடைதரு
மருவலி பொழில்வலி வலம்உறை இறையே.. 3


அனல்நிகர் சடையழல் அவியுற எனவரு
புனல்நிகழ் அதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரும் இதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலம்உறை இறையே.. 4




பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.. 5

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுஅரு ளினன்எழில்
வரைதிகழ் மதில்வலி வலம்உறை இறையே.. 6

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழின்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலம்உறை இறையே.. 7

ஸ்ரீ சந்நிதி விநாயகர் 
இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின நகநெதி
இரவண நிகர்வலி வலம்உறை இறையே.. 8

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழரி யடிமுடி
தானணை யாவுரு உடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலம்உறை இறையே.. 9

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை உருவினன்
மலைமதி மதில்வலி வலமுறை இறையே.. 10


மன்னிய வலிவல நகருறை இறைவனை
இன்னியல் கழுமல நகரிறை எழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

  1. திருச்சிற்றம்பலம். சிவம் நம்மைக் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      இன்னும் எபியில் பதிவு வெளியாக வில்லையா?....

      நீக்கு
  2. நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  3. வலி வல நாதர் வீட்டிலேயே இருக்கும் மக்களின் மனதளர்ச்சியை போக்க வேண்டும்.

    படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. சில விஷயங்கள் நம் கையை மீறும்போது ப்டைத்தவனை நினைப்பது ஆறுதல் தரலாம்

    பதிலளிநீக்கு
  5. நம்மாளோட படங்களும் மேலே உள்ள ஈசன், அம்பிகை படங்களும் தவிர்த்து மற்றவை தெரியலை. வலிவலம் போனோம்னு நினைக்கிறேன். கீவளூர் போனோம். அஞ்சுவட்டத்து அம்மனைப் பார்த்திருக்கோம். வலிவலமும் போயிருக்கணும். நினைவில் இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
  6. அப்பாடா! ஒரு வழியாப் படங்கள் வந்தன. கரிக்குருவியையும் பார்த்துக்கொண்டேன். ராஜஸ்தான் குடியிருப்பில் தினம் தினம் கடைசியாகக் கூட்டிற்கு வரும். காலை சீக்கிரமாய் எழுந்துக்கும். சின்ன வட்டமான ஓட்டை அதன் வழியாய்ப் போயிட்டு வரும். உள்ளே மூச்சு விடமுடியுமா அதுக்கு எனக் கவலைப்படுவேன்.

    பதிலளிநீக்கு
  7. ஓம் நமசிவாய நலமே விளைக...

    பதிலளிநீக்கு
  8. மாழையொண் கண்ணி - பெயரின் அரத்தம், மீனைப் போன்ற கண்கள் உடையவள் என்று இருக்குமா? அம்பிகையின் பெயர் அங்கயல்கண்ணி (அம் கயல் கண்ணி), வாளையவக்கண்ணி (வாளை-மீன் அவக் கண்ணி) என்றெல்லாம் படிக்கும்போது அதுதான் அர்த்தம் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. மாழை என்றால் மாவடுவா?

    அந்தக் காலத்தில் இறைவன் இறைவி பெயர் வைப்பதில் தமிழ்ப் புலவர்களின் பங்கு இருந்துள்ளது தெரிகிறது. எவ்வளவு அருமையான தமிழ்ச் சொற்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..