வெள்ளி, ஏப்ரல் 03, 2020

ஜெயஜெய சங்கரி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
நோயும் பிணியும் நீங்கிட வேண்டும்..
***
இன்று
துர்க்கை சித்தர் அருளிய
துக்க நிவாரண அஷ்டகம்... 
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் - காஞ்சி 
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்ட நல்கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.. 

ஸ்ரீ மீனாம்பிகை - மதுரையம்பதி 
கானுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வந்திடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ விசாலாக்ஷி - காசியம்பதி 
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எங்குலந் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ காந்திமதி - நெல்லை 
தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீவருவாய்
கணகண கங்கண கதிரொளி வீசிட கண்மணி நீவருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிட பண்மணி நீவருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ கன்யாகுமரி 
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திட சமரது செய்தநற் சக்தியெனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ நீலாயதாக்ஷி - நாகப்பட்டினம்
எண்ணியபடி நீயருளிட வருவாய் எங்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ ஸ்வர்ணகாமாக்ஷி - தஞ்சை 
இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமதைத் தந்திடுவாய்
படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - பட்டீஸ்வரம் 
ஜெயஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீ தேவி
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.

    நலமே விளையட்டும்.

    அன்னையின் பூரண அருள் அனைவரும் அடைந்திடட்டும்...

    பதிலளிநீக்கு
  2. ஓம் சக்தி ஓம் சக்தி
    வாழ்க வையகம் இறையருளால்...

    பதிலளிநீக்கு
  3. இதைக் கேட்ட நினைவு உள்ளது. ஆனால் யார் பாடியது என்று நினைவில் இல்லை. வீட்டருகில் ஆடி மாதம் கோயிலில் போட்ட பாட்டுகளில் கேட்ட நினைவு.

    ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் என்ற பாடல் போன்று இதையும் அதே மெட்டில் நினைவு. இப்போது பாடிப் பார்த்த போதும் அதே மெட்டு டக்குனு பாட வருகிறது.

    நலமே விளைய வேண்டும். உலகம் முழுவதும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அருட்பெருஞ்சோதி...
    தனிப்பெரும் கருணை...

    பதிலளிநீக்கு
  5. அனனை காக்க வேண்டும்.
    ராகுகாலத்தில் பாடும் பாடல்.
    இன்றும் பாடினேன்.
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று ஆக அந்த அன்னையின் அருளே தேவை. அவளைச் சரண் அடைவோம்.

    பதிலளிநீக்கு
  7. துக்கங்களைக் களையட்டும் துர்க்கை அம்மன். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..